இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Sep 3, 2010

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாத........

வெளிப்படையாக தர்மம் செய்வதைவிட மறைத்து செய்வது மிகச்சிறந்தது!

“தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 2:271)

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாத அளவிற்கு இரகசியமாக கொடுத்தால் மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும்!

நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தன்னுடைய நிழலில் அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள்:
1) நீதிமிக்க அரசன்.
2) அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன்.
3) பள்ளிவாசல்களுடன் பிணைக்கப்பட்ட இதயத்தை உடையவன்.
4) அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே ஒன்றிணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர்,
5) அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் தன்னை (தவறுக்கு) அழைத்தபோது ‘நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்’ எனக் கூறியவன்.
6) தன்னுடைய இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாக தர்மம் செய்பவன்,
7) தனித்திருந்து அல்லாஹ்வை நினைத்து கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடித்தவன் ஆகியோராவர்.

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி

செய்த உபகாரத்தை சொல்லிக் காட்டுவதால் நன்மைகள் பாழாகிவிடும்!

அல்லாஹ் கூறுகிறான்:

“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை” (அல்-குர்ஆன் 2:264)

சொர்க்கம் நுழையாத மூவர்!

“சதி செய்பவனும், உலோபியும் செய்த தர்மங்களைச் சொல்லிக்காட்டுபவனும் சுவர்க்கம் நுழையமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்” (ஆதாரம் : நஸயி, திர்மிதி)

மேற்கண்டவைகளிலிருந்து பெறும் படிப்பினைகள்:

தான தர்மங்களை வெளிப்படையாக செய்தாலும் நல்லது! ஆனால் மறைத்து செய்வது அதை விடச் சிறந்தது
வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாத அளவிற்கு இரகசியமாக தர்மம் செய்தால் மஹ்ஷரில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும்.
செய்த தர்மத்தை அல்லது உதவியை சொல்லிக்காட்டி நிந்தனை செய்தால் நன்மைகள் எல்லாம் பாழாகிவிடும்.

சுவன அழைப்பு

அன்பிற்குரியவர்களே! சொற்ப வாழ்நாளைப் பெற்ற இந்த உம்மத்தினர் குறுகிய நேரத்தில் அதிக நன்மைகளை அடையும் பொருட்டு நம் தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பல வழிகளை நமக்கு காட்டித் தந்துள்ளார்கள், அவைகளுள் அன்னாரின் திருவாயினால் மலர்ந்தருளப்பட்ட சில முத்துக்களை இச்சிறிய கையேட்டில் உங்களுக்கு வழங்குவதில் நாம் பெருமகிழ்ச்சியடைவதோடு, இதைப் படித்து பயன்பெறுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .நன்மைகள் செய்து நலம்பெற வாழ்த்துக்கள் (மொழிப்பெயர்ப்பாளார்).


1-அல்லாஹுத்தஆலாவை நெருங்கி இருக்க வேண்டுமா?
ஓர் அடியான், எஜமானன் அல்லாஹ்வை மிகவும் நெருங்கி இருப்பது அவன் சுஜுதில் இருக்கும்பொழுதே! ஆகவே அதில் அதிகம் (துஆ) பிரார்த்தனை செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினானர்கள் (முஸ்லிம்).

2-புனித ஹஜ்ஜை நிறைவேற்றிய நன்மையைப் பெறவேண்டுமா?
ரமழான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்வதற்கு சமமாகும், அல்லது என்னுடன் ஹஜ் செய்வதற்கு சமமாகும் என நபி (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள் (புகாரி, முஸ்லிம்).

3-சுவனத்தில் ஒரு மாளிகை வேண்டுமா?
அல்லாஹ்விற்காக பள்ளிவாயிலொன்றை கட்டுபவருக்கு சுவனத்தில் அதுபோன்றதை அல்லாஹ் கட்டுவான் என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (முஸ்லிம்).

4-அல்லாஹ்வின் திருப்பொருத்தம் பெறவேண்டுமா?
ஒரு பிடி சாப்பிட்டோ அல்லது ஒரு மிடர் தண்ணீர் குடித்தோ அதற்காக அல்லாஹ்வைப் புகழக்கூடிய அடியானை அல்லாஹ் பொருந்திக்கொள்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்).

5-உனது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமா?
பாங்கு, இகாமத்திற்கிடையில் கேட்கப்படும் (துஆ) பிரார்த்தனை மறுக்கப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (அபூதாவுத்).

6-வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை உமக்கு எழுதப்படவேண்டுமா?
ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் நோற்பது வருடம் முழுவதும் நோன்பு நோற்பது போன்றதாகும் என நபி (ஸல்) கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்).

7-மலை போன்ற நன்மைகள் வேண்டுமா?
மரணித்தவருக்காக தொழுகை நடாத்தும் வரை, அதன் நல்லடக்கத்தில் கலந்து கொள்பவருக்கு ஒரு கீராத் (நன்மை) உண்டு. மேலும் அதை அடக்கம் செய்யும் வரை கலந்துகொள்பவருக்கு இரண்டு கீராத் (நன்மை) உண்டு. அல்லாஹ்வின் தூதரே இரண்டு கீராத் என்றால் என்ன? என்று வினவப்பட்டது, பிரமாண்டமான இரு மலைகள் போன்ற (நன்மைகள்) என்று கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்).

8-சுவனத்தில் பெருமானார் (ஸல்) அவர்களுடன் ஒன்றாயிருக்க வேண்டுமா?
அநாதையை (வளர்க்க) பொறுப்பேற்பவர் சுவனத்தில் என்னுடன் ஒன்றாயிருப்பார் எனக்கூறிய நபி (ஸல்) அவர்கள் தனது சுட்டுவிரலுடன் நடுவிரலையும் இணைத்துக் காட்டினார்கள் (புகாரி).

9-அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் அல்லது நோன்பிருப்பவர் அல்லது நின்று வணங்குபவர் போன்றோரின் நன்மை வேண்டுமா?
ஏழை, விதவை ஆகியோருக்காக உழைப்பவர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் போன்றவறாவார். மேலும் சடைவின்றி நின்று வணங்கி தொடர்ந்து நோன்பிருப்பவர் போன்றுமாவார் என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்).

10-சுவனத்தில் நீ நுழைவதை பொருமானார் (ஸல்) அவர்கள் பொறுப்பேற்க வேண்டுமா?
இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதை(நாவை)யும் இரு கால்களுக்கிடையிலுள்ளதை(அபத்தை)யும் (தீய செயல்களை விட்டும்) பாதுகாக்க பொறுப்பேற்பவர் சுவனம் செல்ல நான் பொறுப்பேற்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்).

11-மரணத்தின் பின்பும் உனது நல்லமல் தொடர்ந்திருக்க வேண்டுமா?
மனிதன் மரணித்ததும் எல்லா நற்கருமங்களும் நின்றுவிடும் மூன்று காரியங்களைத் தவிர எனக்கூறிய நபி (ஸல்) அவர்கள் (ஸதகத்துல் ஜாரியா எனும்) நன்மை தொடர்ந்திருக்கும் தர்மம், பிரயோஜனமளிக்கும் கல்வி, மரணித்தவருக்காக பிரார்த்திக்கும் பிள்ளை ஆகியவற்றை குறிப்பிட்டார்கள் (முஸ்லிம்).

12-சுவனப் பொக்கிஷங்களில் ஒன்றை அடைய விரும்புகிறாயா?
லாஹவ்ல வலாகுவ்வத இல்லாபில்லாஹ் என்பது சுவனப் பொக்கிஷங்களில் ஒன்றாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்).

13-இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை வேண்டுமா?
இஷாத் தொழுகைய ஜமாஅத்துடன் தொழுதவர், பாதி இரவு நின்று வணங்கியவர் போன்றவராவார். மேலும் சுப்ஹுத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதவர் இரவு முழுவதும் நின்று வணங்கியவர் போன்றவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்).

14-ஒரு நிமிடத்தில் அல்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிய நன்மை வேண்டுமா?
குல்ஹுவல்லாஹு அஹத் எனும் சூரா அல்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு ஈடாகுமென நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் (முஸ்லிம்).

15-மீஸானில் (தராசில்) உனது நன்மைப் பகுதி கனக்க வேண்டுமா?
ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹீ ஸுப்ஹானல்லாஹில் அழீம் எனும் இரு வார்த்தைகளும் அல்லாஹ்விற்கு மிக விருப்பத்திற்குரியனவாகவும், நாவிற்கு இலகுவானவையாகவும், மீஸானில் (தராசில்) கனமானவையாகவும் இருக்கின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி).

16-உனது உணவில் அபிவிருத்தி ஏற்படவும், வாழ்நாள் நீடிக்கவும் வேண்டுமா?
உணவில் அபிவிருத்தி ஏற்படவும் வாழ்நாள் நீடிக்கவும் விரும்புபவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழவும் என நபி (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள் (புகாரி).

17-உன்னை சந்திப்பதை அல்லாஹ் விரும்ப வேண்டுமா?
எவர் அல்லஹ்வை சந்திக்க விரும்புகிறாரோ அவரை அல்லாஹ்வும் சந்திக்க விரும்புகிறான் (புகாரி).

18-அல்லாஹ் உன்னை பாதுகாக்க வேண்டுமா?
ஸுப்ஹுத் தொழுகையை நிறைவேற்றியவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கின்றார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்).

19-அதிகமாக இருந்தாலும் உனது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா?
ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹீ என ஒரு நாளில் நூறு விடுத்தம் கூறுபவரின் பாவங்கள் கடல் நுரையளவு (அதிகமாக) இருப்பினும் அவை மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

20-உனக்கும், நரகத்திற்குமிடையில் எழுபதாண்டுகள் தூரம் (இடைவெளி) ஏற்பட வேண்டுமா?
அல்லாஹ்வின் பாதையில் ஒருநாள் நோன்பிருப்பவரின் முகத்தை எழுபது ஆண்டுகள் தூரத்திற்கு நரகைவிட்டும் அல்லாஹ் தூரப்படுத்துவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்).

21-அல்லாஹுத்தஆலா உன்மீது ஸலவாத்து சொல்ல வேண்டுமா?
என்மீது ஒருமுறை ஸலவாத்து கூறுபவர் மீது அல்லாஹ் பத்துமுறை ஸலவாத்து கூறுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினானர்கள் (முஸ்லிம்).

22-அல்லாஹுத்தஆலா உன்னை மேன்மைப்படுத்த வேண்டுமா?
அல்லாஹ்விற்காக பணிவுடன் நடப்பவரை அல்லாஹ் மேன்மைப்படுத்துவான் என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (முஸ்லிம்).

Thanks:-
தயாரிப்பு: ஈத் அல் அனஸி
வெளியீடு: ரவ்ழா தஃவா நிலையம், ரியாத்

அப்துல் நாசர் மதானி - அதிகாரத்தின் இரை


இந்திய தேசத்தின் விடுதலைக்காக, தன் தேகத்தையே அர்பணித்த காந்தியடிகள் கொடூரமாக கொல்லப்பட்ட நிகழ்வுதான, விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பயங்கரவாத நிகழ்வு. மூச்சுக்கு ஒரு முறை ''ஹே ராம்'' என்று உச்சரித்து, கடைசி வரை தீவிர இந்து மதப் பற்றாளராக வாழ்ந்த காந்தியடிகளை கொன்றொழித்த பயங்கரவாதத்தை செய்தது முஸ்லிம்கள் அல்ல.. ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

பன்மைத் தன்மை உடைய இந்தியத் திருநாட்டில், சமயச்சார்பின்மை என்னும் தத்துவம் தளைக்க தன் இறுதி மூச்சு உள்ள வரைப் போராடிய ஜவஹர்லால் நேருவின், அரசியல் வாரிசான இந்திரா காந்தியை சுட்டுப் பொசுக்கிய பயங்கரவாதத்தில் முஸ்லிம்களுக்குத் தொடர்பில்லை., ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

இந்திரா காந்தியின் அருமைப் புதல்வரும், இந்தியாவின் இளம் பிரதமருமான ராஜீவ் காந்தியை சிதறடித்த பயங்கரவாதத்திலும் முஸ்லிம்களுக்கு சம்மந்தமில்லை. ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

இந்துக்களின், கிறிஸ்தவர்களின், சீக்கியர்களின், பௌத்தர்களின் இன்ன பிற சமூகங்களின் வழிபாட்டுத் தலங்களையோ, வரலாற்றுச் சின்னங்களையோ, இடித்துத் தகர்த்த பயங்கரவாதத்தை, இந்தியாவின் எந்த ஒரு மூலையிலும் எந்த ஒரு முஸ்லிமும் செய்ததில்லை., ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

சுதந்திர இந்தியாவில் நடை பெற்ற மிகப்பெரும் வகுப்புக் கலவரங்கள், இனப்படுகொலைகள் எல்லாவற்றிலும் உயிரை இழந்து, உடைமை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாய் அல்லல்பட்டபோதும், உணர்வை இழக்காமல் உரிமை கேட்டதனால்., முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

இரத்தமும் சதையுமாக இந்திய மண்ணை நேசித்த முஸ்லிம்களின், இரத்தம் குடித்து தன் சதை வளர்க்கும் இழி செயலை, இந்தியாவின் அதிகார வர்க்கமும், ஊடகங்களும் வெளிப்படையாக செய்து வருகின்றன. முஸ்லிம்களை குதறுவதையே முழு நேர செயல் திட்டமாகக் கொண்டு இயங்கும் இந்துத்துவ சக்திகளுக்கு, ஜனநாயகத்தின் அத்தனைத் தூண்களும் அரணாய் நிற்கின்றன. நாடு முழுவதும் தொடரும் இந்த அக்கிரமத்திற்கு இரையாகிப் போன இரத்த சாட்சியாக இப்போது பெங்களூர் சிறைக் கொட்டடியில் அடைபட்டுக் கிடக்கிறார் அப்துல் நாசர் மதானி.

நாம் வாழும் காலத்தில், நம் கண் முன்னாலேயே ஒரு மிகப்பெரும் அக்கிரமம் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. சட்டம் அதன் கயமையைச் செய்கிறது. நீதிக்கு கல்லறை கட்டப்படுகிறது, எளிய மனிதர்களைச் சூறையாடும் அரச பயங்கரவாதம் தலை விரித்தாடுகிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இருபது சதவீதத்துக்கும் அதிகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் எழுச்சிக்காகவும், மறு மலர்ச்சிக்காகவும் போராடிய ஒற்றைக் காரணத்திற்காக ஒரு அப்பாவி மனிதரை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன இந்தியாவின் அரசுகள்.

சட்டம், நீதி, ஜனநாயகம், இறையாண்மை என்றெல்லாம் வாய்கிழியப் பேசப்படுகின்ற ஒரு மண்ணில், அப்பட்டமாக மீறப் படுகின்றன மனித உரிமைகள். மாந்த நேயத்திற்கான அத்தனை இலக்கணங்களும் குழி தோண்டிப் புதைக்கப் படுகின்றன. ஜனநாயகத்தின் தூண்கள் அனைத்தும் ஈரமற்றப் பாறையாய் மாறி வருகின்றன. இதற்குப் பிறகும் சட்டம் பற்றியும், நீதி பற்றியும், ஜனநாயகத்தின் மாண்பைப் பற்றியும் பிதற்றுபவர்களை காணும்போது கடும் எரிச்சலும், கோபமும் தான் வருகிறது.

1992 டிசம்பர் 6 - இல் பாபர் மஸ்ஜிதை இடித்தார்கள். 450 ஆண்டு கால வரலாற்றுச் சின்னத்தை, முஸ்லிம்களின் புனிதமிக்க வழிபாட்டுத் தலத்தை அநீதியான முறையில் தகர்த்து எறிந்தார்கள். எப்படியாவது தங்களின் பள்ளிவாசல் காப்பாற்றப்பட்டு விடும் என்று கடைசி வரை நம்பியிருந்த முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்டார்கள். இந்த நாட்டின் மதிப்பு மிகுந்த நீதிமன்றத்தையும், ராணுவத்தையும், போலீசையும், ஓட்டுப் பொறுக்கி அரசியல் வாதிகளையும் நம்பி, நம்பி ஏமாந்து போனது முஸ்லிம் சமூகம்.

அவநம்பிக்கை மிகுந்த நிலையில், தமது இருப்பு குறித்த பாதுகாப்பின்மையும், எதிர்காலம் குறித்த அச்சமும் முஸ்லிம்களை வாட்டத் தொடங்கியது. தமக்கான பாதுகாப்பை தாமே உறுதி செய்து கொள்ளும் வகையில் முஸ்லிம் சமூகத்தின் உள்ளிருந்து உரிமைக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. அப்படி நாடு முழுவதும், ஜனநாயகப் பாதையில் நின்று உரிமை கேட்பதற்காக வெடித்து முளைத்த விதைகளில் ஒருவர்தான் அப்துல் நாசர் மதானி.

அடக்குமுறைகளுக்கு எதிரான கர்ஜனை, எவருக்கும் எதற்கும் அடங்காத கம்பீரம், நெருப்பை உமிழும் உரை வீச்சு, சமுதாய மறுமலர்ச்சியே உயிர் மூச்சு என்று தனிப்பெரும் அடையாளத்துடன் கேரள அரசியல் வானில் வலம் வந்தவர் அவர். அதிகாரத்தை நோக்கிய உண்மையின் குரலாக, ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்தவர் அவர். கொள்கைச் சமரசமற்ற அவரது அரசியல் நிலைப்பாடுகளும், இந்துத்துவ எதிர்ப்பில் அவர் காட்டிய உறுதிப்பாடும்தான் அவரை இன்று இந்த நிலைக்குத் தள்ளி இருக்கிறது.

