இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Aug 1, 2010

சங்கைமிகு ரமழானை சம்பிரதாய சகதிக்குள் சாகடிக்காதீர்கள்!

சங்கைமிகு ரமழானை சம்பிரதாய சகதிக்குள் சாகடிக்காதீர்கள்!

அபூஅஹ்மத் அல்அதரி

abooahamed@gmail.com

‘அண்டை வீட்டார் பசித்திருக்க வயிறு நிறைய உண்பவன் இறைவிசுவாசியாக இருக்க முடியாது’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா-20160)

ரமழான் வருவதே ஓர் அருட்கொடை. விசுவாசிகளுக்கு ஒரு வாய்ப்பு. பாவக்கறைகளைப் போக்கி மீட்சி பெற்று புதுவாழ்வு நோக்கி பயணிக்க ஒரு பதிய பாதை. ஒவ்வொருவரும் அவரவர் நிலமைகளுக் கேற்றவாறு ரமழானை வரவேற்கத் தயாராகுவர். ரமழான் வருவதையிட்டு மகிழ்ச்சியடையாத மனம் விசுவாசமுள்ள மனமாக இருக்க முடியுமோ?

ரமழான் வருவதையிட்டு அது கொண்டு வரவுள்ள பரிசுகளோ ஏராளம். வருடா, வருடம் வந்து செல்லும் இந்த வள்ளல் மிகு ரமழான் வாரித்தரும் வரப்பிரசாதங்களில் பிரார்த்தனைகள், இரவுத் தொழுகை, தியாகம், திருக்குர்ஆன் வாசிப்பு, இறை நினைவு, உடல் உறுப்புக்களின் செயற்பாடுகளுக்கு வரையறை இவ்வாறு கூறிக் கொண்டே செல்லமுடியும். ரமழான் வருவதையிட்டு நமது சமுதாயப் பெண்கள் பாத்திரங்களை தூய்மைப்படுத்தி, வீடு வாசல்களை கூட்டிப் பெருக்கி, குப்பைகளை அகற்றி, தலைநோன்பு நோற்கத் தயாராகி விடுகின்றனர்.

இவற்றுக்கப்பால் சில வீடுகளின் நிலையோ மிகவும் பரிதாபம். நாளாந்த வாழ்க்கைச் செலவே மிகவும் சிரமத்தோடு கழியும் சில குடும்பங்களுக்கு ரமழானிற்கென சில பொருட்களையாவது வாங்கிக் கொள்ள பணம் இல்லையே என்கின்ற ஏக்கம்.

பக்கத்து வீடுகளில் பட்டியல் போட்டு பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக தயாராகின்றார்கள். ரமழானுக்கென்றே விஷேடமாக அரிசி, சில்லறைப் பொருட்கள், விலையுயர்ந்த ஈத்தம்பழம், நோன்பு திறக்கும் வேளையில் நாவுக்குகந்த மென்பானங்கள், ஸஹர் உணவுக்கென நாவுக்கு ருசியான தெரிவுகள், இரவுத் தொழுகை முடிந்து வந்தால் தேநீர்க்கு உகந்த பிஸ்கட் வகைகள் என தெரிவுகள் ஏராளம்! ஏராளம்!!

ஆனால், பக்கத்து வீட்டார் இம்முறையாவது கடனில்லாமல் ரமழானை முடிக்க முடியுமா? என்கின்ற கேள்வியுடன்தான் ரமழானுக்குள் நுழைகின்றனர்.

எம்மவர்களில் நல்ல ஸஹர் நேர சாப்பாடு கிடைக்கா தோரும், இன்றைக்காவது நோன்பு திறக்க ஏதும் சிற்றுண்டிகள் கிடைக்காதா? என்கின்ற ஆசையுடன் சில பெண்பிள்ளைகளும், பள்ளிக்கஞ்சுடனே பல நாட்களைக் கழிக்கும் குழந்தைகள், இம்மாதமாவது ஒரு பால்பக்கட் வாங்கினால் நன்றாயிருக்குமே! என அங்கலாய்க்கும் பலரும் நமது சமுதாயத்தில் உள்ளனர்.

நமது சமுதாய மக்களில் பலர் மற்றவர்களும் நம்மைப் போன்றே உள்ளனர் என எண்ணுகின்றனர். ரமழானின் எதிர்பார்ப்பே தியாகமும், அன்பும், புரிந்துணர்வுமேயாகும். இதனையே அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

‘அண்டை வீட்டார் பசித்திருக்க வயிறு நிறைய உண்பவன் இறைவிசுவாசியாக இருக்க முடியாது’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா-20160)

எனவே, ஸகாத் கொடுக்க வேண்டியவர்கள் ரமழான் வந்த பின்னர் கொடுப்போம், 15ம் கிழமை கொடுப்போம், 27ம் கிழமை கொடுப்போம் என்கின்ற அர்த்தமற்ற எண்ணங்களை விட்டுவிட்டு, அறிவார்ந்த ரீதியில் ரமழானுக்கு முன்னரே, தேவையான மக்களுக்கு வழங்கி நோன்பைத் துவக்க உதவினால் அறுபது மடங்கென்ன? பல நூறு மடங்கு நன்மைகளை அழ்ழாஹ் வழங்குவான். தங்களது இப்பெறுமதியான உதவிக்காக உளமாறப் பிரார்த்திப்பார்கள். அவர்கள் நோற்கும் நோன்பைப் போலவே எமக்கும் ஒரு படி நன்மை கிடைக்கும்.

