இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Jan 7, 2011

சித்தி ஜூனைதா பேகம் - புரட்சிப் படைப்பாளி


இஸ்லாமிய பெண்களில் முதன்முதலில் நாவல் படைத்திட்ட புரட்சிப் படைப்பாளி சித்தி ஜூனைதா பேகம் என்பவர் யார்? இவரைத் தந்த ஊர் எந்த ஊர்? இவரை ஏன் புரட்சிப் படைப்பாளி என்று அழைக்க வேண்டும்? அப்படி என்னதான் செய்தார்? இதுபோன்ற ஆர்வமிக்க பல சந்தேகங்களுக்கு விடை அளிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

தமிழில் பெண் படைப்பாளிகள் இன்றும் குறைவாகவே காணப்படுகின்றனர். இப்படி இருக்கும் இன்றைய சூழலில் 70 ஆண்டுகளுக்கு முன்னால் எழுத்துப் பணியை தொடங்கிய பெண் படைப்பாளிதான் இந்த சித்தி ஜூனைதா பேகம். 1917-ம் ஆண்டு நாகூரில் பிறந்தவர்.

மூன்றாம் வகுப்பே படித்தவர். 16 வயதிலேயே எழுதத் தொடங்கியவர். கிட்டத்தட்ட 64 ஆண்டுகளுக்கு முன்னால் 21 வயதில் ‘காதலா கடமையா’ என்ற அபூர்வ புரட்சி நாவலை எழுதியவர். ‘காதலா கடமையா’ நாவலை எழுதியதன் மூலம் முதல் இஸ்லாமியப் பெண் நாவலாசிரியர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்த நாவலைப் படித்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. காரணம் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1958-ல் தயாரித்து இயக்கி நடித்த நாடோடி மன்னன் திரைப்படக் கதை காதலா கடமையா நாவலின் கதையோடு ஒத்திருந்ததுதான். இத்துடன் பெண்ணுள்ளம், இஸ்லாமும் பெண்களும் உள்பட பத்து நூல்களை சமுதாய நலனுக்காக எழுதியவர். 1998ம் ஆண்டு 81-ம் வயதில் தம்முடைய எழுத்துப் பணியை நிறுத்திக் கொண்டார். ஆம், அந்த ஆண்டுதான் அவர் மறைந்தார்.

ஒரு நாட்டின் இளவரசனுக்கு முடிசூட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இளவரசனுக்கு மயக்க மருந்து கொடுத்து மயங்கச் செய்யும் சதிகாரர்கள் தங்களுக்கு வேண்டிய ஒருவனுக்கு முடிசூட்ட ஏற்பாடு செய்கிறார்கள். இந்த நேரத்தில் இளவரசனைப் போல் உருவ ஒற்றுமையுடைய ஒருவன் வெளியூரில் இருந்து வருகிறான். அவனைச் சந்தித்த இளவரசனின் ஆதரவாளர்கள் தற்காலிகமாக அவனுக்கு முடி சூட்டுகின்றனர். மக்களும் இளவரசியும் அவனை உண்மையான இளவரசன் என்றே நம்புகின்றனர். நாட்டுக்குத் தேவையான பல நல்ல திட்டங்களைத் தீட்டுகிறான். இறுதியில் சிறை வைக்கப்பட்ட உண்மையான இளவரசனை , இளவரசனாக நடிப்பவன் மீட்டு வருகிறார்.

‘காதலா கடமையா?’ நாவலின் இந்தக் கதைச் சுருக்கம்தான் நாடோடி மன்னனுக்கு அடிப்படைக் கதையாக அமைந்திருந்ததை காண முடிந்தது.

நாடோடி மன்னனுக்கு வசனம் எழுதியவர்களுள் ஒருவர் ரவீந்தர் (இயற்பெயர் : ஹாஜா முஹைதீன்). இவரும் நாகூரைச் சேர்ந்தவர். 74 வயதான இவர் சென்னையில் வாழ்ந்து வருகிறார். இவரிடம் நேரில் சென்று ‘காதலா கடமையா’ நாவல் தாங்கள் வசனம் எழுதிய நாடோடி மன்னன் படக்கதையுடன் ஒத்துள்ளதே என்று கேட்டேன். அதை அவர் ஒப்புக் கொண்டார்.