கேரளாவின் கொல்லம் மாவட்டம் சாஸ்தான் கோட்டையைச் சார்ந்த அப்துஸ் சமத் மாஸ்டர், அஸ்மா பீவி தம்பதியருக்கு 1965 ஜனவரி 18 - இல், மூத்த மகனாக பிறந்தார் மதானி. பள்ளித் தலைமை ஆசிரியரான மதானியின் தந்தை, அவரை மார்க்க அறிவும் நல்லொழுக்கமும் உடைய பிள்ளையாக வளர்த்து எடுத்தார். பள்ளிக் கல்விக்குப் பின் கொல்லத்தில் உள்ள 'மஅதனுல் உலூம்' அரபிக் கல்லூரியில் இணைந்து இஸ்லாமிய மார்க்க அறிஞராக பரிணாமம் பெற்றார் மதானி. அந்தக் கல்லூரியில் வழங்கப்பட்ட 'மஅதனி' என்ற பட்டமே பின்னாளில் அவரது அடையாளத்துக்குரிய பெயராக மாறிப் போனது.

இளம் மார்க்கப் பிரச்சாரகராக தன் பயணத்தைத் தொடங்கிய மதானி, அனல் பறக்கும் உரை வீச்சுக்களால் அனைவரையும் ஈர்த்தார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதியது. கேரளாவின் சொற்பொழிவு மேடைகளில் தவிர்க்க முடியாத தனிப்பெரும் பேச்சாளர் ஆனார் மதானி. 1990 களில் இந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு அரசியல் நிகழ்வுகள் மதானியைப் பாதித்தது. மண்டல் கமிசன் அறிக்கைக்கு நேர்ந்த கதியும், அத்வானியின் தலைமையில் அரங்கேறிய இந்துத்துவ எழுச்சியும், முஸ்லிம்களை அச்சுறுத்தும் ஆர். எஸ்.எஸ் கும்பலின் தீவிரவாத நடவடிக்கையும் கண்டு கொதித்து எழுந்தார் மதானி.

ஆர்.எஸ்.எஸ்.க்கு அரசியல் தளத்தில் நின்று பதிலடி கொடுக்க ஐ.எஸ்.எஸ். [இஸ்லாமிக் சேவா சங்] என்ற அமைப்பை, 1990 ஆம் ஆண்டு தொடங்கினார். 1992 டிசம்பர் 6 - இல் பாபர் மஸ்ஜித் இடிக்கப் பட்டபோது மதானியின் ஐ.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கையைக் கண்டித்து சூறாவளியாய் சுழன்றார் மதானி. பாபர் மஸ்ஜிதை இடித்த பயங்கரவாதிகளையும், அதற்குத் துணை நின்ற காங்கிரசையும் நெருப்பு உரைகளால் காய்ச்சி எடுத்தார்.

மதானியின் உரை வீச்சில் பொசுங்கிப்போன இந்துத்துவ சக்திகள், அவரை நேர்மையாக எதிர்கொள்ள முடியாமல் தீர்த்துக்கட்டும் சதியில் இறங்கினர். ஆதரவற்ற அனாதைக் குழந்தைகளை அரவணைக்கும் வகையில் அன்வார்சேரியில் மதானி உருவாக்கிய ஜாமியா அன்வார் என்னும் கலாசாலையில் இருந்து இரவு அவர் வெளியே வரும்போது, ஆர். எஸ்.எஸ் கும்பல் அவர் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியது. 1992 இல் நடைபெற்ற அந்த தாக்குதலில் தனது ஒற்றைக் காலை இழந்து ஊனமுற்ற மதானி, அதன் பின்னர் சக்கர நாற்காலியில் தவழ்ந்து கொண்டே சரித்திரம் படைத்தார்.

இந்தியச் சூழலில் முஸ்லிம்கள் தனித்து நின்று போராடுவதன் மூலம் இலக்கை அடைய முடியாது என்ற உண்மையை உணrந்து தெளிந்த மதானி, 1993 இல் மக்கள் ஜனநாயகக் கட்சி [PDP] என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தாழ்த்தப்பட்ட தலித் மக்களும், ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களும் ஓரணியில் ஒன்றிணைந்து அரசியல் சக்தியாக எழுச்சி பெறும் வியூகத்தை வகுத்தார். தலித் சமூகத்தை சார்ந்த ஒருவரை கேரளாவின் முதலமைச்சராக மாற்றியே தீருவேன் என்று சூளுரைத்தார். குருவாயூர், ஒற்றப்பாலம், திரூரங்காடி இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு கேரளாவின் mainstream அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்தார்.

முஸ்லிம்களோடு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும் அணி திரட்டும் மதானியின் தொலை நோக்குப் பார்வையைக் கண்டு கேரளாவின் அரசியல் கட்சிகளுக்கு நடுக்கம் வந்தது. அரசியல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்த மதானி 1998 மார்ச் 31 - அன்றுகோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

மதானி கோவை சிறையில் இருந்தபோது அவர் அனுபவித்த ரணங்கள் வார்த்தைகளில் அடங்காதவை. விசாரணைக் கைதியாக சிறையில் பூட்டப்பட்டு கசக்கி எறியப்பட்டார். 105 கிலோ எடை கொண்ட கனத்த தேகத்துடன், 33 வயதே நிரம்பிய துடிப்பு மிக்க இளைஞராக சிறைக்குச் சென்ற அவர் அதிகாரத்தின் கொடும் பசிக்கு இரையானார். நாளாக நாளாக அவரது உடல் எடை குறைந்து இறுதியில் 45 கிலோ ஆனது. உலகத்தில் உள்ள அத்தனை வியாதிகளும் குடியிருக்கும் நோய்களின் கூடாரமாக மாறி அவரது உடல் நலியுற்றது. ஒரு விசாரணைக் கைதிக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச உரிமைகள் கூட மதானிக்கு மறுக்கப்பட்டன.

1200 க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டு ஒருவர்கூட அவருக்கு எதிராக சாட்சி சொல்லாத நிலையிலும் அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன. அவரது பாட்டி இறந்தபோது பரோலில் சென்று பட்டியின் உடலை பார்த்து வருவதற்கு கூட அவருக்கு அனுமதி தரப்படவில்லை. நீண்ட நாள் ஆகிவிட்டதால் பழுதடைந்த தனது செயற்கை காலை புதுப்பிக்கவும், சிகிச்சைக்காகவும் வேண்டி மதானி அனுப்பிய மனுக்கள் குப்பைக் கூடையில் எறியப்பட்டன. அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மதானி விசயத்தில் மிக மூர்கத்தனமாக நடந்து கொண்டார்.

மதானியை விடுதலை செய்யக் கோரி தமிழகத்திலும், கேரளத்திலும் மிகப்பெரும் மக்கள் இயக்கங்கள் நடைபெற்றன. 2006 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும், அப்பாவி சிறைவாசிகளின் விடுதலையை முன்னிலைப்படுத்தி த.மு.மு.க போன்ற தமிழக முஸ்லிம் அமைப்புகள் தேர்தலை எதிர்கொண்ட விதமும், மதானி உள்ளிட்ட அப்பாவிகளின் விடுதலைக்கு வழிவகுத்தது.

கலைஞர் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற உடன் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் குறித்த கோரிக்கைகள் கனிவோடு பரிசீலிக்கப்பட்டன. மதானிக்கு மருத்துவ சிகிச்சை கிடைத்தது. பின்னர் குற்றம் நிரூபிக்கப்படாமல் ஒன்பதரை ஆண்டுகால சிறை வாழ்கையை முடித்துக் கொண்டு 2007 ஆகஸ்ட் 1 - இல் விடுதலையாகி வெளியே வந்தார் மதானி. பரபரப்பான அவரது அரசியல் பயணத்தை முடக்கி, கம்பீரமான அவரது தோற்றத்தை ஒடுக்கி, இயங்க முடியாத நிலைக்கு அவரைத் தள்ளிய பிறகு குற்றமற்றவர் என்று விடுதலை செய்தது நீதிமன்றம்.

விடுதலைக்குப் பின் மதானியைத் தவிர வேறு யாராக இருந்தாலும், நலிந்த தன் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு பொது வாழ்வுக்கு ஓய்வு கொடுத்திருப்பார்கள். வெகு மக்களிடம் தன் மீது ஏற்பட்டிருக்கும் அனுதாபத்தை அரசியல் லாபத்திற்கான அறுவடையாகக் கருதி காங்கிரசோடு பேரம் நடத்தி இருப்பார்கள். முஸ்லிம்களுக்கான பிரச்சனைகளைப் பேசியதனால் தானே வம்பு ; பேசாமல் 'பதவி அரசியல்' நடத்துவோம் என்று கொள்கை அரசியலை கை கழுவி இருப்பார்கள்.

ஆனால் அப்படி எந்த முடிவுக்கும் வரவில்லை மதானி. முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அரசியல் எழுச்சிக்கான தனது பயணத்தை முன்பை விடவும் வேகமாகக் கூர் தீட்டினார். பேச்சில் இருந்த வீச்சைக் குறைத்து அதை செயலில் காட்டினார். தன் உடல் நிலையைப் புறம் தள்ளி விட்டு கேரளா முழுவதும் வலம் வந்தார். ஒன்பதரை ஆண்டுகாலம் முடங்கிக் கிடந்த தனது தொண்டர்களை மீண்டும் தட்டி எழுப்பினார்.

மதானியின் கதை முடிந்து விட்டது என்று கணக்குப் போட்டு காய் நகர்த்தியவர்களுக்கு, அவரது இத்தகைய மீள் எழுச்சி எரிச்சலைத் தந்தது. ஏற்கனவே கோவைக் குண்டுவெடிப்பு வழக்கில் அவரைச் சிக்கவைத்து குளிர் காய்ந்தவர்கள் மீண்டும் அதே பாணியில் அவரைக் குதறத் தொடக்கி உள்ளனர்.

****

2008 ஆம் ஆண்டு ஜூலை 25 - ஆம் நாள் பெங்களூரில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் மதானி 31- ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, கர்நாடக மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மதானி சேர்க்கப்பட்டுள்ள விதத்தையும், வழக்கின் போக்கையும் பார்க்கின்ற போது , மதானியை ஒரேயடியாக ஒழித்துக்கட்ட மிகப்பெரிய சதி வலைகள் பின்னப்படுவதை அறிய முடிகின்றது.

கேரளாவைச் சார்ந்த 'தடியன்டவிட' நசீர் என்பவர் 2009 ஆம் ஆண்டு, பங்களாதேசத்தில் வைத்து அங்குள்ள ரைபிள் படையினரால் கைது செய்யப் பட்டார். லஷ்கரே தொய்பா தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்ட நசீர், கொடுத்ததாக சொல்லப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் இப்போது மதானி வேட்டையாடப்படுகிறார்.

2005 ஆம் ஆண்டு கேரள மாநிலம் கலமச்சேரியில், தமிழக அரசுப் பேருந்து எரிக்கப்பட்ட வழக்கில், 'தடியண்டவிட' நசீரிடம் கேரள போலீசார் விசாரித்ததாகவும், விசாரணையில், ''தமிழக அரசுப் பேருந்தை எரிக்கச் சொன்னது மதானியின் மனைவி சூஃபியாதான் '' என்று நசீர் சொன்னதாகவும் கூறி 2009 டிசம்பரில் சூஃபியா கைது செய்யப்பட்டு எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டார். அது தனிக் கதை.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில், பெங்களூர் மாஜிஸ்த்ரேட் நீதிமன்றத்தில் மதானி மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி, மதானியின் சார்பில் அவரது வழக்கறிஞர் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவுக்கு எதிராக கர்நாடக காவல் துறையினர் பதில் மனுத் தாக்கல் செய்தனர்.

57 பக்கங்கள் கொண்ட அந்த பதில் மனுவில் காவல்துறை கையாண்டிருக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் விஷம் தோய்ந்தவையாக இருக்கின்றன. மதானிக்கு எதிரான சதியின் முழுப் பரிணாமமும், முஸ்லிம்கள் மீதான அதிகார வர்க்கத்தின் வெறுப்புணர்வும் அதில் அப்பட்டமாகத் தெரிகிறது.

'' பெங்களூரில் குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன் மதானியும், கைது செய்யப்பட்ட நசீர் உள்பட 22 குற்றவாளிகளும், கேரள மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள குடகு நகரில் ஒன்று கூடி, அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் வைத்து சதித்திட்டம் வகுத்ததாகவும், இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்பது அவர்களது திட்டம் என்றும், இதற்காக இந்தியாவில் வன்முறையைத் தூண்டி விட்டு, மத்திய மாநில அரசுகளுக்கு இடையூறு செய்வதே அவர்களின் நோக்கம் என்றும் போலீஸ் கூறியுள்ளது.

மேலும், நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வெடி பொருட்களை ரகசியமாக கேரளத்துக்கு கடத்தி, அங்கு வெடிகுண்டைத் தயாரித்துள்ளனர் என்றும், இவ்வாறு தயாரிக்கப்பட்ட குண்டுகளை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிக்க வைத்து மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளார்'' என்றும் நீளுகிறது போலீஸ் அறிக்கை.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து மதானி குற்றமற்றவராக விடுவிக்கப் பட்டாலும், மதானியை தீவிரவாதியாக சித்தரிக்கும் ஆளும் வர்க்கத்தின் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதையே போலீசின் இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.

சிறையிலிருந்து வெளி வந்த பின்னர் மதானியின் முழு செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் மத்திய மாநில புலனாய்வுக் குழுவினரால் கண்காணிக்கப்படுகிறது. அவரது சுற்றுப்பயணம் குறித்த முழு தகவலும் கேரள காவல் துறையிடம் இருக்கிறது.அப்படிப்பட்ட சூழ்நிலையில், 24 மணி நேரமும் கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்கும் ஒருவர், எப்படி குண்டு வெடிப்புச் சதியில் ஈடுபட முடியும்? குடகு நகரில் ரகசியமாகக் கூடி திட்டம் தீட்ட முடியும்? என்றெல்லாம் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் ஜனநாயக நாட்டில் விடை இல்லை.

நசீர் கைது செய்யப்பட்டு சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, '''மதானிக்கும் குண்டுவெடிப்பில் பங்குண்டு'' என்று அவர் வாக்குமூலம் அளித்ததாகக் கூறி மதானி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் காவல் துறையின் இந்த மோசடித்தனத்தை, கொச்சி உயர் நீதி மன்றத்தில் இருந்து வெளியே வரும் போது பத்திரிகையாளர்களை சந்தித்த நசீர் பகிரங்கமாக அம்பலப் படுத்தினார். ''பெங்களூர் குண்டுவெடிப்பில் மதானிக்கு தொடர்பு உண்டு என்று தான் கூறவே இல்லை'' என்று உறுதியாக மறுத்தார். ஆனாலும் காவல் துறையும், நீதி மன்றமும் அதை எல்லாம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மதானியை சூறையாட வேண்டும் என்று அதிகார வர்க்கம் முடிவு செய்து விட்ட பிறகு எந்த உண்மையைத் தான் அவர்களால் ஏற்க முடியும்?

இந்தியாவை இஸ்லாமிய நாடாக்க சதி நடக்கிறது என்று கர்நாடக பாஜக அரசின் காவல்துறை சொன்னதைப் போலவே, கேரளாவின் கம்யூனிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தனும் வாந்தி எடுத்தார். முஸ்லிம்களை ஒடுக்குவதில் இந்துத்துவத்திற்கும், இடதுசாரிகளுக்கும் இடையே இருக்கும் கள்ள உறவு இதன் மூலம் அம்பலத்திற்கு வருகிறது.

குற்றமே செய்யாமல், விசாரணைக் கைதியாக கோவை சிறையில் மதானி இழந்த ஒன்பதரை ஆண்டுகளுக்கு, பதில் சொல்ல வக்கற்றவர்கள், தற்போது மதானி விசயத்தில் 'சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும், அவர் குற்றவாளியா இல்லையா என்பதை சட்டம் முடிவு செய்யட்டும்' என்றும் கூறி தப்பிக்க முயலுகின்றனர்.

மதானி கைது செய்யப்பட்டுள்ள 'அன்லாஃபுல் ஆக்டிவிட்டீஸ் பிரிவென்சன் நடைமுறைச் சட்டம் - 2008 ' என்ற சட்டம் எந்த வகையிலும் நீதி வழங்காது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இதே போன்ற கறுப்புச் சட்டங்களால் ஏற்கனவே முஸ்லிம்கள் பட்ட காயங்களும், அதனால் ஏற்பட்ட ரணங்களும் இன்னும் ஆறாத வடுவாய் இருக்கிறது. இந்தக் கொடுஞ்சட்டத்தின் படி, சப் இன்ஸ்பெக்டர் ரேன்கிலுள்ள எந்த ஒரு அதிகாரியும், நாட்டில் யாரையும் சந்தேகத்தின் பேரில் குற்றவாளியாக்க முடியும். அதன் பின்னர் 150 நாட்கள் வரை ஜாமீனில்லாமல் சிறையில் அடைக்கலாம். குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் கோரி விண்ணப்பித்தால் நீதி மன்றமும் எதுவும் செய்ய இயலாது. ஏனெனில் நீதிமன்றத்தின் எந்த ஒரு அனுமதியும் இன்றி 150 நாட்கள் வரை சிறையில் அடைக்க காவல்துறைக்கு சட்ட ரீதியான அதிகாரமுண்டு.

