இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Jul 27, 2010

கவிக்கோ.அப்துல் ரகுமான் அவர்களுக்கு


கவிக்கோ அவர்களுக்கு ஒரு திறந்த மடல்.அன்புள்ள கவிக்கோ.அப்துல் ரகுமான் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.இதுவரை 1958 லிருந்து தங்களுக்கு முன்னர் பதினாறு பேர் வக்ஃப் வாரியத்திற்கு தலைவராக பதவி வகித்து வந்து இருந்திருக்கிறார்கள் அவர்களெல்லாம் வந்தார்கள் போனார்கள் என்பதைத் தவிர வேறு எதுவும் உருப்படியாக செய்ததில்லை, தாங்கள் சுயமாக உயர்ந்ததை தவிர இந்த பதவிளை வைத்து தங்கள் சுயலாபங்களை அடைந்து கொண்டதைத் தவிர நம் சமதாயத்திற்கு எதையாவது செய்தார்களா என்றால் மிகப்பெரிய கேள்விக்குறி மட்டுமே மிஞ்சும். வக்ஃப் வாரிய சொத்துக்கள் மதிபிலடங்காதவைகள் பல இடங்களில் ஆக்கிரமிப்புகளில் இருந்து வருகின்றது. அல்லது குறிப்பிட்ட சிலரின் பயன்பாட்டில் மட்டும் இருந்து வருகிறது. இதற்கு முன்னர் வந்த கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வந்த வக்ஃப் வாரிய தலைவர்கள் நம் சமுதாய மக்கள் பலன் பெறும் வகையில் என்ன உருப்படியாக செய்தார்கள் என்று நோக்கினால்ஒன்றுமில்லை என்றே தோன்றுகிறது.அன்புக்குறிய கவிக்கோ அவர்களே, தாங்கள் பதினேழாவது வக்ஃப் வாரியத் தலைவராக இந்த பதவிக்கு வந்த ஒரு வருட காலத்தில் நம் சமுதாயத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற தங்கள் முயற்சிகள் பாராட்டத்தக்க, மற்றும் வரவேற்கத்தக்கது. ஆனால் தாங்கள் தொடங்கி இருக்கும் சில கல்விப்பணிகள் துவக்க நிலையில் இருக்கும் இவைகள் செயல்பாட்டிற்கு வந்து பூர்த்தியடைந்து அதிலிருந்துநம் சமூகமக்கள் பயன்பெறும் நாளை எதிர் நோக்குகின்றோம். தாங்களும் இதற்கு முன்னர் வந்து போன (ஐம்பது வருட) வக்ஃப் வாரிய தலைவர்கள் போலல்லாமல் நம் சமுதாய மக்கள் மேம்பட ஆக்கபூர்வமான செயல்பாடுகளை தங்களால் செய்ய முடியும் என்று எதிர் பார்க்கிறோம்.ஆளும் கட்சியான தி.மு.க உடன் மற்றும் தமிழக முதல்வருடன் தங்களுக்கு இருக்கும் நெருக்கமான உறவின் மூலம் இன்னும் நிறைய இந்தப் பதவியின் மூலம் தாங்கள் சாதிக்க முடியும் என்று எதிர்பார்க்கின்றோம். நம் நாட்டு அளவில் இட ஒதுக்கீடு என்பது என்றும் நமக்கு எட்டாக்கனியாகத்தான் இருந்து வருகிறது, அவரவர் வாக்குறுதிகளைத் தந்து ஓட்டுக்களைப் பெற்று ஆட்சியில் அமர்ந்ததும் நம் சமுதாய மக்களுக்கு எதையும் செய்யாமல் மறந்து போவதுதான் காலம் காலமாக ஆட்சி செய்யும் அரசியல் கட்சிகள் நம் சமுதாய மக்களுக்கு செய்வதாகும். இந்நிலையில் நாமே முயன்று நம்மால் முடிந்த அளவுக்கு நம்முடைய சமுதாய மக்களின் நிலையை கல்வி, வேலை, வாழ்வியல் ஆதாரங்கள் மற்றும் கட்டமைப்பு, பிறவைகள் போன்றவைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.நம் சமுதாய முன்னேற்றத்திற்காக நாமே இந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொண்டால் நம் சமுதாயமும் கல்வி, வேலை மற்றும் பிறவைகளில் முன்னேறமுடியும்.நாம் ஒவ்வொருவரும் தனிநபராகவோ, பிற அமைப்புகளைச் சார்ந்தவர்களோ இப்படி முன்னேற்றம் பற்றி சிந்தித்து எதிர் வரும் காலங்களில் இவைகளை அடிப்படைக் கட்டமைப்பாக உருவாக்க நாம் அனைவரும் தன்னால் இயன்ற அளவில் பங்களிப்பு செய்து பாடுபட வேண்டும். தங்களைப் போன்ற தலைவர்களுக்கு இது தலையாய கடைமையாகும்.1.கல்வி மையங்களை ஏற்படுத்துதல், குறிப்பாக பெண்களுக்கான கல்வி நிலையங்கள்.பள்ளி நிலையிலிருந்து கல்லூரி வரை மற்றும் தொழில் நுட்பம் சார்ந்தவை.2.கீழ் நிலை படிப்பை முடித்து விட்டு மேல்படிப்புக்காக காத்திருப்பவர்களுக்கு ஆலோசனை மற்றும் உதவுதல்.3.