இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

தொழுகை - தொடர் 3

தொழுகை - தொடர் 3
தயம்மும்
இது எப்போது யாருக்கு அவசியம்?
இஸ்லாத்தின் சலுகைகளில் இதுவும் மிக முக்கியமான ஒன்றாகும். தயம்மும் என்பது ஒரு வேளை தண்ணீர் கிடைக்காத பட்சத்தில், தண்ணீருக்கு மாற்று பரிகாரமாக சுத்தமான மண்ணை உபயோகித்து கடமைகளை நிறைவேற்றிக்கொள்வதாகும்.தற்காலத்தில் நாம் அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் இல்லை, இருப்பினும் நபி வழி என்ன என்பது பற்றி அறிந்து கொள்வோம்

அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு கூறுகின்றான் : ...... தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்;. அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்;. அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.(அல் குர்ஆன் - 5:06).

... அன்றியும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (பள்ளிக்குள் செல்லாதீர்கள்; பள்ளியை). பாதையாக கடந்து சென்றால் தவிர. நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரை பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி ''தயம்மும்'' செய்து கொள்ளுங்கள்; (இதன்பின் தொழலாம்). நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.(அல் குர்ஆன் - 4:43).

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எனக்கு முன்னர் (வாழ்ந்த இறைத்தூதர்கள்) யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் அருட்கொடைகளாக எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகள்:
1-எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் தொலைவு (தூரம்) இடைவெளியிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் என்னைப்பற்றிய பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன்.

2-பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (இருக்கும் இடத்தில்-தண்ணீர் கிடைக்காவிடின், தயம்மும் செய்து) தொழுதுகொள்ளட்டும்.

3-போரில் கிடைக்கிற பொருள்கள் எனக்கு மட்டுமே ஹலாலாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்பு (வாழ்ந்த இறைத்தூதர்கள் எவருக்கம்) ஹலாலாக்கப்பட்டதில்லை.

4-(மறுமையில்) சிபாரிசு (எனது சமுதாயத்தினருக்காக) செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன்.

5- ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பட்டார்கள். ஆனால், நான் மனித இனம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன். அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) நூல் - புகாரீ 335).

வேறு சில அறிவிப்பாளர்கள் தொடராகவும் இந்த ஹதீஸ் குறிப்பு வந்துள்ளன.

இது சம்பந்தமாக சுமார் 20 ஹதீஸ்கள் காணப்படுகின்றன, அவற்றில் சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.
சாதாரணமாக உள்ளூரில் இருப்பவர்களுக்கும், பிரயாணத்தில் இருப்பவர்களுக்கும் இந்த தயம்மும் சலுகை பயன்பாடாக இருக்கும். காரணம் சில நேரங்களில் கடமையான குளிப்பையும், உளூவையும் நிறைவேற்ற தண்ணீரின் தேவை ஏற்படும், சில சமயத்தில் குளிப்பதனாலோ, உளூ செய்வதாலோ குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் போகலாம் என்ற அச்சம் ஏற்படும். இது போன்ற தருணத்தில் இச்சலுகையை நாம் பயன்படுத்திக்கொள்வது சிறந்ததாகும்.

நோயாளிகள், கடும் குளிர் பிரதேசத்தில் இருப்பவர்கள் மற்றும் குளிரில் குளித்தால் உடல்நலத்திற்கு பங்கம் அல்லது மரணம் ஏற்படும் என அஞ்சும் மனிதர்கள் கூட தயம்மும் செய்துகொள்ளலாம் இதற்கு நபி (ஸல்) அவர்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள்.
தயம்மும் எப்படி செய்வது?