வழக்கமான சட்ட நடைமுறைகளின்படி, சாதாரண நிலையில் ஒருவரை கைது செய்தால், அவரை 24 மணி நேரத்துக்குள் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும். நீதி மன்றம் அவரை 14 நாட்கள் ரிமாண்ட் செய்யலாம். தொடர்ந்து பொறுப்பில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றால் 15 ஆம் நாள் மீண்டும் நீதி மன்றத்தை அணுக வேண்டும்.

குற்றவாளி என்று நிறுவப்படும் வரை, ஒரு குடிமகனுக்கு உரிய அடிப்படை உரிமைகளைக் கருத்தில் கொண்டே சட்டத்தில் இவ்வாறெல்லாம் வழி வகை செய்யப் பட்டுள்ளது. ஆனால், மக்களுக்கு சட்டம் வழங்கியுள்ள இத்தகைய உரிமைகளை காலி செய்து அநீதி இழைக்கவே, அரசு அதிகாரம் புதிய கறுப்புச் சட்டங்களை இயற்றி வைத்துள்ளது. அப்படி என்றால் சட்டம் யாருடைய வழியில் செல்கிறது?

வழக்கு விசாரணை எல்லாம் முடிந்து, குற்றம் சற்றப்பட்டவர் நிரபராதி என்று விடுவிக்கப் பட்டால், சட்டம் போனது எந்த வழியில் என்று மானமுள்ள எவராவது விடையளிப்பார்களா?

அச்சுதானந்தனும், பிரணாய் விஜயனும், ரமேஷ் சென்னிதாலாவும், குஞ்சாலிக் குட்டியும் கூறுகின்ற, சட்டத்தின் யோக்கியதை இவ்வளவுதானே.. இவர்களுக்கெல்லாம் கொஞ்சமேனும் மானமும், சூடு உணர்ச்சியும் இருந்தால் ''சட்டம் சட்டத்தின் பாதையில் செல்லட்டும்'' என்று கூச்சமின்றி கூறுவார்களா?

மதானி விசயத்தில் யாரைக் கேட்டாலும் 'சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்' என்று கூறி சட்டத்தைக் கை காட்டி விட்டு பதுங்கி விடுகின்றனர். இந்தச் சட்டம் என்றைக்குத்தான் முஸ்லிம்களுக்கு நீதியை வழங்கி இருக்கிறது? முஸ்லிம்கள் என்றாலே சட்டம் ஒரு வழியிலும், நீதி வேறு வழியிலும் அல்லவா செல்கிறது... இங்கே சங்கராச்சாரிக்கும், அப்துல் நாசர் மதானிக்கும் ஒரே சட்டம்தான்... ஆனால் நீதி?

சங்கரமடப் பூசாரி சங்கர ராமனை கூலிப்படையை ஏவி கொலை செய்த வழக்கில் சங்கராச்சாரிக்கு, குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பே, சதிக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என பிணை கொடுக்கிறது நீதி மன்றம். விடுமுறை நாளில் கூட சங்கராசாரிக்காக திறந்தன நீதிமன்றத்தின் கதவுகள். சுவாமிகளை சிறையில் அடைக்காமல் நீதிபதிகளின் குடியிருப்பிலேயே காவலில் வைக்கலாமே என்று யோசனை சொன்னார் ஒரு நீதிபதி. சிறையில் மலம் கழிக்க வாழை இலை கொடுக்கும் அளவுக்கு சங்கராசாரிக்காக வளைந்து கொடுக்கிறது சட்டம். ஒரு குற்றவாளிக்கு வழங்கப்பட்டது நீதி... ஆனால் குற்றமற்ற மதானிக்கு?

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆயுள் தண்டனை; அல் உம்மாவுக்குத் தடை.. ஆனால் குண்டுவெடிப்புக்கு காரணமாக அமைந்த, 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட கோவை கலவரத்தை, முன்னின்று நிகழ்த்திய இந்துத்துவக் குண்டர்களுக்கும், முஸ்லிம்களை சுட்டுத்தள்ளிய காவல் துறையினருக்கும் தடையுமில்லை, தண்டனையுமில்லை!

பழனி பாபாவின் ஜிகாத் கமிட்டிக்குத் தடை.. பழனி பாபாவைக் கொன்றவர்களுக்கோ விடுதலை!

இஸ்லாமிய மாணவர் அமைப்பான 'சிமி' க்குத் தடை.. ஆனால் சிமியின் பெயரால் இந்தியா முழுவதும் மிகப்பெரிய குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய ஆர் எஸ் எஸ்ஸுக்கு சகல சுதந்திரம்!

மாலேகான், புனே, அஜ்மீர், ஹைதராபாத், கோவா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட அபினவ் பாரத், சனாதன் சன்ஸ்தான், இந்து ஜாக்ருதி சமிதி ஆகிய இந்துத்துவ தீவிரவாதஅமைப்புகளையும், அவற்றை பல்வேறு பெயர்களில் இயக்கிக் கொண்டிருக்கும் மூல அமைப்பான ஆர் எஸ் எஸ்ஸையும் தடை செய்ய அரசுக்குத் துணிவில்லை.

குண்டுவெடிப்புகளில் ஆர் எஸ் எஸ்ஸுக்கு தொடர்பு இருப்பதற்கான அனைத்து வகையான ஆதாரங்களும், வீடியோ காட்சிகளும் கிடைத்த பிறகும், ஹெட்லைன்ஸ் டுடே , தெஹல்கா போன்ற பெரிய ஊடகங்கள் அதை அம்பலப் படுத்திய பிறகும், ஆர் எஸ் எஸ் தலைமையகத்தை சோதனை செய்யவோ, ஆர் எஸ் எஸ் தலைவர்களை விசாரணைக்கு அழைக்கவோ துப்பில்லாத தொடை நடுங்கி அரசுகள், மதானியைக் குதறுவதில் முனைப்புக் காட்டுகின்றன.

நந்திகத்தில் உள்ள ஆர் எஸ் எஸ் ஊழியர் வீட்டில் குண்டு வெடிப்பு; கான்பூரில் பஜ்ரங்தள் நிர்வாகி வீட்டில் குண்டு வெடிப்பு; தென்காசி ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் குண்டு வெடிப்பு, என... ஆர் எஸ் எஸ் காரர்கள், குண்டுகளை தயாரித்துக் கொண்டிருக்கும் போதே வெடித்து சிதறிய குண்டுகள் ஏராளம், தாராளம்... இப்படி, பட்டவர்த்தனமாக ஆர் எஸ் எஸ்ஸின் பயங்கரவாதம் அம்பலப்பட்ட பிறகும், மதானி வெடிகுண்டு தயாரித்து சப்ளை செய்தார் என்று கதை விடுகிறது காவல்துறை.

2006 - லிருந்து நடைபெற்றுவரும் ஏழு மிகப்பெரிய குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர் எஸ் எஸ்ஸின் கள்ளக் குழந்தையான அபினவ் பாரத்துடன், உறவு வைத்துள்ள பல ராணுவ அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரைப் பற்றிய விபரங்கள், புலன் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த பிறகும், அவர்களில் எவரும் விசாரணைக்கு அழைக்கப் படுவதில்லை. 'தடியன்டவிட' நசீரை தேடிப்பிடித்து, நோண்டி நொங்கெடுத்தவர்களுக்கு, இந்த இந்துத்துவ அதிகாரிகளெல்லாம் கண்ணில் தெரிவதில்லை.

பெங்களூர் குண்டுவெடிப்பில் ஒருவர் பலியான வழக்கில், மதானியை சிக்க வைத்து சிறை பிடித்துள்ளவர்கள், குஜராத்தில் மூவாயிரம் முஸ்லிம்களைக் கொன்று நர வேட்டையாடிய நரேந்திர மோடியை, அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்க்கின்றனர்.

போபாலில் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்த அமெரிக்கப் பயங்கரவாதி ஆண்டர்சனை விமானத்தில் ஏற்றி தப்பி ஓடச் செய்து விட்டு, செத்துப் போன நரசிம்ம ராவ் மீது பழிபோடுகின்றனர். மதானியை விரைவாக ஒப்படைக்காத கேரள அரசின் மீது, கர்நாடக காவல்துறைக்கு வந்த கோபம், ஆண்டர்சனை ஒப்படைக்காத அமெரிக்கா மீது வருவதில்லை.

பாபர் மஸ்ஜித் இடிப்பில் மிக முக்கிய குற்றவாளிகளாக லிபரான் கமிஷனால் அடையாளப்படுத்தப்பட்ட அத்வானி, வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி போன்ற 68 குற்றவாளிகளில் எவர் மீதும் நடவடிக்கை இல்லை. 8 கோடி ரூபாய் மக்கள் வரிப் பணத்தை வாரி இறைத்து, 17 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டு , 1000 பக்கங்களில் சமர்பிக்கப் பட்ட லிபரான் அறிக்கை, இப்போது எந்தக் குப்பைத் தொட்டியில் கிடக்கிறதோ தெரியவில்லை.

பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின், மும்பையில் நடைபெற்ற மிகப்பெரும் வகுப்புக் கலவரங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த குற்றவாளி என, நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா கமிஷனால் அறிவிக்கப்பட்ட, மும்பை பயங்கரவாதி பால்தாக்கரே மீது இதுவரை எந்தச் சட்டமும் பாயவில்லை.

சந்தேகத்தின் அடிப்படையிலும், புனையப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையிலும் முஸ்லிம்களை வேட்டையாடும் காவல் துறைக்கு, அரசால் நியமிக்கப் பட்ட விசாரணை ஆணையத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர்களை கைது செய்ய துணிவில்லை.

பன்முகத் தன்மை உடைய இந்தியாவின் அரசியல் சாசன சட்டத்திற்கும், மதச் சார்பின்மைக்கும் எதிராக, மும்பையில் வட இந்தியர்களை, குறிப்பாக பீகார் மாநில எளிய மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடுகிறது நவ நிர்மான் சேனா. 'என்னை கைது செய்தால் மும்பையே பற்றி எரியும்' என்று பகிரங்கமாக கொக்கரிக்கும் ராஜ் தாக்கரேக்களெல்லாம் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்களாகக் கருதப்படுவதில்லை.

48 கிருமினல் வழக்குகளில் தொடர்புடைய்ய ஆகப் பெரிய குற்றவாளி ஸ்ரீ ராம்சேனா பிரமோத் முத்தலிக் மீது தடாவும் இல்லை, பொடாவும் இல்லை.பெரும் தொகையை பேரம் பேசி கலவரம் செய்யும் புது வகை பயங்கரவாதியான முத்தலிக் மீது இந்தியாவின் பாதுகாப்புச் சட்டங்கள் பாய்வதில்லை.

ஸ்ரீராம் சேனாவைத் தொடங்குவதற்கு முன் முதாலிக் பஜ்ரங்தளத்தில் இருக்கும்போதே பல்வேறு வழக்குகளில் சிக்கிய பின்னணி கொண்டவன்.அப்படி இருந்தும் அவர்களால் எந்தத் தடையும் இன்றி அமைப்பு நிறுவ முடிகிறது; சுதந்திரமாக இயங்க முடிகிறது. பெங்களூர் குண்டுவெடிப்பில் ஸ்ரீராம் சேனாவின் கூலிப் படைக்குத் தொடர்பு உண்டு என்று ஊடகங்கள் உண்மையை உரைத்த பிறகும், அந்தக் கோணத்தில் விசாரணையை முடுக்கி விடாமல், கேரளாவுக்குச் சென்று மதானியைக் கொத்தி வந்துள்ளது கர்நாடக பாஜக அரசு...

***

மதானியின் விசயத்தில் நடப்பவை அனைத்தும் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பது நன்கு தெரிந்த பிறகும், அவர் குற்றம் புரியாத அப்பாவி என்பது புரிந்த பிறகும், கேரளாவின் அரசியல் கட்சிகள் அவரை வெறுப்பது ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை. மதானியின் கைது விவகாரத்தில் கேரளாவில் பாஜகவும், காங்கிரசும், கம்யுனிஸ்ட்டும், முஸ்லிம் லீக்கும் ஓரணியில் நின்று முழங்குகின்றன. மதானி ஒழிக்கப்பட்டால் தான் தாங்கள் நிம்மதியாக அரசியல் நடத்த முடியும் என்று எல்லா கட்சிகளும் எண்ணுகின்றன.

மதானியை உலவ விட்டால் அவர் முஸ்லிம்களை அணி திரட்டுவார்; கேள்வி கேட்கும் படி உசுப்பி விடுவார்; அடிமை அரசியலுக்கு சாவு மணி அடித்து விடுவார் என்று, மதானியின் வலிமை குறித்த பயம் கேரள அரசியல் கட்சிகளை பிடித்தாட்டுகிறது. அதிகார ருசி கண்ட முஸ்லிம் லீக், பதவியை இழக்கவோ அல்லது வேறு ஒருவர் அந்த இடத்திற்கு வரவோ சிறிதும் அனுமதிக்காது. பதவி இல்லாமல் இருக்கவே முடியாது என்ற வெறி முற்றிய பிறகு எந்த இலக்கணங்களுக்கும் கட்டுப்பட மனம் வராது.

பாபர் மஸ்ஜித் இடிப்பில் இந்துத்துவ சக்திகளுக்கு பக்கத் துணையாக நின்ற, காங்கிரஸ் கட்சியின் நயவஞ்சகத்தனத்தைக் கண்டித்து, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று, முதுபெரும் முஸ்லிம் லீக் தலைவர் இப்ராகிம் சுலைமான் சேட் கர்ஜித்தபோது, முஸ்லிம் லீக்கின் பதவி வெறி பிடித்த கேரள தலைவர்கள்தான் அதற்கு முட்டுக் கட்டையாக நின்றனர். மனம் வெறுத்துப் போன சுலைமான் சேட், கொள்கை காக்கும் போராளியாக முஸ்லிம் லீக்கில் இருந்து வெளியேறி தேசிய லீக்கைத் தொடங்கும் நிலை வந்தது.

மதானி ஒழிந்தால் பாஜக வை விட அதிகமாக மகிழ்ச்சி அடையும் கட்சியாக முஸ்லிம் லீக் திகழ்கிறது. மதானியின் மீதான அடக்குமுறை அரங்கேறிக் கொண்டிருக்கும் போதே, கேரளாவில் பிற முஸ்லிம் அமைப்புகளான பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மீதும், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் மீதும் அரச மற்றும் ஊடக பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது.

நியாயமான வழியில் நின்று, சமரசமற்ற முறையில், உயிரோட்டமான அரசியலை முன்னெடுக்க முனையும் முஸ்லிம் அமைப்புகளை முடக்கிப் போடுவதில் அதிகார வர்க்கம் குறியாய் இருக்கிறது. முஸ்லிம்களுக்கான தனித்த அரசியல் எழுச்சியை ஊடகங்கள் விரும்புவதுமில்லை, கண்டுகொள்வதுமில்லை.

முஸ்லிம்களின் பிரச்சனைகளை முன்வைத்து ஜனநாயக வழியில் அரசியல் நடத்துகிறவர்களை அடிப்படைவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும், மதவெறியர்களாகவும் சித்தரிக்கின்ற போக்கு, நாடு விடுதலை பெற்ற நாள் முதல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது .

இநதிய முஸ்லிம்களுக்கான தனித்த அரசியல் இயக்கமான முஸ்லிம் லீக், பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானின் கட்சி என்றாகிவிட்ட நிலையில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரில், இநதிய முஸ்லிம்கள் தமது தனித்த அடையாளத்தோடு மீண்டும் அரசியல் நடத்தப் புறப்பட்டதை, அன்றைய ஆளும் காங்கிரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

இநதிய முஸ்லிம்களுக்கு தலைமை ஏற்க காயிதே மில்லத் துணிந்த போது, அவரை முடக்கிப் போடுவதற்கான எல்லா ஆயுதங்களையும் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்தது.

முதலில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்றொரு அமைப்பு உருவாகி விடாமல் தடுப்பதில் கவனம் செலுத்தியது; முஸ்லிம் லீக்கின் முதுபெரும் தலைவர்களின் வாயாலேயே ''முஸ்லிம் லீக் இனி நமக்கு வேண்டாம்'' என்று சொல்ல வைத்தது; முஸ்லிம் லீக்கை விட்டு வெளியேறி எங்களோடு இணைந்தால், உயர் பதவிகளைத் தருகிறோம் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியது; காயிதே மில்லத் மசிய மாட்டார் என்று தெரிந்ததும், அபுல் கலாம் ஆசாத்தை முன்னிறுத்தி முஸ்லிம்களை வளைக்கப் பார்த்தது; காங்கிரசின் இத்தகைய எல்லா தந்திரங்களையும் தவிடு பொடியாக்கி விட்டு, இந்திய முஸ்லிம்களுக்குத் துணிச்சலாக தலைமை ஏற்றார் காயிதே மில்லத்.

அதன் பிறகு அவரை கண்காணிக்கத் தொடங்கியது இந்திய அரசு. தேச விரோத செயலில் அவரை சிக்க வைக்க ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கித் தவித்தது அரசு. காயிதே மில்லத் வெளிநாடு சென்ற போது, அவரது நடவடிக்கைகளை உளவு பார்க்க காங்கிரஸ் அரசு காமராஜரை அனுப்பி வைத்ததாக வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது.

ஆனால், இன்றைக்கு முஸ்லிம் லீக்கையோ அல்லது முஸ்லிம் லீக் தலைவர்களையோ, ஆளும் வர்க்கம் அப்படிப் பார்ப்பது இல்லை. முஸ்லிம்களின் பிரச்சனைகளைப் பற்றி இன்றைய முஸ்லிம் லீக், காயிதே மில்லத்தைப் போல் பேசுவதில்லை. வகுப்பு வாதத்துக்கு எதிராக வீச்சோடு களமாடுவதில்லை.