மேல்படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த ஆலோசனை மற்றும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் அரசுப் பணிகளுக்கு தேர்வு எழுத நினைக்கும் மாணவர்களுக்கு பயிற்சி மையங்களை ஏற்படுத்துதல். 4.வேலையில் இருப்பவர்களுக்கு அந்த வேலையில் ஆரம்ப நிலையில் அவர்கள் பிரச்னைகளை எதிர் கொள்ள நம்மிடம் உள்ள தொழில் நுட்ப வல்லுனர்கள் அந்தந்த துறைகளில் அவர்களுக்கு உதவும் வகைக்கு செய்தல்.5.சட்டப்பிரச்னைகளை எதிர் கொள்ள ஆலோசனைகள் நம் மக்களிடம் தலாக், சொத்து பிரச்னைகள், மற்ற சட்டம் சார்ந்த பிரச்னைகளுக்கு உதவும் வகையில் நம்மிடம் உள்ள சட்ட வல்லுனர்களின் உதவியுடன் ஆலோசனை வழங்குதல்.6.மருத்துவமனைகள் ஏற்படுத்துவது.நம் மக்களுக்கென்று இதுவரை எந்த மருத்துவமனையும் தமிழகத்தில் இல்லை என்றே நினைக்கிறேன். இந்த மருத்துவமனைகளில் குடிப்பழக்கம், இல்லறவியல், மனரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கி உதவுதல். போன்றவைகளை நம்மிடம் இருக்கும் மருத்துவர்களைக் கொண்டு செய்ய முயற்சிக்கலாம்.7.வெளிநாடுகளில் வாழும் நம் மக்களுக்கு தேவையான விபரங்களை வழங்கவும், சரியான வேலைகளுக்கு செல்ல வழிகாட்டுதல், வெளிநாட்டில் வாழும் மக்களின் பிரச்னைகளை கேட்கவும், பல வருடங்கள் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு ஊரில் வந்து தங்க வருபவர்களுக்கு தொழில் துவங்க ஆலோசனைகள், அல்லது அவருக்கு தெரிந்த வேலையைப் பெற உதவுவது.8.தனிநபராக தன்னார்வம் உள்ள சகோதரர்கள் நன்றாக படிக்கக் கூடியவர்களுக்கு மேற்படிப்புக்கு உதவலாம். வேலைவாய்ப்பு செய்திகளை நம் மக்களிடம் பரவச் செய்யலாம் எப்படி அந்த வேலையைப் பெற முடியும் என்று வழி நடத்தலாம். தங்களுக்கு இருக்கும் தொழில்நுட்ப அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளல், குறிப்பாக கணினி மற்றும் தொழில்நுட்ப துறையைச் சார்ந்தவர்கள்.9.தனிநபர்கள் இமெயில்களில் தற்போது வேலைவாய்ப்பு செய்திகளை (சகோதரர்கள்) அனுப்புகிறார்கள். நம் ஊர்களில் எத்தனை சகோதரர்கள் இணைய வசதியைப் பெற்றிருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை, இது போன்ற செய்திகளை ஜமாஅத் மூலமாக, பள்ளிவாயில்களில் அறிவித்தல், பள்ளிவாயில்களில் பிரசுரங்களை பகிர்தல் என்றும் செய்யலாம். பள்ளிவாயில்களையும், நம் மக்கள் கூடும் இடங்களையும்நமக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் தளங்களாக மாற்றிக் கொள்ளலாம். ஆலோசனை வழங்கும் மையங்கள் கூட நம்மிடம் இருக்கும் இடங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.இதற்கு புதிதாக கட்டிடம் என்று தேவையை வருங்காலம் பூர்த்தி செய்யட்டும். கல்வி, வேலைவாய்ப்புகள், சட்டத்துறை உதவிகள், மருத்துவம், தொழில் சார்ந்த உதவிகள் இவைகள் மட்டுமே சமுதாயத்தில் அடிப்படைக் கட்டமைப்பை வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும். இவை அனைத்திலும் முன்னேற்றம் பெற நாம் ஒவ்வொருவருமே நம்மால் இயன்றதை பிறருக்கு செய்வோம்.நம் சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் நம்மிலும் கூடுதலாக ஆக்கபூர்வமான வேலைகளை செய்ய வேண்டும். மற்றும் தற்போதைய வக்ஃப் வாரிய தலைவராக இருக்கும் கவிக்கோ.அப்துல் ரகுமான் அவர்கள் தமக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு மற்றும் பதவியை பயன்படுத்தி இன்னும் அதிகமாக நம் மக்களுக்குமுன்னேற்ற வழிகளில் செயல் திட்டங்களை கொண்டு வர வேண்டும். மற்ற நாம் அனைவரும் இவைகளை நமக்காக செய்ய பாடுபடும் தலைவர்களுடன் உறுதுணையாக நின்று செயல்படுவோமாக.

No comments:

Post a Comment