
.jpg)
பெற்றோர், உடன்பிறந்தோர், நட்பு, மனைவி, பிள்ளைகள், உறவினர்'
இவையாவும்… இறைவனே கொடுத்த வரம்!
பேணி மகிழ்வோம் நாம்... அவனே விதித்த நொடிவரை!
பொதுவாய் நம் வீடுகளில்… பெற்றோர், சகோதர சகோதரிகள், மனைவி, பிள்ளைகள், மாமனார், மாமியார் மற்றும் உறவுகளில்… நாம் உட்பட பெரும்பாலோர் மார்க்க அறிவு குறைந்தவராகவே இருப்பதால்... குடும்பத்தில் சிறிய, பெரிய பிரச்சினைகள் தொடர்நிலையாய் உருவானபடியேதான் இருக்கிறது.
நாம் ஒவ்வொருவரும், தினம் தினமும் விதவிதமான வழக்குகளினூடேயே வாழ்கின்றோம்.
இவர்களில், நம்மை அதீத மன உளைச்சலுக்குள்ளாக்கி அலைக்கழிப்பவரும் உண்டு.
முட்களாகிப்போன உறவுகளின்மீது விழுந்த சேலையாய்... நம் கண்ணியத்தை நாம் எப்படி தக்கவைத்துக்கொள்வது?
இஸ்லாத்தின் இனிய கோட்பாட்டை விட்டால்… மார்க்கம் வேறில்லை நமக்கு.
நபி(ஸல்) கூறினார்கள்.
“நீ உன் தாய்க்கு சேவை செய். ஏனெனில், அவர்களின் பாதத்திற்குக் கீழே தான் சுவர்க்கம் உண்டு” (நூல்கள் : நஸயீ, தப்ரானி)
“தந்தை சுவன வாயில்களில் மத்திய வாயில் ஆவார்” (நூல்: ஸஹீஹுத் தர்கீப் வத்தர்ஹீப்)
“தந்தையின் திருப்தியில் அல்லாஹ்வின் திருப்தியும், தந்தையின் அதிருப்தியில் அல்லாஹ்வின் அதிருப்தியும் உள்ளது” (நூல்: ஸஹீஹுல் ஜாமிஉ 3500, ஸில்ஸிலா ஸஹீஹா 516 )
“முஃமின்களில் ஈமானால் பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே”.
“உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே” (நூல்: ஸுனனுத் திர்மிதி)
பெற்றோருக்கும் மனைவிக்குமிடையே எற்படும் மூர்க்கத்தமான முரண்பாட்டை சரி செய்யவே இயலாத நிலையில்…
நாம் கற்றதை அமைதியாய் சொல்லிக்கொடுப்போம்...
அலட்சியப்படுத்திடும்போது, சற்று கண்டிப்புடன் புரியவைப்போம்.
அவர்கள் திருந்தும் வரை… ஒதுங்கி நின்று பொறுமையுடன் காத்திருப்போம்.
பின்பு, அவர்களிடம் அழகிய முறையில் நடந்துக் கொள்வோம்.
நாம் என்ன செய்யக்கூடாது?
இல்லற தேவைக்காக மனைவிக்கோ, பொருளாதாயத்திற்காக பெற்றோருக்கோ ஓர்புறமாய் செவிசாய்க்கக் கூடாது.
முக்கியமாக, பெற்றதால்… தாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாமலும், தன் இரத்த பந்தங்களை விட்டுப் பிரிந்து நம்முடன் வாழ்வதால்… மனைவியின் சொல்லைக் கேட்டு பெற்றோரை விரட்டாமலும், நாம்தான் விழிப்புடன் இருக்கவேண்டும்!
மாமியார் Vs மருமகள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவே கூடாது.
நாம் சற்று வாய்மூடி விலகி நிற்பதே நலம். சாலச் சிறந்ததும்கூட!
காரணங்கள் எதுவானாலும்… நாம் இவர்களை வெறுக்காதிருப்போம்.
நாம் நிதானமிழந்து, இருவரில் ஒருவர் மீதோ அல்லது இருவரின் மீதோ அவசர நடவடிக்கை எடுத்துவிட்டால்…
பலியாகி, பரிதவிப்பது நம் (சந்ததிகளான) பிஞ்சுக் குழந்தைகளும், உடன்பிறந்தவர்களுமே!
சம்பந்தமேயில்லாத அப்பாவிகளை அல்லல் படுத்துவது நியாயமேயில்லை. இதனால் அவர்களின் வாழ்வில் ஏற்படும் கொடூரத்தை, பின்விளைவுகளை… சட்டென்று ஒரு கணத்தில் எவராலும் எளிதாய் கணித்திட முடியாது.
காலம் கடந்தபின் உதிக்கும் ஞானத்தால்... யாருக்குமே பயனில்லை.
நாம் என்ன செய்யவேண்டும்?
இன்றைய நம் கடமை என்ன? நாளைய மற்றும் எதிர்கால நமது பொறுப்புகள் என்ன? என்பதை நாம் தெளிவாக உணர்ந்து, பட்டியலிட்டு..., அவற்றை வாழ்நாள் குறிக்கோளாய் எழுதி வைக்கவேண்டும்.
இறையருளைத் தொடர்ந்து... நட்பும், உறவும் இல்லாமல் யாராலும், என்றும், எதையுமே சாதிக்க முடியாது. நம் குறிக்கோள்கள் நிறைவேற, இறைவனே தந்தருளிய நட்பு மற்றும் உறவுகளின் உதவியுடன் செயலாற்றவேண்டும்.
நமது அன்பை அனவரிடமும் சரிச்சமமாய் பகிர்ந்தபடி, குடும்பத்தில் நிரந்தர நிம்மதியை நிலைநாட்டி, இறைவன் விரும்பும் குடும்பத் தலைவனாகவே வாழ்ந்து மடிவோம்… இறைவனே விதித்த நொடிவரை.
அன்புடன்,
M.Mohamed Ismail
No comments:
Post a Comment