நாடோடி மன்னன் கதை விவாதத்தின்போது எம்.ஜி.ஆர் அவர்கள் ரவீந்தரிடம் பாதிக்கதை வரையில் சொல்லிக்கொண்டு இருந்தபொழுது மீதிக்கதையை ரவீந்தர் சொல்லி முடித்தார். இதைக் கேட்டு வியந்த எம்.ஜி.ஆரிடம் ‘காதலா கடமையா?’ என்ற நாவலில் படித்த கதைதான் இது என்று ரவீந்தர் தெரிவித்தார்.

‘காதலா கடமையா?’ நாவலில் இளவரசனாக நடிப்பவன் மக்களுக்காக போடும் சமுதாய நலத்திட்டங்கள் சிறப்புக்குரியதாக அமைந்தது. இதே திட்டங்கள் நாடோடி மன்னன் படத்திலும் மக்களிடத்தில் பரபரப்பை உண்டாக்கிய காட்சியாக அமைந்திருக்கிறது

‘காதலா கடமையா?’ நாவலில் மன்னன் நிறைவேற்றும் மக்கள் நலத்திட்டங்கள் :

1. 18 வயது முதல் 45 வயதுக்குள் புத்தகப் பயிற்சி அளித்து கல்வியில் ஆர்வத்தை ஊட்ட வேண்டும்.
2. வைத்திய வசதிகள்
3. பயிர்த்தொழில், குடிசைத் தொழில் பெருக்குதல்
4. பெண்களுக்கு பள்ளிக்கூடம் அமைத்தல். உயர்கல்விச்சாலையும் அமைத்தல். அனாதை விடுதி, தனி மருத்துவமனை அமைத்தல்.
5. ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க வசதி.
6. ஏழை பணக்காரர் வேற்றுமையை நீக்குதல்

இதே கருத்துக்கள் நாடோடி மன்னன் திரைப்படத்தில் இளவரசனாக நடிப்பவன் போடும் சட்டமாகும்.

1. ஐந்து வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு கல்வியைக் கட்டாயமாக்குதல்
2. பயிர்த்தொழில் செய்தல்
3. வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க தொழில் நிலையங்களைக் கட்டுதல்
4. பயிர்த்தொழில் செய்தல்
5. கல்வி வைத்திய வசதி ஏற்படுத்துதல்
6. வாழ்விழந்த பெண்களுக்காக செலவிடுதல், மருத்துவமனை அமைத்தல்
7. குடிசை வாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி ஏழை பணக்காரர் வேறுபாடு நீக்குதல்
8. வயோதிகர், கூன், குருடு, முடம் போன்றோர்க்கு உதவி செய்தல்
9. கலப்புத் திருமணங்கள் செய்பவர்களுக்கு வேலை வாய்ப்புச் சலுகை
10. உழுபவனுக்கே நிலம் சொந்தம்
11. கற்பழித்தால் தூக்கு தண்டனை
…. என்று இடம் பெற்றுள்ளன.

‘காதலா கடமையா?’ நாவலின் சமுதாய கருத்துக்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்த காரணத்தால் நாடோடி மன்னனில் அதே கருத்துக்களுடன் சில புதிய சிந்தனைகளையும் சேர்த்து ரவீந்தர் வசனமாக எழுதியுள்ளார்.

நாவலில் இடம்பெறும் திட்டங்களும் படத்தில் இடம்பெறும் திட்டங்களும் கிட்டத்தட்ட ஒன்றாக இருப்பதைக் காணலாம்.

நாடோடி மன்னனில் இளவரசனாக நடிப்பவனிடம் அவன் காதலி ,’அத்தான் நாம் காதலோடு பிறப்பதில்லை. கடமையோடுதான் பிறக்கிறோம். உங்கள் லட்சியம் நிறைவேறிவிட்டால் நாடு நலம் பெறும்’ என்று குறிப்பிடுகிறாள். ‘காதலா கடமையா?’ என்ற நாவலின் தலைப்பு நாடோடி மன்னன் திரைப்பட வசனத்திலும் அப்படியே வந்துள்ளது. இது வசனகர்த்தா ரவீந்தரிடம் நாவலின் தலைப்பு ஏற்படுத்திய ஆழமான தாக்கமாகக் கருதலாம்.