அவர் தவறாக நினைத்து விடுவாரோ, இவர் தவறாக நினைத்து விடுவாரோ...அல்லது கூட்டணித் தலைமை கோபித்துக் கொள்ளுமோ என்று பல கணக்குப் போட்டு மென்மையான முறையில் அரசிய நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அது வெறுமனே பதவியை தக்க வைத்துக்கொள்கிற சுயநல அரசியல். ஆகையினால் இன்றைய முஸ்லிம் லீக்கை, ஆளும் வர்க்கமோ அல்லது ஊடகங்களோ கண்காணிப்பதுமில்லை; பிரச்சனைக்கு உரியவர்களாக கருதுவதுமில்லை.

அன்றைக்கு காயிதே மில்லத்தைப் போல், இன்றைக்கு கொள்கை சமரசமற்ற முறையில் யார் யாரெல்லாம் அரசியலை முன்னெடுக்கின்றர்களோ; போர்குணத்தோடு அமைப்பு நடத்துகிறார்களோ அவர்களின் மீதே, ஆளும் வர்க்கத்தின் பார்வையும் , ஊடகங்களின் பார்வையும் ஒரு சேரக் குவிகிறது. காயிதே மில்லத்தை தேச துரோகி என்றார்கள்; கண்காணித்தார்கள்; அவரது சகாக்களை அவரிடமிருந்து பிரித்து, அவரை பலவீனப் படுத்த முயன்றார்கள்; மிதமான அணுகுமுறை உள்ள மாற்றுத் தலைமையை முன்னிறுத்தினார்கள்.... இன்றைக்கும் அதே வழிமுறையை, அதே நடைமுறையை ஆளும் வர்க்கம் பின் பற்றி வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

அன்றைக்கு அரசோடு கூட்டுச் சேர்ந்து, காயிதே மில்லத்தை விமர்சித்த, சுயநலம் கொண்ட முஸ்லிம்களின் இடத்தை, இன்றைக்கு முஸ்லிம் லீக் பிடித்துக் கொண்டிருப்பது தான் காலத்தின் கோலம்.

மதானியையும், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவையும், ஜமாத்தே இஸ்லாமியையும் கேரளாவில் முடக்கிப் போடுவதற்கு, ஆளும் தரப்பு கையாளுகின்ற அத்தனை வழிமுறைகளையும் முஸ்லிம் லீக் ஆதரிக்கிறது. போர்க் குணமிக்க முஸ்லிம் அமைப்புகள் விசயத்தில் அரசும், காவல் துறையும், ஊடகங்களும் என்ன சொல்கிறார்களோ, அதை ஒரு வரி விடாமல் வார்த்தை விடாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளுகிற மனநிலைக்கு, பாரம்பரிய முஸ்லிம் தலைமை தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது.

***

மதானி கைது செய்யப் பட்ட போது, ஊடகங்கள் அதைக்கையாண்ட விதம் மிகவும் அருவருப்பானது. ஒரு குற்றவாளியை கர்நாடக அரசுக்கு கை மாற்றுவதில், கேரள அரசு தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தி விட்டதாக கேரள ஊடகங்கள் விஷத்தைக் கக்கின. தமிழ் நாட்டின் பிரதான ஊடகமான சன் தொலைக்காட்சியின் செய்தி சேனலில், மதானியைக் கொச்சைப் படுத்தும் வகையில் செய்தி வாசிக்கப் பட்டது.

தான் குற்றவாளி அல்ல என்ற போதும் இறைவனுக்கு அடுத்த படியாக நீதி மன்றத்தின் மீது தான் வைத்துள்ள மரியாதையின் காரணமாக, சரணடைய விரும்புவதாக அறிவித்தவர் மதானி. அப்படிப்பட்ட ஒருவரை, ''ஆம்புலன்ஸ் மூலம் தப்பி ஓட முயன்ற போது பிடிபட்டதாக'' சன் டிவி தலைப்புச் செய்தி சொன்னது. செய்தியின் உள்ளீடாக, ''மதானி கோவை குண்டு வெடிப்பு வழக்கில் எட்டு ஆண்டுகள் தண்டனைப் பெற்றவர்'' என்று சொல்லி வரலாற்றுத் திரிபு செய்தது. விசாரணை கைதியாக கோவை சிறையில் ஒன்பதரை ஆண்டுகளை இழந்து, குற்றமற்றவர் என்று விடுதலையான மதானியின் உண்மை முகத்தைக் காட்டுவதற்கு ஊடகங்களுக்கு மனமில்லை. மதானியைக் கொச்சைப்படுத்தும் போர்வையில், முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்திய சன் டிவிக்கு தமிழக முஸ்லிம்கள் உடனடி பதிலடி கொடுத்தனர். தமிழகம் முழுவதும் இருந்து கிளம்பிய எதிர்ப்பு அலைக்குப் பணிந்து, தனது தவறை உணர்ந்ததாக வருந்தியது சன் டிவி.

இணைய தளங்களில் ஜெயமோகன் போன்ற இந்துத்துவ சிந்தனை உடைய இலக்கிய பயங்கரவாதிகள், மதானியை தீவிரவாதத்தின் ஊற்றாக சித்தரித்துக் கொண்டிருக்கின்றனர். இளம் தலை முறையினரின் களமாகத் திகழும் இணைய தளத்தில், முஸ்லிம் சமூகத்தின் போராளிகளை கொடூரமானவர்களாகவும், மனித குல விரோதிகளாகவும் காட்டுவதன் மூலம், முஸ்லிம்கள் மீதான வெறுப்பு வெகு மக்களிடம் பற்றிப் பரவுவதற்கு திட்டமிட்டு வேலை செய்கின்றனர்.

அறியாமையில் சிக்கி உழலும் முஸ்லிம் சமூகத்திற்கு, ஜெயமோகனையும் தெரியாது; இணைய தளமும் புரியாது என்பதுதான், உச்சக்கட்ட பரிதாபம்.

கருத்துருவாக்கம் செய்யக் கூடிய வலிமை மிகுந்த களமான ஊடகத்தில் முஸ்லிம்கள் இல்லை என்பதுதான், இத்தகைய அவலங்களுக்கு காரணமாக இருக்கிறது.

முஸ்லிம்கள் ஊடகத்தில் மட்டுமா இல்லை? அரசியலில் இல்லை; அதிகாரத்தில் இல்லை; கலை இலக்கியத்தில் இல்லை; பண்பாட்டுத் தளத்திலும் இல்லை...... இல்லை, இல்லை, இல்லவே இல்லை... இருப்பதெல்லாம் உள் முரண்பாடுகளும், குழுச் சண்டையும், கொள்கை மோதலும் தான்...

முஸ்லிம்களே! இனியும் இழப்பதற்கு எதுவுமில்லை; மீட்பதற்கோ ஆயிரம் இருக்கிறது.

[நன்றி: சமநிலைச் சமுதாயம்]

---

குர்ஆன் வசனங்கள் (பிரார்தனைகள்)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

66 : 8. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்து விடக்கூடும். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இந்த நபியையும் (முஹம்மதையும்) அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் இழிவு படுத்தாத நாளில் அவர்களது ஒளி அவர்கள் முன்னேயும் வலப்புறமும் விரைந்து செல்லும். எங்கள் இறைவா! எங்கள் ஒளியை எங்களுக்கு முழுமையாக்குவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன் என்று கூறுவர்.

23 : 97. 98. என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்றும் கூறுவீராக! என் இறைவா! என்னிடம் அவர்கள் வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

28 : 16. என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக! என்றார். அவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையோன்.

7 : 23. எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம் என்று அவ்விருவரும் கூறினர்.

2 : 286. எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே. எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்).

3 : 16. எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! என்று அவர்கள் கூறுவார்கள்.

3 : 147. எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக! என்பதே அவர்களின் வேண்டுதலாக இருந்தது.

26 : 87. (மக்கள்) மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளில் என்னை இழிவுபடுத்தி விடாதே!

14 : 40. 41. என் இறைவா! என்னையும் என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக! எங்கள் இறைவா! என்னையும் எனது பெற்றோரையும் நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக! (எனவும் இப்ராஹீம் கூறினார்)

3 : 193. உங்கள் இறைவனை நம்புங்கள்! என்ற நம்பிக்கையை நோக்கி அழைத்தவரின் அழைப்பைச் செவியுற்றோம். எங்கள் இறைவா! உடனே நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!

44 : 12. எங்கள் இறைவா! எங்களை விட்டும் வேதனையை நீக்குவாயாக! நாங்கள் நம்பிக்கை கொள்பவர்கள் (என்று கூறுவார்கள்)

3 : 194. எங்கள் இறைவா! உன் தூதர்கள் வழியாக நீ எங்களுக்கு வாக்களித்ததை எங்களுக்கு வழங்குவாயாக! கியாமத் நாளில் எங்களை இழிவு படுத்தாதே! நீ வாக்கு மீற மாட்டாய் (எனவும் அவர்கள் கூறுவார்கள்.)

1 : 4. 5. உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக!

3 : 8. எங்கள் இறைவா! எங்களுக்கு நேர் வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.

23 : 109. எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எங்களை மன்னித்து அருள் புரிவாயாக! நீ கருணையாளர்களில் சிறந்தவன் என்று எனது அடியார்களில் ஒரு சாரார் கூறி வந்தனர்.

2 : 201. எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர்.

28 : 24. அவர்களுக்காக அவர் தண்ணீர் இறைத்துக் கொடுத்தார். பின்னர் நிழலை நோக்கிச் சென்று என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ளவனாக இருக்கிறேன் என்றார்.

3 : 38. அப்போது தான் ஸக்கரிய்யா இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன் என்று தம் இறைவனிடம் வேண்டினார்.

7 : 143. நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து அவரிடம் அவரது இறைவன் பேசிய போது என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும் எனக் கூறினார். அதற்கு (இறைவன்) என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம் என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன் எனக் கூறினார்.

7 : 126. எங்கள் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்த போது அதை நம்பினோம் என்பதற்காகவே எங்களை நீ தண்டிக்கிறாய் (என்று ஃபிர்அவ்னிடம் கூறி விட்டு) எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக! என்றனர்.

7 : 151. என் இறைவா! என்னையும் என் சகோதரரையும் மன்னிப்பாயாக! எங்களை உனது அருளில் நுழைப்பாயாக! நீ கருணையாளர்களில் மிகவும் கருணையாளன் என்று (மூஸா) கூறினார்.

11 : 47. இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து அருள் புரியா விட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன் என்று அவர் கூறினார்.

21 : 83 84. எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.

27 : 44. இம்மாளிகையில் நுழைவாயாக! என்று அவளிடம் கூறப்பட்டது. அதை அவள் கண்ட போது தண்ணீர்த் தடாகம் என நினைத்து தனது கீழாடையைக் கரண்டைக்கு மேல் உயர்த்தினாள். அது பளிங்குகளால் பளபளப்பாக்கப்பட்ட மாளிகை என்று அவள் கூறினாள். நான் எனக்கே தீங்கு இழைத்து விட்டேன். ஸுலைமானுடன் சேர்ந்து அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டு விட்டேன் என்று அவள் கூறினாள்.

23 : 118. என் இறைவா! மன்னித்து அருள்புரிவாயாக! நீ அருள்புரிவோரில் சிறந்தவன் என கூறுவீராக!

25 : 65. எங்கள் இறைவா! எங்களை விட்டும் நரகத்தின் வேதனையைத் தடுப்பாயாக! அதன் வேதனை நிலையானதாக இருக்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.

18 : 10. சில இளைஞர்கள் குகையில் ஒதுங்கிய போது எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக! என்றனர்.

26 : 83. 84. 85. என் இறைவா! எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக! என்னை நல்லோருடன் சேர்ப்பாயாக! பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக! இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்குவாயாக!

20 : 114. உண்மையான அரசனாகிய அல்லாஹ் உயர்ந்து விட்டான். (முஹம்மதே!) அவனது தூதுச் செய்தி உமக்கு முழுமையாகக் கூறப்படுவதற்கு முன் குர்ஆன் விஷயத்தில் அவசரப்படாதீர்! என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து எனக் கூறுவீராக!

25 : 74. எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும் மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக! என்று அவர்கள் கூறுகின்றனர்.

27 : 19. அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். என் இறைவா! என் மீதும் எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும் நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது நல்லடியார்களில் என்னையும் உனது அருளால் சேர்ப்பாயாக! என்றார்.

60 : 4. உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.

60 : 5. எங்கள் இறைவா! (உன்னை) மறுப்போருக்குச் சோதனையாக எங்களை ஆக்கி விடாதே! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் இறைவா! நீயே மிகைத்தவன் ஞானமிக்கவன் (என்றும் பிரார்த்தித்தார்.)

71 : 28. என் இறைவா! என்னையும் எனது பெற்றோரையும் நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் மன்னிப்பாயாக! அநீதி இழைத்தோருக்கு அழிவைத் தவிர வேறு எதையும் அதிகமாக்காதே! (எனவும் பிரார்த்தித்தார்)

23 : 93 94. என் இறைவா! அவர்கள் எச்சரிக்கப்படுவதை எனக்குக் காட்டினால் என் இறைவா! என்னை அநீதி இழைத்த கூட்டத்தில் ஆக்கி விடாதே! என்று (முஹம்மதே!) கூறுவீராக!

2 : 128. எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும் எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன் நிகரற்ற அன்புடையோன்.

3 : 53. எங்கள் இறைவா! நீ அருளியதை நம்பினோம். இத்தூதரைப் பின்பற்றினோம். எங்களை இதற்கு சாட்சிகளாகப் பதிவு செய்து கொள்! (எனவும் கூறினர்)

5 : 83. இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக! என அவர்கள் கூறுகின்றனர்.

12 : 101. என் இறைவா! நீ எனக்கு அதிகாரத்தில் (சிறிது) வழங்கியிருக்கிறாய். (பல் வேறு) செய்திகளின் விளக்கத்தை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாய்! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! நீயே இவ்வுலகிலும் மறுமையிலும் எனது பாதுகாவலன். என்னை முஸ்லிமாகக் கைப்பற்றுவாயாக! நல்லோர்களில் என்னைச் சேர்ப்பாயாக! (என்றும் கூறினார்)

20 : 25. என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து! என்றார்.

17 : 80. என் இறைவா! நல்ல முறையில் என்னை நுழையச் செய்வாயாக! நல்ல முறையில் என்னை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து எனக்காக உதவக்கூடிய ஆற்றலை ஏற்படுத்துவாயாக! என கூறுவீராக!

29 : 30. என் இறைவா! சீரழிக்கும் இந்தச் சமுதாயத்துக்கு எதிராக எனக்கு உதவுவாயாக! என்று அவர் கூறினார்.

40 : 7. அர்ஷைச் சுமப்போரும் அதைச் சுற்றியுள்ளோரும் தமது இறைவனைப் போற்றிப் புகழ்கின்றனர். அவனை நம்புகின்றனர். எங்கள் இறைவா! ஒவ்வொரு பொருளையும் அருளாலும் அறிவாலும் நீ சூழ்ந்திருக்கிறாய். எனவே மன்னிப்புக் கேட்டு உனது பாதையைப் பின்பற்றியோரை மன்னிப்பாயாக! அவர்களை நரகத்தின் வேதனையை விட்டுக் காப்பாயாக! என்று நம்பிக்கை கொண்டோருக்காக பாவமன்னிப்புத் தேடுகின்றனர்.

40 : 8. எங்கள் இறைவா! அவர்களையும் அவர்களது பெற்றோர்கள் வாழ்க்கைத் துணைகள் மற்றும் அவர்களது சந்ததிகளில் நல்லோரை நீ வாக்களித்த நிலையான சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வாயாக! நீ மிகைத்தவன் ஞானமிக்கவன்.

46 : 15. தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும் பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள். அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும் போது என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும் நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன் என்று கூறுகிறான்.

59 : 10. அவர்களுக்குப் பின் வந்தோர் எங்கள் இறைவா! எங்களையும் நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன் நிகரற்ற அன்புடையோன் என்று கூறுகின்றனர்.

2 : 250. ஜாலூத்தையும் அவனது படையினரையும் அவர்கள் களத்தில் சந்தித்த போது எங்கள் இறைவா! எங்கள் மீது சகிப்புத் தன்மையை ஊற்றுவாயாக! எங்கள் பாதங்களை நிலைப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக! என்றனர்.

10 : 86. உனது அருளால் (உன்னை) மறுக்கும் கூட்டத்திடமிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக! (என்றும் கூறினர்)

66 : 11. என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக! என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.

17 : 24. அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக! என்று கேட்பீராக!

26 : 169. என் இறைவா! என்னையும் என் குடும்பத்தினரையும் அவர்கள் செய்து கொண்டிருப்பவற்றை விட்டு காப்பாற்றுவாயாக! (என்றும் கூறினார்)

10 : 85. அல்லாஹ்வையே சார்ந்து விட்டோம். எங்கள் இறைவா! அநீதி இழைத்த கூட்டத்தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கி விடாதே! என்று அவர்கள் கூறினர்.

28 : 21. பயந்தவராக கவனத்துடன் அங்கிருந்து வெளியேறினார். என் இறைவா! அநீதி இழைக்கும் கூட்டத்தை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக! என்றார்.

3 : 191. அவர்கள் நின்றும் அமர்ந்தும் படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை நீ தூயவன் எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! (என்று அவர்கள் கூறுவார்கள்).