எமது பகுதிகளில் ரமழான் வருகிறதென்றால் திருமணம் பேசப்பட்டிருக்கும் குடும்பங்களின் நிலையோ அந்தோ பரிதாபம். தலை நோன்புக்கு முன்னர், மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய செப்பு, சீர்வரிசைக்கு ஆகக்குறைந்தது மூவாயிரம் ரூபாயாவது வேண்டுமே! இப்படி ஒரு தாயின் பெருமூச்சு. இப்பணம் இருந்தால் இருக்கும் கடனைக் கொடுத்து விட்டு நோன்பைத் துவக்க சில பொருட்களையாவது வாங்கலாமல்லவா? எனும் ஏக்கம் மறுபுறம்.

சம்பந்தம் பேசப்பட்டிருக்கும் குடும்பத்தில் நிறைய அங்கத்தவர்கள் உள்ளனரே. ஏதாவது உணவுப் பண்டங்கள் செய்து அனுப்புவதாயிருந்தாலும் எல்லோருக்கும் போதுமானதாய் இருக்குமா? என்கின்ற பயம் வேறு. ஏதேனும் குறை நிகழ்ந்துவிட்டாலும் கதை பேச்சுக்கு முகங்கொடுக்க நேரிடுமே. அவங்க திண்டு கழித்த கூட்டமாச்சே.

எங்கே மூத்த மகளின் திருமணம் தடைப்பட்டு விடுமோ என்கின்ற அச்சம் உம்மாவுக்கு. இவ்வளவு காலம் பொறுமையாய் இருந்திட்டோம்தானே! நம்ம கஷ்டம் நம்மளுடன் இருக்கட்டும்.

ராத்தாவை திருமணம் செய்யப் போகின்ற மாப்பிள்ளையின் உம்மா மற்றைய ஆண்பிள்ளைகளின் மூலம் ஏராளமாக வாங்கி ருசி கண்டவர். நாம் சமாளித்துக் கொள்வோம். வேண்டுமெனில், இம்முறை எடுக்க கூடிய உடுப்பையும் எடுக்காது சமாளிப்போம் என தாய்க்கு ஆறுதல் கூறுகின்ற மற்றைய பிள்ளைகள்.

இத்தகைய ஆண் (அ)சிங்கங்களை பெற்ற அன்னையர்களே! ஒரு காலத்தில் நீங்களும் இந்த ஆண்பிள்ளைகளை வளர்ப்பதில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கியிருக்கலாம். சீர்வரிசை உட்பட எதுவும் வேண்டாமென்று இப்போதே சொல்லிவிடுங்கள், அழ்ழாஹ் உங்களுக்கு மிகப்பெரும் அருள்புரிவான்.

அதுமாத்திரமன்றி, தலை நோன்பிற்கு மகளை மாமியார் வீட்டிற்கு கூட்டிச் சென்று விட வேண்டுமே. கையில் ஏதேனும் பெறுமதியாகக் கொடுத்தனுப்ப வேண்டும். அப்போதுதான் நமது பிள்ளை சில நாட்களுக்கேனும் சந்தோஷமாக நின்று வர முடியும். ஏனெனில், மூத்த மகனின் பெண்வீட்டார் தாராளமாக, கைநிறைய கொண்டு செல்வார்கள். நாளைக்கு எல்லோரும் ஒன்றாயிருந்து ஸஹர் உணவு உண்ணும் போது, நோன்பு திறக்கையில் கதை வந்திடக்கூடாது. (ஏனெனில், இவ்வாறான முறையில் பெண் வீட்டாரிடமிருந்து கேவலமாக பிச்சை பெற்று, அப்பிச்சைகள் அவர்களது அந்தஸ்த்துக்கு(?) உகந்ததல்ல என்பதற்காக அவற்றை தூக்கி வீசியதாக, மண்ணில் புதைத்ததாக பெருமை பேசிக் கொள்பவர்களும் எமது சமூகத்தில் இருக்கவே செய்கின்றனர்.) என்னத்தைக் கொண்டு வந்தா? இளைய மருமகள். நமக்கு அல்சர், கொலஸ்ட்ரோல். நான் தொட்டும் பார்க்கவில்லை என்றும் கூறிவிடுவார்கள்.

அன்புள்ளவர்களே! பெண்வீட்டார்கள் சமூக வழக்கை நினைத்து தர முனைந்தாலும், மாப்பிள்ளைகளைப் பெற்ற தாய்மார்களே! உங்களின் நோன்பு இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமாயின் எக்காரணம் கொண்டும் அவற்றைப் பெற்றுவிடாதீர்கள்.

உங்களைப் போன்றே அவர்களுக்கும் பசிக்கும். நாங்கள் மனம் விரும்பித்தான் தருகின்றோம் என்று கூறினாலும், தமது மகளிடமாவது மன ஆதங்கத்தைச் சொல்லாமல் விடமாட்டார்கள். வசதி படைத்த தனவந்தர்கள் ஊரறியக் கொடுக்க காத்திராது முதலில் உறவுகளைக் கவனிக்க முன்வர வேண்டும்.

இறுதிப் பத்து வரட்டும் ஸகாத்தை கணித்து கொடுப்போம் என்றில்லாது முன்னரே கொடுத்துதவுவதன் மூலம் எமது உறவுகள் நிம்மதியாக நோன்பு நோற்க முடியும்.

தேங்க்ஸ் :- தாருல் அதர் அத்தஅவிய்யா
www.dharulathar.com

No comments:

Post a Comment