இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Jul 27, 2010

நோன்பைத் தாமதமாகத் திறத்தல்

நோன்பைத் தாமதமாகத் திறத்தல்


இன்று சில பள்ளிகளில் நோன்பு திறப்பதைத் தாமதப்படுத்துகின்றனர். சூரியன் மறைந்தவுடன் நோன்பைத் திறக்காமல், சூரியன் மறைந்து 7-10 நிமிடங்கள் கழிந்த பின்பே நோன்பு திறக்கின்றனர். அவர்கள் வெளியிடும் நோன்பு கால அட்டவணையில் கூட சூரியன் மறைவு என்று ஒரு நேரம் போட்டிருப்பார்கள். அதை விட 7-10 நிமிடங்கள் கூடுதலாக நோன்பு திறக்கும் நேரத்தைப் போட்டிருப்பார்கள். கேட்டால் பேணுதல் என்கின்றனர். இவர்களின் இந்த செயல் தவறு என்பதை பின்வரும் ஆதாரங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம். வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்! திருக்குர்ஆன் 2:187 "நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) நூல்: புகாரி 1957 நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் கூட்டத்தில் ஒருவரிடம், 'இன்னாரே! எழுந்து நமக்காக மாவு கரைப்பீராக!" என்றார்கள். அதற்கவர் 'இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!" என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக! எனறார்கள். அதற்கவர் 'இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டும்!" என்றார். நபி(ஸல்) அவர்கள். 'இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!" என்றார்கள். அதற்கவர், 'இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!" என்றார். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், 'இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!" என்று கூறினார்கள். அதற்கவர் 'பகல் (வெளிச்சம்) இன்னும் (எஞ்சி) இருக்கிறதே?' என்று கேட்டதற்கும் நபி(ஸல்) அவர்கள் 'இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!" என்று கூறினார்கள். உடனே அவர் இறங்கி, அவர்களுக்காக மாவு கரைத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் அருந்திவிட்டு, 'இரவு இங்கிருந்து (கிழக்கிலிருந்து) முன்னோக்கி வந்துவிட்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்!" என்றார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி) நூல்: புகாரி 1955 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவு வந்து, பகல் போய், சூரியன் மறைந்துவிட்டால் நோன்பாளி நோன்பு துறப்பார். அறிவிப்பாளர்: உமர் (ரலி) நூல்: முஸ்லிம் 2006 நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். "இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! இரு நபித்தோழர்களில் ஒருவர் விரைந்து நோன்பு துறக்கிறார்; (மஃக்ரிப் தொழுகையின் ஆரம்ப நேரத்திலேயே) விரைந்து தொழுகிறார். இன்னொருவர், நோன்பு துறப்பதையும் தாமதப்படுத்துகிறார்; தொழுகையையும் தாமதப்படுத்துகிறார் (இவ்விருவரில் யார் செய்வது சரி?)'' என்று கேட்டோம். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் "விரைந்து நோன்பு துறந்து, விரைந்து தொழுபவர் யார்?'' என்று கேட் டார்கள். நாங்கள் "அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி)' என்றோம். அதற்கு, "இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்வார்கள்'' என்று ஆயிஷா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள். அறிவிப்பாளர் : அபூஅத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்) நூல் : முஸ்லிம் 2004 எனவே நபி(ஸல்) அவர்களே செய்யாத ஒன்றை பேணுதல் என்ற பெயரில் யார் சொன்னாலும் அதனை ஏற்கத் தேவையில்லை. நாம் அனைவரும் குர்ஆன் , ஹதீஸின் அடிப்படையில் செயல்படுவோம்.

No comments:

Post a Comment