வெளியீடு : TNTJ மாணவர் அணி

மேலும் ஹதீஸ் புத்தகங்கள், இஸ்லாமிய நூல்கள் இலவசமாக Download செய்ய Vsit : www.tntjsw.tk

இறைவனே கொடுத்த வரம்!பெற்றோர், உடன்பிறந்தோர், நட்பு, மனைவி, பிள்ளைகள், உறவினர்'

இவையாவும்… இறைவனே கொடுத்த வரம்!

பேணி மகிழ்வோம் நாம்... அவனே விதித்த நொடிவரை!

பொதுவாய் நம் வீடுகளில்… பெற்றோர், சகோதர சகோதரிகள், மனைவி, பிள்ளைகள், மாமனார், மாமியார் மற்றும் உறவுகளில்… நாம் உட்பட‌ பெரும்பாலோர் மார்க்க அறிவு குறைந்தவராகவே இருப்பதால்... குடும்பத்தில் சிறிய, பெரிய‌ பிரச்சினைகள் தொடர்நிலையாய் உருவானபடியேதான் இருக்கிறது.

நாம் ஒவ்வொருவரும், தினம் தினமும் விதவிதமான வழக்குகளினூடேயே வாழ்கின்றோம்.

இவர்களில், நம்மை அதீத மன உளைச்சலுக்குள்ளாக்கி அலைக்கழிப்பவரும் உண்டு.

முட்களாகிப்போன உறவுகளின்மீது விழுந்த சேலை‌யாய்...‌ நம் கண்ணியத்தை நாம் எப்படி தக்கவைத்துக்கொள்வது?

இஸ்லாத்தின் இனிய‌ கோட்பாட்டை விட்டால்… மார்க்கம் வேறில்லை நமக்கு.

நபி(ஸல்) கூறினார்கள்.

“நீ உன் தாய்க்கு சேவை செய். ஏனெனில், அவர்களின் பாதத்திற்குக் கீழே தான் சுவர்க்கம் உண்டு” (நூல்கள் : நஸயீ, தப்ரானி)

“தந்தை சுவன வாயில்களில் மத்திய வாயில் ஆவார்” (நூல்: ஸஹீஹுத் தர்கீப் வத்தர்ஹீப்)
“தந்தையின் திருப்தியில் அல்லாஹ்வின் திருப்தியும், தந்தையின் அதிருப்தியில் அல்லாஹ்வின் அதிருப்தியும் உள்ளது” (நூல்: ஸஹீஹுல் ஜாமிஉ 3500, ஸில்ஸிலா ஸஹீஹா 516 )

“முஃமின்களில் ஈமானால் பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே”.

“உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே” (நூல்: ஸுனனுத் திர்மிதி)

பெற்றோருக்கும் மனைவிக்குமிடையே எற்படும் மூர்க்கத்தமான‌ முரண்பாட்டை சரி செய்யவே இயலாத நிலையில்…

நாம் கற்றதை அமைதியாய் சொல்லிக்கொடுப்போம்...

அலட்சியப்படுத்திடும்போது, சற்று கண்டிப்புடன் புரியவைப்போம்.

அவர்கள் திருந்தும் வரை… ஒதுங்கி நின்று பொறுமையுடன் காத்திருப்போம்.

பின்பு, அவ‌ர்களிடம் அழகிய முறையில் நடந்துக் கொள்வோம்.நாம் என்ன செய்யக்கூடாது?

இல்லற தேவைக்காக‌ மனைவிக்கோ, பொருளாதாயத்திற்காக‌ பெற்றோருக்கோ ஓர்புறமாய் செவிசாய்க்கக் கூடாது.

முக்கியமாக‌, பெற்றதால்… தாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாமலும், தன் இரத்த பந்தங்களை விட்டுப் பிரிந்து நம்முடன் வாழ்வதால்… மனைவியின் சொல்லைக் கேட்டு பெற்றோரை விரட்டாமலும், நாம்தான் விழிப்புடன் இருக்க‌வேண்டும்!

மாமியார் Vs மருமகள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவே கூடாது.

நாம் சற்று வாய்மூடி விலகி நிற்பதே நலம். சாலச் சிறந்ததும்கூட!

காரணங்கள் எதுவானாலும்… நாம் இவர்களை வெறுக்காதிருப்போம்.

நாம் நிதானமிழந்து, இருவரில் ஒருவர் மீதோ அல்லது இருவரின் மீதோ அவசர நடவடிக்கை எடுத்துவிட்டால்…

பலியாகி, பரிதவிப்பது நம் (சந்ததிகளான) பிஞ்சுக் குழந்தைகளும், உடன்பிறந்தவர்களுமே!

சம்பந்த‌மேயில்லாத அப்பாவிகளை அல்லல் படுத்துவது நியாயமேயில்லை. இதனால் அவர்களின் வாழ்வில் ஏற்படும் கொடூரத்தை, பின்விளைவுகளை… சட்டென்று ஒரு கணத்தில் எவராலும் எளிதாய் கணித்திட‌ முடியாது.

காலம் கடந்தபின் உதிக்கும் ஞானத்தால்... யாருக்குமே பயனில்லை.நாம் என்ன செய்யவேண்டும்?

இன்றைய நம் கடமை என்ன? நாளைய மற்றும் எதிர்கால நமது பொறுப்புகள் என்ன? என்பதை நாம் தெளிவாக உணர்ந்து, பட்டியலிட்டு..., அவற்றை வாழ்நாள் குறிக்கோளாய் எழுதி வைக்கவேண்டும்.

இறையருளைத் தொடர்ந்து... நட்பும், உறவும் இல்லாமல் யாராலும், என்றும், எதையுமே சாதிக்க முடியாது. நம் குறிக்கோள்கள் நிறைவேற, இறைவனே தந்தருளிய‌ நட்பு மற்றும் உறவுகளின் உதவியுடன் செயலாற்றவேண்டும்.

நமது அன்பை அனவரிடமும் சரிச்சமமாய் பகிர்ந்தபடி, குடும்பத்தில் நிரந்தர நிம்மதியை நிலைநாட்டி, இறைவன் விரும்பும் குடும்பத் தலைவனாக‌வே வாழ்ந்து மடிவோம்… இறைவனே விதித்த நொடிவரை.

அன்புட‌ன்,
M.Mohamed Ismail

Aug 28, 2010

நீங்கள் தவ்ஹீத்வாதிகளா?

தவ்ஹீதின் இளைய சமுதாயமே! நீங்கள் தொழுகையில் விரலை அசைப்பதையும், தொப்பி அணியாமல் தொழுவதையும், தாடி வளர்ப்பதையும், கரண்டைக் காலுக்கு மேல் கை­ கட்டுவதையும், சமாதி வழிபாட்டை எதிர்ப்பதையும் மட்டும் தான் ஏகத்துவக் கொள்கை என்று நினைத்துக் கொண்டிருக்கின்றீர்களா?

இதை மட்டும் நீங்கள் கடைப்பிடித்து, மாற்றுக் கொள்கையுடையவர்களிடம் தவ்ஹீத் கொள்கையை நிலைநாட்டப் போராடினால் நீங்கள் தவ்ஹீத்வாதிகள் ஆகி விடுவீர்களா? இது மட்டும் தான் தவ்ஹீத் கொள்கையா? உங்களிடம் தவ்ஹீதில் உறுதியான கொள்கை பிடிப்பு இருக்கிறதா என்பதை மக்கள் எப்படிக் கணிக்கிறார்கள் தெரியுமா?

உங்கள் வாழ்நாளில் வரும் பல விஷயங்களைக் கவனித்து அதில் இவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்தே தவ்ஹீதின் கொள்கைப் பிடிப்பின் அளவை கணக்கிடுகிறார்கள். அதிலும் குறிப்பாக, திருமணம் செய்வதில் ஏகத்துவவாதிகளின் கொள்கைப் பிடிப்பை அளவிடுகிறார்கள்.

ஏகத்துவத்தின் பிடிப்பு எப்படி இருக்கிறது என்பதை அவர்களின் திருமணம் என்ற நிகழ்ச்சி அழகாகப் படம் பிடித்துக் காட்டி விடுகிறது.

திருமணத்தில் திருக்குர்ஆன் நபிவழியின் படி நடக்கிறார்களா? இல்லை பேருக்குத் திருமணத்தை நடத்துகிறார்களா? என்பதை மக்கள் பார்க்கிறார்கள். அவர்களின் பார்வையில் பெரும்பாலான தவ்ஹீத்வாதிகளின் திருமணம் பெயருக்கு இஸ்லாமிய திருமணமாகக் காட்சி தருகின்றது.

ஆம்! இன்று தவ்ஹீத்வாதிகள் என்று கூறுபவர்களின் திருமணமும் அதன் பின்னணியும் அவர்களின் கொள்கைப் பிடிப்பைத் தெளிவாக அடையாளம் காட்டத் தான் செய்கிறது.

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (அல்குர்ஆன் 4:4)

இந்த வசனத்தின் அடிப்படையில் தவ்ஹீத்வாதிகள் சில ரூபாய்களை அல்லது சிறிதளவு தங்கத்தை மஹராக கொடுத்து. ஒரு பயான் ஒன்றையும் வைத்து விட்டு நாங்கள் நபிவழித் திருமணம் செய்து விட்டோம் என்று கூறிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் முழுமையாக நபிவழியைப் பின்பற்றி திருமணம் செய்யவில்லை.

''நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். 1. அவளது செல்வத்திற்காக, 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக, 3. அவளது அழகிற்காக, 4. அவளது மார்க்கத்திற்காக. ஆகவே மார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர லி) நூல்: புகாரி (5090)

மணமகளை மார்க்கம் உள்ளவளாகத் தேர்வு செய்ய நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தும் பெரும்பாலான தவ்ஹீத்வாதிகள் மார்க்கம் தெரிந்தவளாக உள்ள பெண்ணை விட்டுவிட்டு, அழகும் பணமும் நிறைந்த பெண்ணையே தேர்வு செய்து கொள்கிறார்கள்.

பெண்ணுக்கு எவ்வளவு நகை போடுவார்கள்? எவ்வளவு சொத்துக்கள் தேரும்? என்பதைக் கணக்கிட்டே பெண் பார்க்கும் படலம் ஆரம்பமாகிறது.

''அழகான பையன், வீட்டிற்கும் ஒரே பையன், நீங்கள் எந்த வரதட்சணையும் தர வேண்டியதில்லை; 20 பவுன் நகையை உங்கள் பெண்ணுக்குப் போட்டால் போதும்; ஒரு ஐம்பதாயிரம் பணத்தை மகள் பெயரில் வங்கியில் போட்டு விடுங்கள்'' என்று கூறி திருமண ஒப்பந்தத்தை இரகசியமாகச் செய்து கொள்பவர்கள் உண்மையில் தவ்ஹீத் மாப்பிள்ளையா? இப்படிப் பேரம் பேசும் பெற்றோரின் நடவடிக்கைகளுக்கு ஒத்து போகுபவர்கள் தவ்ஹீத் மாப்பிள்ளையா?

வசதி படைத்த பெண்ணை முடித்து விட்டால் அவர்களிடமிருந்து பின்னர் சுருட்டி விடலாம் என்ற எண்ணமும் உள்ளூர இருக்கிறது. பெண்ணைப் பெற்றவர்கள் சும்மாவா அனுப்பி விடுவார்களா? மருமகனுக்குப் பிற்காலத்தில் எதையும் தராமலா போய் விடுவார்கள்? என்ற நப்பாசை தான் வசதி படைத்த வீட்டுப் பெண்ணை, அப்பெண் மார்க்கம் தெரியாமல் இருந்தாலும் தேர்ந்தெடுக்கச் சொல்கிறது.

இஸ்லாத்தை ஏற்பதையே மஹராக ஆக்கிக் கொள்கிறேன் என்று கூறி அபூதல்ஹா (ரலி ) அவர்களை இஸ்லாத்தின் பால் கொண்டு சேர்த்த உம்மு ஸுலைம் (ரலி ) அவர்களின் கொள்கைப் பிடிப்பில் கொஞ்சமாவது தவ்ஹீத்வாதிகளிடம் வர வேண்டாமா?

''வரதட்சணை கொடுத்து எங்களைத் திருமணம் செய்து வைக்க வேண்டாம். நபிவழித் திருமணமாக இருந்தால் மட்டுமே நாங்கள் திருமணம் செய்து கொள்வோம்'' என்று உறுதியோடு இருக்கும் பெண்களை தவ்ஹீத்வாதிகள் திருமணம் முடித்துக் கொள்ளாவிட்டால் வேறு யார் தான் முடிப்பார்கள்? கொள்கையில் பிடிப்புள்ள பெண்களை திருமணம் புரிவதற்கு முன்வராதவர்கள் தவ்ஹீத்வாதிகளா?

மஹர் என்ற பெயரில் சில ரூபாய்களை கொடுத்து விட்டு பல இலட்சங்களை கொள்ளை வாசல்வழியாக எடுக்கத் திட்டம் போடுபவர்கள் தவ்ஹீத் கொள்கைவாதிகளா? திருமணத்தை ஆடம்பரமாக நடத்துபவர்கள் கொள்கைப் பிடிப்புள்ளவர்களா?

மறுமை நாள் ஒன்று உண்டு என்று உறுதியாக நம்பும் தவ்ஹீத்வாதிகள், நம் உள்ளத்தில் உள்ளதை அறிந்த அந்த அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் என்ற அச்ச உணர்வுடன், திருமணம் உட்பட அனைத்திலும் திருக்குர்ஆன் நபிவழிகளை முழுமையாகப் பின்பற்றி நடக்க வல்ல அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரியட்டும்!

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? ''அல்லாஹ்வின் பாதையில் புறப்படுங்கள்!'' என்று உங்களிடம் கூறப்படும் போது இவ்வுலகை நோக்கிச் சாய்ந்து விடுகிறீர்கள்! மறுமையை விட இவ்வுலக வாழ்வில் திருப்தி அடைகிறீர்களா? மறுமைக்கு முன்னால் இவ்வுலக வசதி அற்பமானது. (அல்குர்ஆன் 9:38)

Aug 25, 2010

அன்புள்ள அப்பா!
குழந்தை வளர்ப்பு என்பது பெரும்பாலான ஆண்களைப் பொறுத்த வரை பெண்கள் சமாச்சாரம். குழந்தையை விரும்புகிற அப்பாக்கள் கூட, கைக் குழந்தையைத் தூக்கவோ அதைக் கவனித்துக் கொள்ளவோ தயாராக இருப்பதில்லை. காரணம் குழந்தையை தூக்கும் போது சிறுநீர், மலம் கழிக்கலாம். அல்லது வாந்தி எடுக்கும். இதனால் அருவருப்பு அடையும் அப்பாக்கள் சிலர் குழந்தைப் பருவ சிரமங்களைக் கடந்த பிறகு, குழந்தை ஓரளவுக்கு வளர்ந்த பிறகே அதன் வளர்ச்சியில் அக்கறை எடுத்துக் கொள்வார்கள். இந்த மனப்பான்மை மிகத் தவறானது என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். குழந்தை வளர்ப்பில் ஆரம்ப காலத்திலிருந்தே அப்பாக்களும் பழக்கப்படுத்தபட வேண்டும் என்கிறார்கள் அவர்கள். எந்தெந்த விதங்களில் குழந்தை வளர்ப்பில் பங்கு கொள்ளச் செய்ய முடியும் என்பதற்கு சில யோசனைகள். பிறந்த குழந்தையைத் தூக்க முதல் நாளிலிருந்தே தன் கணவனுக்கே கற்றுத்தர வேண்டும் மனைவி. கழுத்து நிற்காத குழந்தையை எப்படி பிடித்துக் கொள்ள வேண்டும், எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒன்றிரண்டு முறைகள் கற்றுக் கொடுத்தால் பழகி விடும். தாய்ப்பால் குடிக்காத குழந்தைக்கு பாலாடையில் அல்லது பாட்டிலில் எப்படிப் பால் கொடுக்க வேண்டும் என்பதை குழந்தையின் அப்பாவுக்கும் கற்றுத் தரலாம். இதனால் குழந்தை அழும்போதெல்லாம் பிரசவித்த தாய் எழுந்து, உடலை வருத்திக் கொள்ளாமல் சற்று நேரமாவது ஓய்வெடுக்க முடியும். கணவன்&மனைவி இருவருமே வேலைக்குச் செல்கிறார்களானால் குழந்தைக்குச் செய்ய வேண்டிய வேலைகளை இருவரும் பகிர்ந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு குழந்தையைக் குளிப்பாட்டுவது, சாப்பாடு கொடுப்பது போன்றவற்றை ஒருவரும், இரவில் அதற்குச் சாப்பாடு கொடுத்துத் தூங்க வைப்பதை இன்னொருவரும் பிரித்துக் கொள்ளலாம். என்ன தான் பிசியான வேலையில் இருந்தாலும், தினம் சிறிது நேரத்தைக் குழந்தையுடன் செலவிடுவதை வழக்காமாகக் கொள்ளும்படி அவரைப் பழக்குங்கள். அப்பாவின் முகத்தைப் பார்த்ததும் சில குழந்தைகள் குழந்தை ஏதேனும் பேச முயற்சி செய்யும். அம்மாவிடம் கூட இப்படி இருக்காது. அவற்றறைக் காது கொடுத்து கேட்க வேண்டியது முக்கியம். எனக்கு நேரமில்லை அம்மா கிட்ட சொல்லு என்று தட்டிக் கழிப்பதுதான் உதாசீனப்படுத்தப் படுகிறோம் என்ற உணர்வைக் குழந்தையின் மனதில் ஏற்படுத்தி விடும். குழந்தை விருப்பமானதையெல்லாம் வாங்கிக் கொடுப்பதோடு அப்பாக்களின் கடமை முடிந்து விடுவதில்லை. தன் அன்பை அடிக்கடி வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும். வார்த்தைகளாலும், செயல்களாலும் மட்டுமே அன்பைக் குழந்தைகளால் புரிந்து கொள்ளமுடியும். குழந்தையின் பள்ளிக்கூடத்தில் விசேஷ நாட்கள், ஆண்டு விழா போன்றவற்றிற்குத் தவறாமல் தந்தை செல்ல வேண்டும்.