இரு கைகளையும் மண்ணில் ஒரு தடவை அடித்து பின்பு கையில் படிந்திருக்கும் மண்ணை வாயால் ஊதிவிட்டு முகத்தில் தடவிக்கொண்டும், பின்பு இடது உள்ளங்கையை வலது முன்னங்கையின் மேல் பகுதியிலும், அதே போல் வலது உள்ளங்கையை இடது முன்னங்கை மேல் பகுதியலும் தடவிக்கொள்ளவேண்டும், இதுவே 'தயம்மும்' என்பதாகும்.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தின் பிண்ணனியில் மேலே உள்ள அந்த இரு வசனங்கள் அல்லாஹ்வினால் வஹீ மூலம் அருளப்பட்டன. அதுவே தயம்மும் செய்துகொள்ள அனுமதித்த இறைமறையின் செய்தி.
நாங்கள் ஒரு பயணத்தில் (பனூ முஸ்தலிக் போர் முடிந்து) நபி(ஸல்) அவர்களுடன் மதீனா நோக்கி திரும்பினோம். மதீனாவுக்கருகில் உள்ள பைதாவு அல்லது தாத்துல் ஜைஷ் என்ற இடத்தை வந்தடைந்ததும் என்னுடைய கழுத்தணி (என் சகோதரி அஸ்மாவிடத்தில் இருந்து இரவல் வாங்கிய ஆபரணம்) அறுந்து தொலைந்து (காணாமல்) விட்டது. அதைத்தேடுவதற்காக நபி (ஸல்) அவர்களும், அவர்களுடன் வந்திருந்த மற்றவர்களும் அந்த இடத்தில் தங்கினோம். நாங்கள் தங்கிய இடத்தில் தண்ணீர் இல்லை, அருகாமையில் நீர்நிலையும் இல்லை, நாங்களும் தண்ணீர் கொண்டு வரவில்லை. அப்போது அபூ பக்ர் (ரலி) அவர்களிடம் சிலர் சென்று, (உங்கள் மகளான) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? நபி (ஸல்) அவர்களையும் மக்களையும் இங்கே தங்கச் செய்துவிட்டார். அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை, அவர்களுடனும் தண்ணீர் எடுத்து வரவில்லை என்று முறையிட்டனர். அபூ பக்ர் (ரலி) (என்னருகே) வந்தபோது நபி (ஸல்) அவர்கள் தங்களின் தலையை என்னுடைய மடி மீது வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களையும் மக்களையும் தங்க வைத்துவிட்டாயமே? அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை அவர்களிடமும் தண்ணீர் இல்லை என்று கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு, தங்களின் கையால் என்னுடைய இடுப்பில் குத்தினார்கள். நபி(ஸல்) அவர்களின் தலை என் மடியின் மீது இருந்ததால் நான் அசையாது வேதனையை தாங்கிக்கொண்டே இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் காலையில் பஜ்ர் தொழுகைக்காக விழித்தெழிந்தபோதும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது தான் அல்லாஹ் தயம்மும் வசனத்தை (5:6) அருளினான். எல்லோரும் தயம்மும் செய்தார்கள். பிறகு நான் வந்த ஒட்டகத்தை கிளப்பிவிட்டபோது அதனடியில் அந்த ஆபரணம் கிடைக்கப்பெற்றேன். அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) நூல் - புகாரீ 334.(தேவையறிந்து சுருக்கப்பட்டுள்ளது).