‘காதலா கடமையா?’ நாவலில் இளவரசன் சிறை வைக்கப்பட்டு இருக்கும் தீவு மாளிகையும், இளவரசனாக நடிப்பவன் சண்டையிட்டு மீட்கும் காட்சியும் நாடோடி மன்னன் திரைப்படத்திலும் அப்படியே இடம் பெற்றுள்ளன.

இதைப்போல நாடோடி மன்னன் திரைப்படத்தில் வரும் பல காட்சிகள் ‘காதலா கடமையா?’ நாவலில் வரும் காட்சிகளைப் பின்பற்றி அமைத்து இருக்கின்றன.

‘காதலா கடமையா?’ நாவல் நாடோடி மன்னன் திரைப்படம் முழுவடிவம் பெறுவதற்கு முன்னோடியாகவும் பின்னோடியாகவும் அமைந்துள்ளது.

இனிய தமிழ்நடையில் சித்தி ஜூனைதா பேகம் எழுதிய ‘காதலா கடமையா?’ நாவலுக்கு மதிப்புரை வழங்கிய உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் ‘‘மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. எல்லாவற்றிலும் மேலானது கடமையே என்பதும், பரோபகாரச் செயல் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததென்பதும், பொருளாசை மேலிட்டவர்கள் எதுவும் செய்யத் துணிவர் என்பதும் இப்புத்தகத்திற்கண்ட முக்கிய விஷயங்கள். இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதைப் போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள்கள் கொடுத்திருப்பது இந்நூல் எழுதியவருக்குத் தமிழ் இலக்கிய நூல்களில் நல்ல பயிற்சியுண்டென்பதைக் காட்டுகிறது. பொதுமக்கள் இதனை வாங்கிப் படித்து இன்புறுவார்களென்று எண்ணுகிறேன்’’ என வரிக்கு வரி வியந்து போற்றுகிறார் தமிழ்த் தாத்தா. இந்த மதிப்புரையே சித்தி ஜூனைதா பேகத்திற்கு கிடைத்த தமிழ்ப் பரிசாகக் கருதலாம்.

இஸ்லாமியப் பெண்கள் எழுத முன்வராத அந்தக் காலத்தில் பெண்ணியச் சிந்தனையை முன்னிறுத்தி ‘எந்தச் சமூகம் பெண் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறதோ அந்தச் சமூகம் ஒரு காலத்திலும் தலைநிமிர்ந்து நிற்க முடியாது’ என்று ‘காதலா கடமையா?’ நாவலில் துடித்துக் கூறியுள்ளார்.

சிலப்பதிகாரம், திருக்குறள், நாலடியார், பட்டினத்தார் பாடல் முதலியவற்றை தம்முடைய நாவலில் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம்

இவரது படைப்புகள் புரட்சிமிக்க கருத்துக்கும், பெண்ணியச் சிந்தனைக்கும் இனிய தமிழ் நடைக்கும் ஆழ்ந்த தமிழ்ப் புலமைக்கும் சான்றாக உள்ளன. இதைப்போல தமிழ்-தமிழின உணர்வும் இவருடைய உள்ளத்தில் மேலோங்கி நிற்பதை இவரது நாவலில் காண முடிகிறது.

1935களில் தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முடுக்கி விட்ட காலகட்டத்தில் சித்தி ஜூனைதா பேகம் அவர்கள் தாம் எழுதிய காதலா கட¨மாயா நாவலில் ‘தமிழுக்கோர் தாயகமாய் விளங்கும் என் தாய்நாட்டை மீட்பதற்காக உடல், பொருள், ஆவியை தத்தஞ் செய்த பெரியோரைப் பின்பற்றுவேன்’ என்று எழுதி இருப்பது இவரது தமிழ் இனப்பற்றை காட்டுகிறது.

தமிழ்க்கூறும் நல்லுலகிற்கு உ.வே.சா ஒரு தமிழ்த்தாத்தா
சித்தி ஜூனைதா பேகம் ஒரு தமிழ்ப் பேத்தி!

சித்தி ஜூனைதா – இஸ்லாமிய முதல் புரட்சிப் பெண் படைப்பாளி’ என்ற தலைப்பில் டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது அவர்கள் எழுதிய கட்டுரை (தினகரன் – ரம்ஜான் மலர் 2002 )

Thanks :- rajagiri gazzali

No comments:

Post a Comment