அம்மா என்றால் அன்பு. அப்பா என்றால் அறிவு.குழந்தைக்கு அன்பையும் அறிவையும் தருவது பெற்றோர் மட்டுமல்ல. சுற்றுச்சூழலும்தான்.
எல்லா அம்மாக்களும் குழந்தைகள் மீது அன்பைக் பொழிவதும் இல்லை. எல்லா அப்பாக்களும் குழந்தைக்கு நல்லறிவைத் தருவதும் இல்லை.
தாயுமாகி குழந்தையை கவனிக்கும் தந்தையும் உண்டு. தந்தையுமாகி குழந்தையைக் கவனிக்கும் தாயும் உண்டு.
இருவரில் ஒருவரது அன்பு அல்லது அரவணைப்பு குறைந்தாலும் மனோரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகள் ஏராளம்.
இன்றைய அவசரமான உலகில் குழந்தைக்கு நல்ல அப்பாவாக நீங்கள் இருக்கிறீர்களா?
நல்ல அப்பாவுக்கு அளவுகோல் என்ன?
இங்கே பத்து வழிகள் தரப்பட்டுள்ளன. இவற்றைக் கடைப்பிடித்தால் நீங்கள் ஒரு நல்ல அப்பாவாக மட்டுமின்றி நல்ல குடும்பத் தலைவனாகவும் இருக்க முடியும்.

1. உங்கள் குழந்தையின் தாயை மதியுங்கள்
ஒரு நல்ல அப்பாவுக்கு மிக முக்கியமான தகுதி என்ன தெரியுமா? அவர் தனது மனைவியை மதிக்க வேண்டும். உங்கள் திருமண உறவை வலுவாக வைத்திருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் விவாகரத்து ஆனவராக இருந்தாலும், உங்கள் குழந்தையின் தாய்க்கு உரிய மரியாதை தர வேண்டும்.
கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். இது தங்கள் குழந்தைகளுக்குத் தெரியும்படி நடந்துகொள்ள வேண்டும். குழந்தைகள் தங்களுக்குப் பாதுகாப்பான சூழல் இருப்பதாக கருதும்படி செய்ய வேண்டும்.
தங்களுடைய தாயும் தந்தையும் ஒருவர்மீது ஒருவர் வைத்திருக்கும் மரியாதையைப் பார்க்கும் குழந்தைகள், இருவரையும் மனதார ஏற்று அவர்களை மதிக்க கற்றுக் கொள்வார்கள்.

2. குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்
‘‘உங்களுடன் கொஞ்ச நேரமாவது செலவழிக்க வேண்டும். அப்போதுதான் எனக்கு நிம்மதி’’ என்று குழந்தைகளிடம் சொல்லுங்கள். அதைவிட்டு, எப்போதும் பிஸியாக இருப்பது போல அலைந்து கொண்டிருந்தால், தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உங்கள் குழந்தைகள் நினைத்து விடக்கூடும். நீங்கள் என்னதான் காரணம் சொன்னாலும் அதை அவர்கள் ஏற்க மாட்டர்கள்.
குழந்தைகள் எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆனால், குழந்தைகளுடன் நீங்கள் நேரம் செலவழிப்பது மிகவும் அவசியம். குழந்தைகள் வேகமாக வளரக்கூடியவர்கள். அவர்கள் இழக்கும் சந்தோஷங்களை எப்போதும் திரும்பப் பெற முடியாது என்பதை உணருங்கள்.

3. குழந்தைகளின் பிரச்சனைகளை கேளுங்கள்
‘‘ஒங்க அப்பா ஏதோ சொல்லணும்னார்’’ ‘‘அப்பா வரட்டும் பேசிக்கலாம்’’ என்று குழந்தைகளிடம் அம்மா கூறுவதைக் கேட்டிருக்கிறோம். சிறுவயதில் தவறுகள் செய்வது குழந்தைகளின் இயல்பு. நீங்களும் உங்கள் சிறு வயதில் தவறுகள் செய்தவர்தான்.
எனவே, உங்கள் குழந்தைகள் தவறு செய்யும்போது, அவர்களுக்கு எளிதில் புரியும்படி பிரச்சனைகளை விளக்குங்கள். தங்கள் செயலுக்கு அவர்கள் சொல்லும் நியாயங்களைக் கேளுங்கள். அவர்களை நேர்ப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு குழ்ப்பிவிடாதீர்கள்.

4. அன்பு கலந்த ஒழுங்கு அவசியம்
எல்லா குழந்தைகளுக்கும் ஒழுங்கு கட்டுப்பாடு அவசியம்தான். தங்களை வழிநடத்த வேண்டும் என்று குழந்தைகள் விரும்புவார்கள். குழந்தைகளிடம் அன்பு செலுத்தும் அதேசமயத்தில், அதற்கு ஒரு வரம்பு வைத்துக் கொள்ளுங்கள்.
குழந்தைகளின் ஒவ்வொரு காரியத்திற்கும் பின் விளைவுகளை விளக்குகள். அவர்களுடைய விரும்பத்தக்க நடத்தைகளை அர்த்தத்துடன் பாராட்டுங்கள். குழந்தைகளிடம் கட்டுப்பாட்டுடனும், அமைதியான விதத்திலும் உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.

5. முன்மாதிரியாக இருங்கள்
அப்பாக்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, குழந்தைகளுக்கு அவர்கள்தான் முன்மாதிரியாக இருக்கிறார்கள். தந்தையின் பாதிப்பு இல்லாத குழந்தைகள் மிகவும் அரிது. அப்பாவுடன் நிறைய நேரத்தை செலவிடும் பெண்குழந்தை வளரும்போது, பையன்களால் மதிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். தந்தையின் குணாம்சத்தை கணவரிடமும் எதிர்பார்க்கிறாள். வாழ்க்கையில் எது முக்கியம் என்பதை மகனுக்குத் தந்தை புரியவைக்க வேண்டும். நேர்மையையும் பொறுப்புணர்வையும் கற்றுத்தர வேண்டும். உலகம் முழுவதும் நாடக மேடை. அதில் ஒரு அப்பாவுக்கு முக்கிய பாத்திரம் இருக்கிறது. அந்தப் பாத்திரத்தை அவர் செம்மையாக செய்ய வேண்டும்.

6. ஆசிரியராய் இருங்கள்
கற்றுக் கொடுப்பது அடுத்தவருடைய வேலை என்று அப்பாக்களில் பலர் நினைக்கிறார்கள். ஆனால், நல்லதையும் கெட்டதையும் பற்றி தனது குழந்தைகளுக்குக் கற்றுத்தரும் அப்பா, தனது குழந்தைகள் மிகச் சிறந்த காரியங்களை செய்ய ஊக்குவிக்கும் அப்பா, தனது குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார். அன்றாட நிகழ்வுகளை உதாரணமாக்கி தனது குழந்தைக்கு வாழ்க்கையின் அடிப்படையைப் புரியவைக்க ஒரு அப்பாவால் முடியும்.

7. குடும்பத்துடன் சாப்பிடுங்கள்
மூன்று வேளைகளில் ஏதேனும் ஒரு வேளை குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடுங்கள். இது ஆரோக்கியமான குடும்ப உறவுக்கு மிகவும் முக்கியமானது. பரபரப்பான வாழ்க்கையில் இந்த பகிர்தல் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும். தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம். என்ன செய்யப்போகிறோம் என்பதை உங்களிடம் கூறுவார்கள். அவர்கள் கூறுவதைக் கேட்டு அவர்களுக்கு அலோசனை வழங்குவதற்கு அப்பாக்களுக்கு நேரம் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக குடும்பத்தினர் அனைவரும் ஒருசேர அமர்ந்து சாப்பிடுவதில் கிடைக்கிற சந்தோஷம் ரொம்பவும் முக்கியம்.

8. குழந்தைகளுக்குப் படித்துக் காட்டுங்கள்
இன்றைய உலகில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இணையதளங்களும் குழந்தைகளின் வாழ்க்கையை ஆக்கிரமித்துவிட்டன. இத்தகைய சூழலில் அவர்களுக்காக படித்துக் காட்டுவதற்கு அப்பாக்கள் முயற்சி செய்ய வேண்டும். காரியங்களில் ஈடுபடும்போதும், படிக்கும் போதும், பார்க்கும்போதும், கேட்கும்போதும் குழந்தைகள் நிறைய கற்றுக்கொள்கிறார்கள். சிறு குழந்தையாக இருக்கும்போதே அவர்களுக்குப் படித்துக்காட்டி படிக்கும் பழக்கத்திற்கு தயார்படுத்துங்கள். அவர்கள் பெரியவர்களாகும் போது, தாங்களாகவே படிப்பதற்கு ஊக்குவியுங்கள். படிப்பின் மீது காதல் கொள்ளும் வகையில் உங்கள் பிள்ளையை தயார்படுத்திவிட்டால், அவர்களுடைய வாழ்க்கை வளமாகிவிடும். தனிப்பட்ட வாழ்க்கை முன்னேற்றத்திற்கும், தொழில்ரீதியான முன்னேற்றத்திற்கும் படிப்பு மிகச்சிறந்த துணையாகும்.

9. பிரியத்தோடு இருங்கள்
தாங்கள் விரும்பப்படுகிறோம். தங்கள் குடும்பத்தினரால் அன்பு செலுத்தப்படுகிறோம். அவர்களால் அங்கீகரிக்கப்படுகிறோம் என்பது தெரியும்போதுதான் குழந்தைகள் பாதுகாப்பாக உணர்கின்றன. குழந்தைகளிடம் பேசுவதையும் அவர்களை அணைத்து முத்தமிடுவதையும் அப்பாக்கள் விரும்பவேண்டும். தினந்தோறும் குழந்தைகளை அணைத்து கொஞ்சிப் பாருங்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளை விரும்புகிறீர்கள் என்பதை தெரியப்படுத்திப் பாருங்கள். குழந்தைகளிடம் மிகப்பெரிய மாறுதலை காண்பீர்கள்.

10. அப்பாவுக்கு நிகர் அப்பாதான்
குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானாலும் அப்பாவின் ஆலோசனைக்கும், அறிவுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் நிலையில்தான் இருப்பார்கள். பள்ளிப் படிப்பை தொடர்வதாகட்டும், புதிய வேலையில் சேருவதாகட்டும், திருமணமாகட்டும் குழந்தைகள் வளர்ந்து திருமணம் செய்து, தங்களுடைய சொந்த குடும்பத்தை உருவாக்கும் வரையில் அப்பாவின் பங்கு மிகவும் அவசியமானது. எனவே, நீங்கள் நல்ல அப்பாவாக மாறுங்கள்.

குழந்தைகளிடம் தன்னம்பிக்கை.........
குழந்தைகளிடம் வளர வேண்டியதும், வளர்க்கப்பட வேண்டியதும் தன்னம்பிக்கை. சிறுவயதில் ஊன்றப்படுகின்ற தன்னம்பிக்கை வித்துதான், பெரியவர்களாகின்ற போது விருட்சமாக வளர்ந்து மிகப் பெரிய மரமாகிறது.

குழந்தைகளிடம் தன்னம்பிக்கை வளராமல் போவதற்கு என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும். பரிணாம ரீதியாகவே குழந்தை வளர்கின்றபோது, எதையும் தானே செய்ய வேண்டும் என்கிற முனைப்பு அதனுடன் கூடவே சேர்ந்து வளர்கிறது.

ஆனால் குழந்தைகளைக் கண்டிப்புடனும், கட்டுப்பாட்டுடனும் வளர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில் பெற்றோர்கள் குழந்தையின் சுதந்திரமான செயல்பாடுகறுக்குத் தடைபோட்டு விடுகிறார்கள். எதைச் செய்ய வேண்டும் என்று சொல்வதைவிட, எதைச் செய்யக் கூடாது என்று சொல்வதுதான் பெரியவர்களிடம் அதிகமாக இருக்கிறது.

ஆழமான விளைவுகளைப் பற்றிப் பெற்றோர்கள் சிந்திப்பதே இல்லை. தங்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு கொடுப்பதாகப் பெற்றோர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் அந்தக் குழந்தைகள் பெரியவர்களாகின்றபோது பாதுகாப்பற்ற நிலையினையே உணர்கிறார்கள். தங்களுடைய திறமையில் அவர்களுக்கு நம்பிக்கை வருவதில்லை.

குழந்தைப் பருவத்தில் விதிக்கப்பட்ட தடை உத்தரவுகள் அனைத்தும் ஆழ்மனப் பதிவுகளாகி, நம்மால் முடியாது என்கிற அவநம்பிக்கையினைத் தோற்றுவித்து விடுகின்றன. சரி சிந்தனைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம்.

குழந்தைப் பருவத்தில் எந்த ஒரு காரியத்தையும் குழந்தைகள் சிந்திக்காமல் செய்வதில்லை. காரணம் சிந்தனைகள் உருவாகி வளர்கின்ற பருவம் இது. உதாரணமாக குழந்தைகள் எதைப் பார்த்தாலும் சிந்திக்கத் தொடங்குகின்றன.

ஒரு பொருளைப் பார்த்தவுடன் அதனால் கவரப்பட்டு அதைத் தொட்டுப் பார்த்து உணர ஆசைப்படுகிறது. இதெல்லாம் சங்கிலித் தொடர் போன்ற சிந்தனை வளையங்களின் விளைவு. குழந்தைகளிடம் சிந்தனைப் பரிணாமம் இப்படித்தான் உருவாகிறது. செயல்கள் சிந்தனையால் உந்தப்படுகின்றன. சிந்தனை இல்லாமல் செயல் இல்லை

பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும்..முன்பெல்லாம் கூட்டுக்குடும்பமாக இருந்தோம் அப்பா அம்மா தனியாகவும் குழந்தைகள் பாட்டி, தாத்தாவுடன் படுப்பாங்க. ஆனால் இப்ப தனி குடும்பமாக இருப்பதால் குழந்தைகளை அப்பா,அம்மாவுடன் படுக்கும் சூழ்நிலை வந்துள்ளது. அப்படி ரூம்மில் ஒன்றாக படுக்கும் குழந்தையின் முன்பு பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும்.. வயது முதல் 13 வயது வரை இருக்கும் குழந்தைகள் முன்பு பெற்றோர்கள் மிகந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகள் மனதில் பார்க்கும் அனைத்து விஷயங்களும் மனதில் பதியும் நேரம். மனதில் ஏதாவது விஷயங்கள் பதிந்துவிட்டால் பெரியவர்கள் ஆனாலும் மனதினை விட்டு நீங்காது மனநலக் கோளாறுகள் வரலாம்.

முடிந்த வரை சிறு வயதில் குழந்தையினை தொட்டிலில் போட்டு பழக வேண்டும். அப்பொழுது கூட கட்டிலின் அருகில் தொட்டியில்லாமல் இருப்பது நலம். சின்ன சின்ன சப்தங்கள் கூட இனம் புரியாத பயத்தை ஏற்படுத்தலாம்.குழந்தைகள் தூங்காமல் இருக்கும் பொழுது கட்டாயமாக கணவர்,மனைவிகள் நெருக்கமாக இருக்கக்கூடாது. பார்க்ககூடாதை குழந்தைகள் பார்த்துவிட்டால் தாய் தந்தை மீது குழந்தைக்கு வெறுப்பு காட்ட தொடங்கும். அவர்கள் பெரியவர்கள் ஆனாலும் ஒருவித வெறுப்புடனே இருப்பதாக மனநல மருத்துவர் கூறுகிறார்கள். ஆகையல் அவங்களுக்கு திருமணத்தில் கூட நாட்டமில்லாமல் போகுமாம்.அல்லது குழந்தைகளுக்கு வேறு விதமான பாதிப்புகள் கூட வரலாம். குழந்தைகள் பார்த்த காட்சி என்னவாக இருக்கும் என்று ஆராயுமாம். இந்த தேடல் அவர்களை கெட்டழிந்த போய்விடவும் வாய்ப்புண்டு.

குழந்தையினை நாமே கெட்டுபோக வழி செய்யாமால் நாமும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நலம். அதுக்கு சிறு குழந்தையாக இருக்கும் பொழுது அப்பா அம்மாவுக்கு நடுவில் குழந்தையினை படுக்க வைத்துவிட்டு குழந்தை நன்றாக தூங்கிய பின்பு வேறு ரூம்மிலோ அல்லது அதே ரூம்மிலோ இல்லறத்தில் ஈடுபடலாம்.5 வயதுக்கு மேல் வெளி நாடுகளில் இருக்கும் பழக்கம் போல் தனி அறையில் படுக்க வைப்பது நல்லது. முதல் கொஞ்ச நாட்களுக்கு கஷ்டமாக இருக்கும். போக போக பழகிவிடும். அவர்களை தனிமையில் படுக்க வைத்தாலும் உங்கள் மேல் பார்வையில் குழந்தையிருப்பது போல் பார்த்துக்கொள்ளவும்.ஒரே ரூம் தான் இருக்கு நாங்க என்ன செய்வது என்று கேட்கிறிங்களா? வளரும் குழந்தைகள் வீட்டில் இல்லாத பொழுது இல்லறத்தில் ஈடுபடலாம்.. இதற்கு கணவர் மனைவி இருவரும் குழந்தையின் நலன் கருதி சில விஷயங்களை தியாகம் செய்து தான் ஆகனும்.

