இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Aug 7, 2010

ஒரு ரூபாயில் ஓர் உயிர்...


ஒரு ரூபாயில் ஓர் உயிர்...

இருபத்தி நான்கு மணி நேர மருத்துவமனையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், தனியொரு நபராக இருபத்தி நான்கு மணி நேர மருத்துவச் சேவை புரியும் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இத்தனைக்கும் அவர் ஒரு டாக்டரோ, நர்ஸோ கிடையாது. பள்ளியில் வெறும் எட்டாம் வகுப்பை மட்டும் முடித்திருக்கும் அவர், அப்படியென்ன மருத்துவச் சேவை செய்துவருகிறார்?

தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசிக்கும் காஜா மொய்தீன், கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் சொந்தமாக ஒரு காலணிக் கடை வைத்திருக்கிறார். மாத வருமானம் பத்தாயிரம் ரூபாயிற்குள்தான். தன் வியாபாரத்திற்கிடையே இவர் செய்துவரும் அந்த அரிய சேவை யாரையுமே ஆச்சர்யப்படுத்தி, நெகிழவைத்து விடும்.

காஜா மொய்தீனின் கையில் எப்போதுமே இரண்டு செல்போன்கள் (9363119202, 9597693060) தயார் நிலையில் இருக்கின்றன. மாறி மாறி இரண்டிற்குமே அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அனைத்தையும் பொறுமையாகக்கேட்டு, விவரங்களைக் குறித்துக் கொள்கிறார். பின்னர், அவர்கள் போகவேண்டிய இடம், பார்க்க வேண்டிய நபர் குறித்த விவரங்களைத் தெளிவான விலாசத்தோடு அவர்களது தொடர்பு எண்களைச் சொல்லி, தன்னிடம் போனில் பேசுபவர்களுக்கு வழிகாட்டுகிறார்.

பேசியவர்களுக்கு என்ன பிரச்சினை? அவர்களை எங்கே போகச் சொல்கிறார்? யாரைப் பார்க்கச் சொல்கிறார்?

மேஜர் ஆபரேஷன் செய்யவேண்டிய நிலை, உயிர்வாழ மாற்றுச் சிறுநீரகம் பொருத்த வேண்டிய அவசியம், அட்மிட் ஆன ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகப் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் - இதுமாதிரி அவசரச் சந்தர்ப்பங்களில் அனாதரவாக நிற்பவர்கள் எல்லாம் காஜா மொய்தீனைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரிடம் உதவி கேட்டு போன் செய்கிறார்கள். அவர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவுவதற்கான வசதி வாய்ப்புகள் அவரிடம் இல்லைதான். ஆனாலும், சம்பந்தப்பட்ட நோயாளிகளின் ஆபரேஷனுக்கோ அல்லது மாற்றுக் கிட்னி பொருத்தவோ, ஆஸ்பத்திரிச் செலவுகளுக்கோ அவர்கள் யாரைத் தொடர்புகொண்டால் உடனடி உதவி கிடைக்கும் என்கிற விவரங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார். உயிர் காப்பதற்கு உதவி செய்யும் நல்ல மனிதர்களிடம், உரிய சமூக சேவை நிறுவனங்களிடம் அல்லது மருத்துவ உதவி புரியும் டிரஸ்ட்களிடம் சம்பந்தப்பட்டவர்களை அனுப்பி வைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் காஜா மொய்தீன்.

சமீபத்தில் அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின்’ கீழ் நோயாளிகள் எப்படி உதவிகளைப் பெறலாம் என்பதற்கான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கிறார். அவசியம் ஏற்பட்டால் நேரடியாக இவரே போய் முன்னின்று நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து, உரிய விதத்தில் அவர்கள் பலன் பெற உதவி புரிகிறார். இதற்கெல்லாம் இவர் வசூலிக்கும் சேவைக் கட்டணம் எவ்வளவு தெரியுமா? “அன்பு ஒன்றைத்தான் கட்டணமாகப் பெறுகிறேன். அவர்கள் குணமடைந்து வீடு திரும்புகிறபோது அன்போடு சொல்கிற நன்றிகள் கோடி பெறுமே” என்று அமைதியாகச் சிரிக்கிறார் காஜா மொய்தீன். இப்படி இவரால் இதுவரை மேஜர் ஆபரேஷன்கள் செய்துகொண்டு பலனும், நலனும் பெற்றவர்களின் எண்ணிக்கை 800.