அதே போன்று மற்றொரு அறிவிப்பில்:
அன்னை ஆயிஷாவின் சகோதரியான அஸ்மாவிடமிருந்து ஒரு கழுத்தணியை (ஆபரணம்) இரவல் வாங்கியிருந்தார். அந்தக் கழுத்தணி காணாமல் போனது. இதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் உஜைத் பின் ஹுழைர் என்பவரது தலைமையில் வேறுசிலரையும் அனுப்பி அந்த கழுத்து மாலையை தேடி (துளாவி) வருமாறு கூறினார்கள். தேடிப்போனவர் அதைக் கண்டெடுத்தார். தேடிப் போன அந்த இடத்தில் தொழுகையின் நேரம் வந்துவிட்டது. அவர்களிடம் தண்ணீர் இருக்கவில்லை. எனவே (உளூவின்றித்) தொழுதுவிட்டார். இதைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அப்போது அல்லாஹ் தயம்முடைய வசனத்தை (4:43) அருளினான். (நூல்-புகாரீ 336)
அப்போது உஜைத் இப்னு ஹுழைர் என்பவர் ஆயிஷா(ரலி) அவர்களிடம் : அல்லாஹ் உங்களுக்கு நற்கூலியைத் தருவானாக! அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் வெறுக்கக் கூடிய எந்த ஒரு விஷயம் உங்களுக்கு ஏற்பட்டாலும், அதை உங்களுக்கும் மற்ற முஸ்லிம்களுக்கும் நலமானதாக அல்லாஹ் ஆக்கி விடுகிறான் என்று கூறினார் என உர்வா அறிவித்தார்.
இது பற்றிப் பின்னர் உஜைத் இப்னு ஹுளைர்(ரலி) 'அபூ பக்ரின் குடும்பத்தார்களே! உங்களின் மூலமாக ஏற்பட்ட பரக்கத்துக்களில் இது முதலாவதாக இல்லை. (இதற்கு முன்பும் உங்களின் மூலம் எத்தனையோ பரக்கத்துக்கள் ஏற்பட்டுள்ளன) எனக் கூறினார்.
தண்ணீரோ மண்ணோ கிடைக்க வில்லையானால் என்ன செய்வது?

மேற்குறிப்பிட்டுள்ள புகாரீ ஹதீஸ் எண் 336ல் குறிப்பிட்டுள்ள சாராம்சமே, ஆனால் தயம்மும் வசனம் வருவதற்கு முன் அந்த நபித்தோழர் உளூ இல்லாமல் தொழுதுவிட்டார், அது பற்றி நபி (ஸல்) அவர்களிடத்தில் சென்று கேட்டபொதுதான் அந்த இறைவசனம் இறங்கியது.

மேலும் மற்றுமொரு அறிவிப்பில்: 
அபூ ஜுஹைம்(ரலி) அவர்கள் அறிவித்தாக புகாரீயில் வரும் ஒரு ஹதீஸ் - நானும் நபி(ஸல்) அவர்களின் மனைவிகளில் ஒருவரான மைமூனா (ரலி)வின் அடிமை அப்துல்லாஹ் இப்னு யஸாரும், அபூ ஜுஹைம் இப்னு அல்ஹாரிது இப்னு அஸ்ஸிம்மத்தில் அன்ஸாரி(ரலி) அவர்களிடம் சென்றோம். எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் 'பீர்ஜமல்' என்ற இடத்திலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் அவர்களை சந்தித்து ஸலாம் கூறியதற்கு, நபி(ஸல்) அவர்கள் பதில் சொல்லாமல் ஒரு சுவர் பக்கம் சென்று (அதில் கையை அடித்து) தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் தடவிய பின்னர் அவரின் ஸலாத்திற்கு பதில் கூறினார்கள் என்று அபூ ஜுஹைம்(ரலி) கூறினார் என உமைர் என்பவர் அறிவித்தார். நூல் - புகாரீ 337.

தண்ணீர் கிடைக்காமல் தொழுதுவிட்டர் தண்ணீர் கிடைத்தவுடன் தொழவேண்டுமா?