Aug 24, 2010

ஹலாலான உழைப்பின் சிறப்பு

இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.

தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)

உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

அல்லாஹ்வின் தூதரே! பரிசுத்த மான தொழில் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், (மோசடியில்லாத) நல்ல ஒவ்வொரு வியாபாரமும் என்று நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)

ஹலாலான உணவைத் தேடுவது (தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற) ஃபர்ளான காரியங்களை அடுத்துள்ள ஃபர்ளாகும். (நூல் : பைஹகீ)

உண்மையான நம்பிக்கைக்குரிய வியாபாரி (மறுமையில்) நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த்தியாகம் செய்த ஷுஹதாக்களு டனும் இருப்பார். (நூல் : திர்மிதீ)

பகலெல்லாம் உழைத்துக்களைத்தவர் மாலைக்குள் மன்னிக்கப்பட்டவர் ஆவார் என நபியவர்கள் கூறினார் கள். (ஆதாரம் : முஃஜம்)

உழைப்பைக் கற்றுக் கொடுத்த உத்தம நபி :

நபிகளாரின் சமூகத்தில் அன்ஸாரி ஸஹாபி ஒருவர் தன் தேவையைக் கூறி உதவி தேடினார். தங்களிடம் ஒன்றுமே இல்லையா? என நபியவர்கள் வினவ, முரட்டுக் கம்பளி போர்வையும், ஒரு கோப்பையும் எனது வீட்டில் இருக்கிறது எனக் கூறினார். பாதியை விரித்தும், பாதியைப் போர்த்தியும் கொள்வேன். பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பேன் என்றார். அதைக் கொண்டு வருமாறு நபியவர்கள் கூற, அதை அவர் கொண்டு வந்தார்.

அவ்விரு பொருட்களையும் நபியவர்கள் ஏலம்விட, ஒரு திர்ஹத்திற்கு அதை வாங்கிக்கொள்ள ஒரு ஸஹாபி முன்வந்தார். அதைவிட அதிகமாக வாங்குபவர் உண்டா? என நபியவர்கள் மூன்று முறை கூற, இரண்டு திர்ஹங்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி மற்றொரு ஸஹாபி அதை வாங்கிக் கொண்டார்.

பின்பு அந்த அன்ஸாரி தோழரை அழைத்து இதில் ஒரு திர்ஹத்திற்கு வீட்டிற்கு தேவைப்படும் உணவுப் பொருளையும், மற்றொரு திர்ஹத்திற்கு ஒரு கோடாரியும் வாங்கி என்னிடம் கொண்டு வாருங்கள் எனக் கூறி, அவ்விரு திர்ஹங்களையும் அந்த ஸஹாபியிடம் நபியவர்கள் ஒப்படைத்தார்கள். அவர் அவ்வாறே செய்தார். நபியவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் அந்தக் கோடாரிக்கு கணை போட்டு அவரிடம் அதைக் கொடுத்து, இதை எடுத்துச் சென்று விறகு வெட்டி சம்பாதியுங்கள்; பதினைந்து நாட்களுக்குப்பின் இங்கு வாருங்கள். அதற்கு முன்பு வர வேண்டாம் எனக் கூறியனுப்பினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்.

சில நாட்களில் அவர் பத்து திர்ஹங்களை சம்பாதித்தார். அதில் அவருக்குத் தேவைப்படும் துணிகளையும், வீட்டிற்குத் தேவையான தானியங்கள் மற்ற பொருட்களையும் வாங்கியிருந்தார். இந்நிலையில் அவரைக் கண்ட நபியவர்கள், நீர் பிறரிடம் தேவையாகி அருவறுப்பான அடையாளங்களோடு மறுமையில் வருவதைவிட தற்போது நீர் இருக்கும் நிலை எவ்வளவு அழகானது எனப்பாராட்டி னார்கள். உழைப்பால் உயர்வும், யாசகத்தால் இம்மை - மறுமையில் இழிவும் ஏற்படும் என்பதை நபியவர்கள் தெளிவாக சுட்டிக் காட்டினார்கள்.

எனவேதான், எண்ணற்ற இடங்களில் இக்கருத்து குர்ஆன் – ஹதீஸ்களில் வலியுறுத்தப்படுகிறது. மேலும் நபிமார்களும், அறிஞர்களும், வணக்க சாலிகளும் தமது வாழ்க்கையின் ஓர் அங்கமாக உழைப்பை ஆக்கிக் கொண்டனர்.

நபிமார்களும் அவர்கள் செய்த தொழிலும்

நபி ஆதம்(அலை) அவர்கள் - விவசாயம்

நபி இப்ராஹீம்(அலை) அவர்கள்- விவசாயம்

நபி லூத்(அலை) அவர்கள் - விவசாயம்

நபி யஸஃ (அலை) அவர்கள் - விவசாயம்

நபி ஸாலிஹ் (அலை) அவர்கள்- வியாபாரம்

நபி ஹாரூன்(அலை)அவர்கள் - வியாபாரம்

நபி நூஹ்(அலை) அவர்கள்- தச்சுத் தொழில்

நபி ஜக்கரிய்யா(அலை) அவர்கள் -தச்சுத் தொழில்

நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் - வேட்டையாடுதல்

நபி யஃகூப்(அலை) அவர்கள்-ஆடு மேய்த்தல்

நபி ஷுஐப்(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல்

நபி மூசா(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல

நபி லுக்மான்(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல்

நபி (ஸல்) அவர்கள்- ஆடு மேய்த்தல்

சரித்திரத்தை உற்றுநோக்கும் போது நபிமார்கள், வலிமார்கள், அறிஞர்கள் அனைவரும் தங்களது கரங்களால் உழைத்தே சாப்பிட்டுள்ளார்கள். கலீஃபா உமர்(ரலி) அவர்களும் தங்களின் உபதேசத்தில் இவ்வாறு கூறுகின்றார்கள். உலமாக்களே! நன்மையான விஷயத்தில் முந்துங்கள். இறையருளைத் தேடுங்கள். மக்களின் மீது கடுமையாக ஆகி விடாதீர்கள். ஆதாரம்: ஜாமிஉ பயானில் இல்மி,வஃபர்ளிஹி

ஹராமான உணவால் ஏற்படும் விளைவுகள்

1. நல்ல அமல்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.

2. அவ்வாறு செய்தாலும் அதில் இன்பம் இருக்காது.

3. நற்செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

4. துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படாது.

5. செல்வத்தில் பரக்கத் இருக்காது.

6. கெட்ட செயல்களைச் செய்யுமாறு உள்ளம் தூண்டும்.

7. குழந்தைகள் மோசமாகிவிடுவார்கள்.

8. ஹராமான பணம் வந்ததைப் போன்றே சென்றுவிடும்.

9. ஹராமான பொருளைச் சாப்பிடுபவன் சொர்க்கம் செல்லமாட்டான்.

10. ஹராமால் வளர்ந்த சதை நரகத்திற்கே உரியது.

11.ஹராமை சாப்பிடுபவன் அல்லாஹ், ரசூல் ஆகியோரின் கோபத்திற்கு ஆளாவான்.

எடுத்துக்காட்டாக இங்கே சில வற்றைக் குறிப்பிட்டாலும் இன்னும் ஏராளமான தீமைகள் ஹராமான வருவாயில் உள்ளன. எனவேதான், ஹராமை விட்டும் தவிர்ந்திருக்கும்படி குர்ஆன் ஹதீஸில் வலியுறுத்தப்படுகிறது.

மேலும், உங்களுடைய பொருட்களை உங்களிடையே தவறான முறையில் (ஒருவருக்கொருவர்) உண்ணாதீர்கள். இன்னும், நீங்கள் அறிந்து கொண்டே மனிதர்களின் பொருட்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணும் பொருட்டு, அவற்றை அதிகாரிகளிடம் (இலஞ்சமாகக்) கொண்டு செல்லாதீர்கள். (அல்குர்ஆன். 2:188)

இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் (ஒருவருக்கொருவர்) ஒப்புதலின்அடிப்படையில் நடைபெறும் வணிகத்தின் மூலமாகவேயன்றி, உங்களிடையே ஒருவர் மற்றவரின் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (அல்குர்ஆன் 4:29)

ஹலாலான உணவுதான் நல்ல அமல் செய்ய உதவும்; ஆகையால்தான், இறைவன் தன் அருள்மறையில், "இறைத்தூதர்களே! ஹலாலான உணவை உண்ணுங்கள். நல்ல அமல்கள் செய்யுங்கள். நீங்கள் செய்கின்ற அமலை நான் அறிந்தவனாக இருக்கின்றேன்" எனக் கூறியுள்ளான். ஹலாலான உணவுக்கும் நற்செயலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது இவ்வசனத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.

ஹலாலான உணவின்றி வணக்கத்தில் இன்பம் இருக்காது.

ஹிஜ்ரி 261-ல் மரணித்த மாமேதை பாயஜீது புஸ்தாமீ(ரஹ்) அவர்கள் தம்மைப் பற்றிக் கூறுகிறார்கள்:

நான் மிகவும் அதிகம் வணக்க வழிபாடுகள் செய்து வந்தேன். எனினும் அதில் இன்பத்தைக் காண முடிய வில்லை. எனவே, அதற்குரிய காரண ங்களை பல விதத்தில் சிந்தித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தேன். அதாவது என்னைக் கர்ப்பமுற்ற காலத்தில் என் தாய் சந்தேகத்திற்குரிய பொருட்களில் ஒன்றைச் சாப்பிட்டிருப்பார்களோ என எண்ணி என் தாயிடம் இதைக் கூறினேன்.

ஆம்! ஒரு நாள் உன்னைக் கருவறையில் சுமந்திருந்தபோது இன்ன வீட்டு மாடியில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் உள்ள ஒரு கனியைப் பறித்துச் சாப்பிட்டேன். அதற்குரியவரிடத்தில் அனுமதி வாங்க வில்லை என்றார்கள். பாயஜீது புஸ்தாமீ கூறுகிறார்கள்: என் தாயின் மூலம் அந்த பொருளுக்குரியவரிடத்தில் அதை ஹலாலாக்கிய பின்னர் தான் எனது வணக்கத்தில் இன்பம் ஏற்பட்டது. ஆதாரம்: கல்யூபி, பக்கம்:37

ஹராமான உணவால் செய்யும் அமல்கள் ஏற்கப்படாது. "பத்து திர்ஹங்கள் கொடுத்து ஒருவர் ஓர் ஆடையை வாங்கினார். அதில் ஒன்பது திர்ஹம் ஹலாலாகும். ஒரேயொரு திர்ஹம் மட்டும் ஹராமாகும். இந்த ஆடையை அவர் அணியும் காலமெல்லாம் அவரது எந்த நல்லமலும் ஏற்றுக்கொள்ளப்படாது. (அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரழி) நூல்:மிஷ்காத்,பக்கம்:243)

ஒரு முறை சஅத் பின் அபீவக்காஸ்(ரழி) அவர்கள் நபியவர் களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் கேட்கும் துஆவை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தாங்கள் துஆ செய்யுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், "சஅதே! உங்களின் உணவை ஹலாலானதாகவும் சுத்தமானதாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். துஆக்கள் ஏற்றுக்கொள் ளப்படும் மனிதர்களில் நீர் ஆகி விடுவீர். ஹராமான ஒரு கவள உணவு நாற்பது நாட்களின் நல்லமல்களை ஏற்றுக்கொள்ளப்படாமல் ஆக்கிவிடும். மேலும், ஹராமான உணவில் உருவான சதை நரகத்திற்கே உரியதாகும்" என்று கூறினார்கள். (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர், பாகம்:1,பக்கம்:203) நன்றி:மனாருல்ஹுதா ஜூலை 2007

Aug 23, 2010

வாருங்கள், சுவர்க்கத்தை பார்வையிடுவோம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

மறுமையை நம்புவது ஈமானின் அடிப்படைகளில் ஒன்றாகும், மறுமையை நம்புவதென்பது மரணத்திற்கு பின் மறுமை என்னும் வாழ்வு இருக்கின்றது என்பதாகும், மறுமையில் அல்லாஹ் நல்லடியார்களுக்கு சுவர்க்கத்தையும், இறை நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தையும் ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான். சுவர்க்கம் என்றால் என்ன, அதில் கிடைக்கும் இன்பங்கள் என்ன என்பதை கூறி, அதன் பக்கம் மக்களை ஆர்வம் காட்ட வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அச்சுவர்க்த்திற்கு செல்லக்கூடிய வாய்ப்பையும் அதற்குரிய அமல்கள் செய்யும் நல்வாய்ப்பினையும் தந்தருள்வானாக.! இப்போது வாருங்கள்,அந்த சுவர்க்கத்தை பார்வையிடுவோம்.

சுவர்க்கத்தின் பெயர்கள்:

1. அல் ஜன்னத்
2. தாருஸ் ஸலாம்
3. தாருல் குல்த்
4. தாருல் முகாமத்
5. ஜன்னதுல் மஃவா
6. ஜன்னாத்து அத்ன்
7. தாருல் ஹயவான்
8. ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்
9. ஜன்னாத்துன்னயீம்
10. அல் மகாமுல் அமீன்
11. மக்அது ஸித்க்
12. கதமு ஸித்க்

சுவர்க்க வாசலின் பெயர்கள்

1. பாபு முஹம்மது
2. பாபுத்தவ்பா
3. பாபுஸ்ஸலா
4. பாபுஸ்ஸவ்ம் (அர்ரைய்யான்)
5. பாபுஸ்ஸகாத்
6. பாபுஸ்ஸதகாத்
7. பாபுல் ஹஜ்ஜி வல்உம்ரா
8. பாபுல் ஜிஹாத்

குர்ஆனில் சுவர்க்கம்

நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவனபதிகளிலும், நீரூற்றுகளிலும் (சுகம் பெற்று) இருப்பார்கள்.(அவர்களை நோக்கி) ”சாந்தியுடனும், அச்சமற்றவர்களாகவும் நீங்கள் இதில் நுழையுங்கள்” (என்று கூறப்படும்). மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள். அவற்றில் அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது; அவற்றிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களுமல்லர். ”என்னுடைய அடியார்களே! இந்நாளில் உங்களுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்” (என்று முஃமின்களுக்கு அல்லாஹ்வின் அறிவிப்பு வரும்). இவர்கள் தாம் நம் வசனங்கள் மீது ஈமான் கொண்டு, (முற்றிலும் வழிப்பட்டு நடந்த) முஸ்லிம்களாக இருந்தனர். நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்). பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்; இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன, இன்னும், ”நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!” (என அவர்களிடம் சொல்லப்படும்.) ”நீங்கள் செய்து கொண்டிருந்ததன் (நன்மையான) காரணமாக இந்த சுவர்க்கத்தை நீங்கள் அனந்தரங் கொண்டீர்கள். ”உங்களுக்கு அதில் ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன, அவற்றிலிருந்து நீங்கள் உண்பீர்கள்” (எனக் கூறப்படும்). 15:45 – 73

அவர்களுக்கு அறியப்பட்டுள்ள உணவு அவர்களுக்கு இருக்கிறது. கனி வகைகள் (அளிக்கப்படும்), இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள். இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்). தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களை சுற்றி கொண்டுவரும். (அது) மிக்க வெண்மையானது. அருந்துவோருக்கு மதுரமானது. அதில் கெடுதியும் இராது. அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர். இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள். (தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள். (அப்பொழுது) அவர்களில் ஒரு சிலர் சிலரை முன்னோக்கியவாறு பேசிக் கொண்டிருப்பார்கள். 37:40-50

பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக (அவர்கள்) அச்சமற்ற இடத்தில் இருப்பார்கள். சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் (இருப்பார்கள்). ஸுன்துஸ், இஸ்தப்ரக் (ஆகிய அழகிய பட்டாடைகள், பீராம்பரங்கள்) அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள். இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹுருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம். அச்சமற்றவர்களாக, சகல விதக்கனிவகைகளையும், அங்கு கேட்டு(ப் பெற்றுக்) கொண்டுமிருப்பார்கள். முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான். (இதுவே) உம்முடைய இறைவனின் அருள் கொடையும்; இதுவே மிகப் பெரிய வெற்றியுமாகும். 44:51 – 57

(பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது ஒருவரையொருவர் முன்னோக்கியவாகளாக அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள். நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள். தெளிந்த பானங்களால் நிரம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்). (அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை வலிக்குள்ளாக மாட்டார்கள்; மதிமயங்கவுமாட்டார்கள். இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் விரும்பும் பட்சிகளின் (பறவைகளின்) மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்). (அங்கு இவர்களுக்கு) ஹுருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர். மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்). (இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும். அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள். ‘ஸலாம், ஸலாம்’ என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்). இன்னும் வலப்புறத்தார்கள்! – வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?)(அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்; (நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடைய வாழை மரத்தின் கீழும் இன்னும், நீண்ட நிழலிலும், (சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும், ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் – அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை மேலும், உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்). நிச்சயமாக (ஹுருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி அப்பெண்களைக் கன்னிகளாகவும்; (தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும், வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்). முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும், பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும் (வலப்புறத்தோராக இருப்பார்கள்). 56:15-40

நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) ‘நயீம்’ என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். ஆசனங்களில் அமர்ந்து (சுவர்க்கக் காட்கிகளைப்) பார்ப்பார்கள். அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர். (பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள். அதன் முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள். இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுமுள்ளதாகும். அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முர்புகள் அருந்துவார்கள். 83:22-28

இன்னும் இது போன்ற பல வசனங்களும் இத்தொடரில் உள்ளது. சுருக்கத்திற்காக இத்துடன் முடிக்கிறேன்.

