இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Aug 11, 2010

அல் குர் ஆனை ஓதுங்கள் - நோன்பு - 2

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்புச்சகோதரர்களுக்கு :
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

குர்ஆனை ஓதுவதனால் ஏற்படக்கூடிய பலாபலன்களை பல்வேறு ஹதீஸ்கள் மூலமாக நபி பெருமானார் (ஸல்) அவர்கள் நற்செய்தி வழங்கியுள்ளார்கள். குர்ஆனை ஓதுபவர்கள் தான் சிறந்தவர்கள் என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

உலகச் சட்டங்களைப் படித்து பட்டங்களை பெறுவதால் சிறந்தவர்களாக முடியாது.
செல்வச்செழிப்பின் மூலமாகவோ, குடும்ப பரம்பரை மூலமாகவோ சிறந்தவர்களாக முடியாது. மாறாக அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட வேதமாம் குர்ஆனை ஓதுகிறபோதுதான் மேன்மைக்குரியவர்களாக முடியும்.

குர்ஆனுடைய சிறப்பம்சங்களை அல்லாஹ்வும் பெருமானார் (ஸல்) அவர்களும் வலியுறுத்தியிருக்க அதை புறக்கணிக்கக்கூடிய சமுதாயமாக தான் எம்மை காணமுடிகிறது. குறிப்பாக குர்ஆன் ஹதீஸை பின்பற்றுவோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டவர்களின் நிலையும் பரிதாபத்துக்குரியதுதான்.

இதுவரை குர்ஆனைப் படித்திருக்கிறோமா என்று ஒவ்வொரு முஸ்லிமும் சிந்தித்து பார்க்க கடமைப்பட்டுள்ளார்கள். இத்தனை வருடங்கள் வியாபாரத்திலும் சொத்து சுகங்களை சேகரிப்பதிலும், வாழ்க்கையை மங்களகரமாக ஆக்கிக்கொள்வதிலும் கழித்தோமே தவிர நம்மைப் படைத்த இறைவனுடைய வழி காட்டியாம் குர்ஆனை படித்திருக்கிறோமா என்று நெஞ்சைத் தொட்டு எண்ணிப்பார்க்க கடமைப்பட்டுள்ளோம். எத்தனை சூராக்கள் (அல்லது) ஜுஸ்வுக்கள் (அல்லது) வசனங்கள் ஓதத்தெரியும், மனப்பாடமாக தெரியும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

எவருடைய உள்ளத்தில் குர்ஆனைப்பற்றிய அறிவு (வசனங்கள்) சிறிதளவேனும் இல்லையெனில் அது பாழடைந்த வீட்டைப்போல என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி) நூல் : திர்மிதி, தாரமி

குர்ஆனை ஓதாதவர் அதை மனனம் செய்துகொள்ளாதவர் பாழடைந்த வீட்டுக்கு சமமாக அவருடைய உள்ளம் அமைந்துள்ளது என்று உணர்த்தியுள்ளார்கள். உடைந்து போன வீட்டை எவ்வாறு புணர்நிர்மானம் செய்வீர்களோ அவ்வாறு குர்ஆன் வசனங்களை ஓதி அதனை முடிந்தளவு மனனம் செய்து உள்ளத்தை பசுமையாக்கிக்கொள்ள முஸ்லிம் சமுகம் முன் வர வேண்டும் என்பது நபியவர்களின் அவாவாகும்.

எனவே நபியவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் வாழ்ந்து அவ்வழியிலேயே மரணிக்க எமக்கு
வல்ல இறைவன் அருள் செய்வானாக...


இறைவா!

என் நிலையையும்
நினைப்பையும் சமப்படுத்துவாயாக.
நீ நாடியிருந்தால்
நிலையை உயர்த்து.
ஒரு போதும்
நினைப்பை உயர்த்தி விடாதே!

இவண்
M.முஹம்மது இஸ்மாயில்

No comments:

Post a Comment