பத்தொன்பது வருடங்களாக இடைவிடாமல் தொடரும் இந்தச் சேவையில், கூடுதலாக தனக்குத் தோன்றிய இன்னொரு சேவைத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி அதையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார் காஜா மொய்தீன். அந்தத் திட்டத்திற்கு இவர் வைத்திருக்கும் பெயர்தான்: ‘ஒரு ரூபாயில் ஓர் உயிர்’. இவரது சேவை மனப்பான்மையை அறிந்து, அதில் தங்களையும் இணைத்துக் கொண்ட கோவையைச் சேர்ந்த ஜெயகாந்தன், செந்தில்குமார், ஸ்டீபன், ராஜசேகர் ஆகிய நண்பர்கள் இவருக்குப் பக்கபலம். இவர்களின் துணையோடு, ஆபரேஷனுக்காக உதவி கேட்டுவரும் நோயாளி எந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்,

சிகிச்சைக்கான செலவுத் தொகை எவ்வளவு என்பதை கேட்டுக்கொள்கிறார். அத்தனை விவரங்களையும் ஒருபக்க அளவுக்கு நோட்டீஸாக அடித்து, கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளை அணுகி, அந்த நிர்வாகத்தின் அனுமதியுடன் மாணவர்களிடம் அதையொரு கோரிக்கையாக முன்வைக்கிறார். ‘ஒவ்வொரு மாணவனும் ஒரு ரூபாய் கொடுங்கள் போதும். உங்கள் அனைவரின் உதவியாலும் ஓர் உயிர் பிழைக்கப்போகிறது’ என்பதை உணர்வுப்பூர்வமாக எடுத்துச் சொல்கிறார். அங்கேயே ஒரு உண்டியலையும் வைத்துவிட்டு வந்துவிடுகிறார்.

ஆபரேஷன் தேதிக்கு முன்னதாக அங்கே மறுபடி சென்று அதுவரை சேர்ந்திருக்கும் பணத்தை, தன் கையால் தொடாமல் அந்த மாணவர்களில் இரண்டு பேரின் உதவியோடு சேகரிக்கிறார். அருகிலுள்ள வங்கிக்குச் சென்று, கிடைத்த தொகையை ஆஸ்பத்திரியின் பெயருக்கே டி.டி.யாக எடுத்துக் குறிப்பிட்ட ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடுகிறார். இப்படி இவரது உதவியால், மிகச் சமீபத்தில் சிவநேசன் என்ற சிறுவனுக்கு இதயத்தில் ஏற்பட்டிருந்த துளையை அடைக்க கோவை ராமகிருஷ்ணா ஆஸ்பத்திரியிலும், நதியா என்ற பள்ளி மாணவிக்கு மூளைக்கு அருகில் ஏற்பட்டிருந்த கட்டியை அகற்ற கோவை மெடிக்கல் சென்டரிலும் வெற்றிகரமாக ஆபரேஷன்கள் நடந்திருக்கின்றன. இதற்கான மருத்துவச் செலவுகளுக்கு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா பெண்கள் கல்லூரி மாணவிகளும் மற்றும் பி.எல்.பி. கிருஷ்ணம்மாள், எஸ்.எஸ்.என்.ராஜலட்சுமி, பிஷப் அப்பாசாமி, கிருஷ்ணா கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் ‘ஒரு ரூபாயில் ஓர் உயிர்’ திட்டத்தின்கீழ் உதவி புரிந்திருக்கிறார்கள்.

இந்தப் புதுமையான மருத்துவச் சேவைக்கு கல்லூரி மாணவர்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கிறதாம். தமிழ்நாடு முழுக்க உள்ள கல்லூரிகளுக்கு விசிட் அடித்து, பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளைக் காப்பாற்றுவதையே தன் வாழ்நாளின் லட்சியமாகக் கொண்டிருக்கும் காஜா மொய்தீனின் அடுத்த திட்டம். கல்லூரி மாணவர்கள் மூலம் பத்து லட்ச ரூபாய் வசூலித்து, கோவையில் இரண்டு டயாலிசிஸ் கருவியைப் பொருத்துவதுதான்.
“திருப்பூர், மேட்டுப்பாளையம், ஈரோடு என்று பல ஊர்களில் இருந்தும் கிட்னி செயல் இழந்தவர்கள் டயாலிசிஸ் செய்ய இரண்டு நாளைக்கொரு முறை கோவைக்கு வந்து, படும் சிரமங்களைப் பார்த்த பின்புதான் இப்படியொரு திட்டத்தைக் கொண்டுவர நினைத்தேன். இன்னும் மூன்று மாதங்களில் அதை நிறைவேற்றி விடுவேன் என்று நம்பிக்கை இருக்கிறது” என்கிறார் திடமாக.

தனிமரம் தோப்பாகாது என்பது பழைய மொழி. தனிமனிதன் நினைத்தால் ஒரு தோப்பையே உருவாக்க முடியும் என்பது புது மொழி. அதை, உயிர் காக்கும் சேவை மூலம் சத்தமில்லாமல் சாதித்துக் காட்டியிருக்கிறார் காஜா மொய்தீன்.

No comments:

Post a Comment