மறுமையில் அல்லாஹ்வின் சந்திப்பு

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்பொழுது அவர்கள் வானில் பதினான்காம் பக்கத்து நிலவை(பரிபூரண சந்திரனை) பார்த்தார்கள். அப்பொழுது கூறினார்கள். நீங்கள் இந்த நிலவைப் பார்ப்பதைப் போல(கியாமத் நாளில்)உங்கள் ரப்பைக் கண் கூடாகக் காண்பீர்கள். அவனைப் பார்ப்பதில் உங்களுக்கு எந்தக் குழப்பமும் இருக்காது.
(புகாரி, முஸ்லிம்)

சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் நுழைந்ததும், அல்லாஹுதபாரக வதஆலா, அவர்களிடம் வேறு எதனையும் நீங்கள் நாடுகிறீர்களா? அதனை நான் உங்களுக்கு அதிகப் படுத்துகிறேன். என்று கூறுவான். அதற்கவர்கள், எங்கள் இரட்சகனே! நீ எங்களின் முகங்களை வெண்மையாக்கி விட்டாய். எங்களை சுவர்க்கத்தில் நுழையச் செய்து விட்டாய். நரகை விட்டும் எங்களைக் காப்பாற்றி விட்டாய். (நீ எங்களுக்கு எல்லா விதமான அருட்கொடைகளையும், இன்பங்களையும், அளித்து விட்டாய்! இனி எங்களுக்கு வேறு என்ன வேண்டும்) என்பார்கள்.

அப்பொழுது அல்லாஹ் தனக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள திரையை அகற்றி விடுவான். (அப்பொழுது அவர்கள் தங்கள் இரட்சகனைப் பார்க்கும் பாக்கியத்தை பெறுவார்கள்) தங்கள் இரட்சகனைப் பார்ப்பதை விட வேறு எந்தப் பொருளும் அவர்களுக்குப் பிரியமானதாகக் கொடுக்கப்படவில்லை. (அவர்களது இரட்சகனைப் பார்ப்பதே எல்லாவற்றையும் விட அவர்களுக்கு மிகப் பிரியமானதாக இருக்கும்)
முஸ்லிம்: ஸுஹைபு(ரலி)

Aug 22, 2010

நண்பர்கள் சொல்லி கேட்டது

எதில் நிற்க்கிறோம் என்பதில் உருதியாயிரு...................
எதில் விழுகிறோம் என்பதில் கவனமாயிரு........................

கடுமையான உழைப்பைத் தவிர வெற்றிக்கு ரகசியம் வேறு இல்லை.................

விவாதத்தால் தீர்வு கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது,
ஆனால் விவாதம் இல்லை என்றால் தீர்வு என்பதே கிடையாது.

எழுந்து நின்று பேசுவது மட்டுமல்ல வீரம்...............
பொருமையாக உர்க்காந்து கவனிப்பதும் தான்.

சரியான வழியை தெரிந்து அதில் நட்ப்பவன் மட்டுமல்ல.................... மற்றவர்களுக்கும் அந்த வழியை காட்டுபவனே மனிதன்..........................

நிதானம் இழக்காமல் அமைதியாக இருக்க முயல்வது என்பதும்
நிதானம் இழக்காமல் அமைதியாக இருப்பதும் ஒன்றல்ல!!!

பயம் கதவை தட்டுகிறதா?
தைரியத்தை எழுந்து போய் கதவை திரக்க சொல்லுங்கள்

கல்மனம் படைத்த நண்பர்களை விட
கொலைகாரன் ஒன்றும் கொடியவனல்ல

மனிதனை எது அடிமையாக்குகிறதோ,
அது அவன் தகுதியில் பாதியை அழித்து விடுகிறது

தன்னை அறிந்தவன் ”ஆசை" படமாட்டான்...
உலகை அறிந்தவன் ”கோப" படமாட்டான்....
இதை இரண்டையும் உணர்ந்தவன் ”கஷ்டப்" படமாட்டான்

பணம் மட்டுமே வாழ்வாகி போன இவ்வுலகத்தில்
இன்று நாணயமும் நல்ல குணங்களும் நடை பிணமாய்
மாண்புள்ள மனிதனுக்கு கொடுக்காத மதிப்பை
கேவலம் துப்பு கெட்டு துட்டுக்கு கொடுகிறார்களே !!

நாளை விடியுமென்று விண்ணை நம்பும்போது
நம்மால் முடியுமென்று உன்னை நம்பு!

அதிகம் பணம் இருந்தால் உன்னை உனக்கு தெரியாது
அந்த பணம் உன்னிடம் இல்லையென்றால் உன்னை உலகத்திற்க்கு தெறியாது

நீ என்னிடம் பேசியதை விட
எனக்காகப் பேசியதில்தான் உணர்ந்தேன் நமக்கான நட்பை

உன்னை அதிகமாக சந்தோஷப்படுத்தும் இதயத்திற்கு
உன்னை அழவைக்கவும் உரிமை உண்டு

Aug 21, 2010

நபியவர்களைச் சாராதவர்கள்

நபிகளார் அவர்களின் அறிவுரைகளில், அவர்களது வார்த்தைப் பயன்பாட்டை வைத்து அதன் கடுமையையும் நன்மையையும் மதீப்பிடு செய்து விடலாம். சாதாரணமாகக் கண்டித்த வார்த்தைகள், கடுமையாகக் கண்டித்த வார்த்தைகள் என்று நபிமொழித் தொகுப்புகளில் நபிகளாரின் வார்த்தைப் பயன்பாட்டில் நாம் பார்க்கலாம். அந்த வகையில் சில குறிப்பிட்ட செயல்களை நபி (ஸல்) அவர்கள், 'இந்தச் செயலைச் செய்தவன் என்னைச் சார்ந்தவன் இல்லை' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

கடும் கோபம் ஏற்படும் போது எப்படி ஒரு தந்தை தன் பிள்ளையைப் பார்த்து, 'என் பிள்ளையே கிடையாது' என்று கூறுவாரோ அதைப் போன்று சில காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து, 'என்னைச் சார்ந்தவன் இல்லை' என்று கடுமையான வாசகத்தை நபிகளார் பயன்படுத்தியுள்ளார்கள். எனவே இவ்வாறு பயன்படுத்தியுள்ள காரியத்தி­ருந்து நாம் முற்றிலும் தவிர்ந்திருக்க வேண்டும்.


திருமணத்தைப் புறக்கணிப்பவன்

இறைவனுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பதற்காகவும், அவனது அருளைப் பெறுவதற்காகவும் சிலர் குடும்பத்தை விட்டு விட்டு, காடுகளில் தவமிருந்து பல அரிய சக்திகளைப் பெற்றதாகப் பல கதைகளை நாம் கேட்டிருப்போம். ஆனால் இவ்வாறு துறவறம் இருப்பது இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

மாறாக, திருமணம் முடித்து குடும்பத்தினருடன் வாழ்வதே இறையருளைப் பெற்றுத் தரும் என்றும் இதைப் புறக்கணிப்பவன் இஸ்லாமிய மார்க்கத்தின் வழிமுறையைப் புறக்கணித்தவனாகக் கருதப்படுவான் என்றும் கடுமையாக நபிகளார் எச்சரித்துள்ளார்கள். முழுக்க முழுக்க இறைவன் என்றிருக்காமல் குடும்பத்தையும் கவனிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்கüன் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), ''முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே?'' என்று சொல்லிக் கொண்டனர்.

அவர்களில் ஒருவர், ''(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப் போகிறேன்'' என்றார். இன்னொருவர், ''நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்'' என்று கூறினார். மூன்றாம் நபர் ''நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ள மாட்டேன்'' என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்கüடம்) வந்து, ''இப்படி இப்படியெல்லாம் பேசிக் கொண்டது நீங்கள் தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ர லி), நூல்: புகாரி (5063)

மோசடி செய்பவன்

பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அடுத்தவர்களை ஏமாற்றி, மோசடி செய்து பணம் பார்ப்பவர்கள் இன்று அதிகரித்துள்ளார்கள். குறிப்பாக அடிப்படைத் தேவையான உணவுகளில் கலப்படம் செய்து, தரமற்ற பொருட்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றும் இவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை என்று நபிகளார் எச்சரிக்கை செய்துள்ளார்கள். உணவு என்றில்லாமல் எதில் மோசடி செய்வதும் கண்டிப்பாகக் கூடாது. கடுமையான குற்றமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவிய ல் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் ''உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், ''இதில் மழைச் சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!'' என்றார். அப்போது அவர்கள், ''ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?'' என்று கேட்டு விட்டு, ''மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர லி), நூல்: முஸ் லிம் (164)


சமூகத்தைக் கொன்றழிப்பவன்

தம்மிடையே ஏற்பட்டுள்ள சண்டையின் காரணத்தால் இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராகப் போர் செய்து, அவர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று பார்க்காமல் கொன்றழிப்பவன் நம்மைச் சார்ந்தவன் இல்லை. இன்று இஸ்லாத்தின் பெயரால் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பவர்கள் நபிகளாரின் எச்சரிக்கையைக் கவனத்தில் கொண்டு, நல்லவர்களையும் அப்பாவிக் குழந்தைகளையும் கொலை செய்யும் போக்கை முற்றிலும் கைவிடவேண்டும்.

யார் என் சமுதாயத்தாருக்கெதிராகப் புறப்பட்டு, அவர்களில் இறைநம்பிக்கையாளர்களைப் பொருட்படுத்தாமல் அவர்களில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் கொன்று, ஒப்பந்தம் செய்துள்ளவர்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவருமில்லை. நான் அவரைச் சேர்ந்தவனுமில்லை.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர லி), நூல்: முஸ் லிம் (3766)

இதே கருத்தில் புகாரியில் மற்றொரு செய்தி இடம் பெற்றுள்ளது.

நமக்கெதிராக எவன் ஆயுதம் ஏந்துகிறானோ அவன் நம்மைச் சார்ந்தவனல்லன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ர லி), நூல்: புகாரி (6874)

துன்பத்தின் போது கன்னத்தில் அறைபவன்

மனிதனின் வாழ்க்கையில் துன்பம் என்பது கண்டிப்பாக வந்து சென்று கொண்டே இருக்கும். அப்போது பொறுமை மேற்கொள்வது இறை நம்பிக்கையாளனின் கடமையாகும். ஆனால் பலர் துன்ப நேரங்களில் கன்னங்களில் அறைந்து கொள்வதும் சட்டையைக் கிழித்துக் கொள்வதும் ரத்தக் காயங்களை ஏற்படுத்திக் கொள்வதும் ஒப்பாரி வைத்து அழுவதும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு நடந்து கொள்பவர்கள் இஸ்லாமியர்களாகக் கணிக்கப்பட மாட்டார்கள். துன்பங்கள் நேரும் போது படைத்தவன் நம்மை சோதிக்கிறான் என்றெண்ணி நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்து, இறைவா! இந்தச் சோதனைக்குப் பகரமாக கூ யைக் கொடு. இதை விட சிறந்ததை வழங்கு என்று கூற வேண்டுமே தவிர, கன்னங்களில் அடித்துக் கொள்வதும் சட்டைகளை கிழித்துக் கொள்வதும் ஒப்பாரி வைத்து அழுவதும் கண்டிப்பாகக் கூடாது.

(துக்கத்தினால்) கன்னங்களில் அறைந்து கொள்பவனும் சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் கால (பழக்கங்களுக்காக) அழைப்பு விடுப்பவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர லி), நூல்: புகாரி (1297)

(என் தந்தை) அபூமூஸா (ர லி) அவர்கள் கடுமையான வேதனையில் மயக்கமடைந்து விட்டார்கள். அவர்களது தலை அவர்களுடைய குடும்பப் பெண் ஒருவரின் மடி மீது இருந்தது. அப்போது அவர்களுடைய குடும்பத்துப் பெண்மணி ஒருவர் ஓலமிட்டு அழுதார். அபூமூஸா (ர லி) அவர்களால் அப் பெண்ணுக்கு பதிலேதும் சொல்ல முடியவில்லை.

பிறகு மயக்கம் தெளிந்தபோது, ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரை விட்டுத் தமது பொறுப்பை விலக்கிக் கொண்டார்களோ அவரை விட்டு நானும் என் பொறுப்பை விலக்கிக் கொள்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (துன்பத்தின் போது) ஓலமிட்டு அழும் பெண், தலையை மழித்துக் கொள்ளும் பெண், ஆடையைக் கிழித்துக்கொள்ளும் பெண் ஆகியோரிடமிருந்து தமது பொறுப்பை விலக்கிக் கொண்டார்கள்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபுர்தா பின் அபீமூஸா, நூல்: முஸ் லிம் (167)


அநீதிக்கு உதவி செய்பவர்கள்

அதிகாரம் உள்ள பதவிக்கு வருபவர்கள், தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சுகம் காண்கிறார்கள். மக்களின் தேவைகளையும் அவர்களின் விருப்பங்களையும் கண்டு கொள்வதில்லை. இப்படிப்பட்ட தலைவர்களின் குறைகளை சுட்டிக் காட்டி அநீதிகளை தட்டிக் கேட்பதற்குப் பதிலாக, அவர்கள் செய்யும் அநீதிகளையும் அக்கிரமங்களையும் பொய்களையும் சரி காண்பவர்களும் இன்று இருக்கத் தான் செய்கிறார்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் தலைவர்களிடம் சில பலன்களை பெற்றுக் கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை நபிகளார் பின்வரும் செய்தியின் மூலம் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

''எனக்கு பின்னால் சில தலைவர்கள் வருவார்கள். அவர்களிடம் சென்று அவர்களின் பொய்களை உண்மைப்படுத்துவார்கள். அவர்களின் அநீத செயல்களுக்கு உதவி புரிவார்கள். அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் இல்லை. நான் அவனைச் சார்ந்தவனும் இல்லை. அவர்கள் (மறுமைநாளில்) ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்திற்கு என்னிடம் வர மாட்டார்கள்.

யார் அவர்களிடம் (அநீதி இழைக்கும் தலைவர்களிடம்) செல்லாமல் அவர்களின் அநீதிக்கு உதவி செய்யாமல் அவர்களின் பொய்களை உண்மைப்படுத்தாமல் இருப்பார்களோ அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள், நான் அவர்களைச் சார்ந்தவன். அவர்கள் ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்திற்கு என்னிடம் வருவார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ர லி) நூல்கள்: திர்மிதீ (2185), நஸயீ (4136), அஹ்மத் (17423)


அபகரிப்பவன்

பொருள்களின் மீதுள்ள ஆசையின் காரணத்தால் அடுத்தவர்களின் பொருள்களை அநியாயமாக அபகரித்துக் கொள்ளையடிப்பவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை என்று கடுமையான எச்சரிக்கையை நபிகளார் செய்ததுடன், அவன் அவ்வாறு செய்யும் போது முஃமினாக இருப்பதில்லை என்றும் கூறியுள்ளார்கள்.

(மற்றவர்களின் பொருள்களை) அபகரிப்பவன் என்னைச் சார்ந்தவன் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ர லி) நூல்கள்: திர்மிதீ (1042), நஸயீ (3283), இப்னுமாஜா (3927), அஹ்மத் (19136)

ஒருவன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, (பிறரது பொருளை அபகரித்துக்) கொள்ளையடிக்கும் போது மூமினாக இருந்து கொண்டு கொள்ளையடிப்பதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (2475)

மீசையை வெட்டாதவர்

இஸ்லாம் தூய்மையை வ யுறுத்துகிறது. தூய்மையாக இருப்பது ஈமானின் உள்ளடக்கம் என்றும் தெளிவுபடுத்துகிறது. அந்த அடிப்படையில் மீசையை வெட்டிக் கொள்ளுமாறும், இது இயற்கையான சுன்னத் என்றும் போதிக்கிறது. மேலும் மீசையை அதிகமாக வளர்ப்பதன் காரணத்தால், சாப்பிடும் போதும் குடிக்கும் போதும் மீசையில் பட்டு அதன் மீது படிந்துள்ள தூசிகளும் சேர்ந்து உடலுக்குள் போக வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இவற்றைத் தவிர்க்கும் விதமாக மீசையை ஒழுங்குற வெட்டிக் கொள்ள வேண்டும்.

யார் மீசையை எடுக்கவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸைத் பின் அர்கம் (ர லி), நூல்: திர்மிதீ (2685), நஸயீ (13)

மீசையைக் கத்தரிப்பது இயற்கை மரபில் அடங்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ர லி), நூல்: புகாரி (5888)

குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துபவன்

கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் ஏற்படும் போது குடும்பத்திலுள்ளவர்கள் அவர்களின் பிணக்குகளைத் தீர்த்து, அவர்களை சேர்ந்து வாழ ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால் சிலர் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுத்துவதற்காகவே இல்லாததையும் இருப்பதையும் இணைத்து மனைவியிடம் போட்டுக் கொடுத்து, கணவன் மனைவிக்கு மத்தியில் உள்ள உறவில் விரிசலை ஏற்படுத்துகிறார்கள். இவ்வாறு செய்வது மிகப் பெரிய குற்றமாகும்.

கணவனுக்கு எதிரான கருத்துக்களை மனைவியிடம் கூறி பிரச்சனையை ஏற்படுத்துபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர லி), நூல்: அபூதாவூத் (1860), அஹ்மத் (8792)