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள், மதினாவை அடுத்த ஜுர்ஃப் என்ற ஊரிலிருந்து வந்து கொண்டிருக்கும்போது வழயில் மர்பதுந்நஅம் என்ற இடம் வந்ததும் அஸர் தொழுகையின் நேரம் வந்துவிட்டது. உடனே (தண்ணீர் கிடைக்காததால் தயம்மும் செய்து) தொழுதார்கள். பின்னர் மதீனாவிற்குள் வந்தார்கள். அப்போது சூரியன் (மறையவில்லை) உயர்ந்தே இருந்தது என்றாலும் அவர்கள் அந்த அஸர் தொழுகையைத் திரும்பத் தொழவில்லை.
இரண்டு நபித்தோழர்கள் பயணித்தலின் போது தொழுகையின் நேரம் வந்துவிட்டது. ஆனால் அவர்களிடம் (உளூவிற்கான) தண்ணீர் இல்லை. எனவே அவர்கள் தூய்மையான மண்ணில் தயம்மும் செய்தார்கள். பின்னர் தொழுதார்கள். பின்னர் அந்த (தொழுகையின்) நேரத்திற்குள் இருவருக்கும் தண்ணீர் கிடைத்து விட்டது. ஒருவர் உளூ (செய்து) உடன் (தன்னுடைய தொழுகையை) மீண்டும் தொழுதார். மற்றவர் மீண்டும் தொழவில்லை. பின்னர் இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, நடந்ததை விவரித்தனர். மீண்டும் தொழாமலிருந்து விட்டவரை நோக்கி, 'நீயே சுன்னத்தை நிலை நிறுத்திவிட்டாய்! உனக்கு உன்னுடைய தொழுகை போதுமானது' என்றும் (மீண்டும் தொழுத) மற்றவரை நோக்கி 'உனக்கு இருமுறை நன்மை உண்டு' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவிக்கிறார்.நூல் புலுகுல் மாரம் 1-144

தண்ணீருக்குப் பகரமாக சுத்தமான மண் ஒரு முஸ்லிமுக்கு போதுமானது.

ஒருமுறை ஒருவர் தயம்மும் செய்தால் உளூ முறியும் செயல்கள் நிகழாதவரை அந்த தயம்மும் அவருக்குப் போதுமானது என்று ஹஸன் கூறினார்.
இப்னு அப்பாஸ் (ரலி) தயம்மும் செய்துவிட்டு இமாமாக நின்று தொழுகை நடத்தினார்கள்.

எதையும் விளைவிக்க முடியாத உப்புத் தரையில் தொழுவதும் அதில் தயம்மும் செய்வதும் (ஆகுமானதாகும்) எந்தக் குற்றமுமில்லை என்று யஹ்யா இப்னு ஸயீது (ரலி) கூறினார்கள்.

குளிப்புக்கடமையானவர் தயம்மும் செய்து தொழலாமா?

குளிரான ஓர் இரவில் அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்களுக்குக் குளிப்புக் கடமையானபோது அவர்கள் தயம்மும் செய்து 'உங்கள் ஆத்மாக்களை நீங்கள் கொலை செய்தீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களின் மீது இரக்கமுடையவனாக இருக்கிறான்' (திருக்குர்ஆன் 04:29) என்ற இறைவசனத்தை ஓதினார்கள். இந்த விஷயத்தை அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது அவர்கள், அவரை குறையேதும் கூறவில்லை.
ஒருவர் ஜமாஅத்துடன் தொழாமல் தனியாக இருப்பத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், 'நீர் ஏன் ஜமாஅத்துடன் தொழவில்லை?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இறைத்தூதர் அவர்களே! எனக்குக் குளிப்புக் கடமையாகிவிட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை' என்று கூறியபோது 'மண்ணில் தயம்மும் செய்யும்! அது உமக்குப் போதுமானது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இம்ரான் இப்னு ஹுஸைன் அல் குஸாயீ (ரலி) நூல்-புகாரீ 348.

பத்து வருடங்களாகியும் தண்ணீர் கிடைக்காவிட்டாலும் ஒரு முஸ்லிமிற்குத் தூய்மையான மண் உளூவாகும் (தயம்மும்). ஆனால், தண்ணீர் கிடைக்கப்பெற்ற போது, அல்லாஹ்வுக்கு அவர் அஞ்சிக் கொள்ளட்டும்! அவன் தன் மேனியைத் தண்ணீர் தீண்டச் செய்யட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).
இது இப்னூ கத்தானில் 'ஸஹீஹ்' எனும் தரத்திலும், தாரகுத்னீயில் 'முர்ஸல்' எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மேற்கண்ட அந்த ஹதீஸ் அபூதர்(ரலி) வாயிலாக திர்மிதீயில் 'ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 
தொடரும் இன்ஷா அல்லாஹ்....
[பதிவேற்றிய நாள் : 01-08-2010]