இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Aug 1, 2010

காணாமல் போன கந்தூரிகளும் உயிரூட்டத் துடிக்கும் உலமா?க்களும்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மத்துல்லாஹி வபரஹாத்துஹு)

காணாமல் போன கந்தூரிகளும் உயிரூட்டத் துடிக்கும் உலமா?க்களும்

எம்மைப்படைத்து, எமக்கு ரிஸ்க் அளித்து பாரிபாலித்துக் கொண்டிருக்கின்ற ரப்புல் ஆலமீனாகிய அழ்ழாஹுத்தஆலா இவ்வுலகில் கோடான கோடி படைப்புக்களை படைத்து அவை அனைத்தையும் எமக்காகவே வசப்படுத்தித் தந்துவிட்டு அவனது பூமியில் அவன் மாத்திரமே வணங்கப்படவேண்டும் அவன் அல்லாத வேறு எவரும் வணங்கப்படக்கூடாது, எவ்வகையிலும் அவனுக்கு மாத்திரம் செய்யப்படுகின்ற வணங்கங்களில் எந்த ஒரு நபியையோ, வானவரையோ, மகானையோ, வலிiயையோ (இறை நேசர்) கூட்டுச் சேர்க்கக்கூடாது எனும் தௌஹீத் கொள்கை இப்புவியை ஆழவேண்டுமென்பதற்காக பல இறைத்தூதர்களை அனுப்பியதோடு இறுதியாக முஹம்மத் (ஸல்) அவர்களை அனுப்பிவைத்தான். இக்கொள்கையை எடுத்தியம்பப் புறப்பட்ட நபிமார்கள், நபித்தோழர்கள், இமாம்கள் அனைவரும் இப்பாதையில் பல இடர்களை சந்தித்தும் சிறிதளவும் அவற்றிலிருந்து பின்வாங்காமல் சத்தியப் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றனர்.



அழ்ழாஹுதஆலா திருமறைக்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்.
‘இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும் ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை விரோதிகளாக நாம் ஆக்கியிருந்தோம்; அவர்களில் சிலர் மற்றவரை ஏமாற்றும் பொருட்டு, அலங்காரமான வார்த்தைகளை இரகசியமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்;;.’ (அல்குர்ஆன் 6:112)



மேற்படி வசனத்திற்கேற்ப சத்திய பிரச்சாரதத்தில் ஈடுபடுகின்ற அனைவருக்கும் ஒவ்வொரு கால கட்டத்திலும் பித்அத்வாதிகள் என்றழைக்கப்படக்கூடிய வழிகேடான கொள்கைகளை இஸ்லாமிய மார்க்கத்திற்குள் புகுத்தி அதன் தனித்துவத்தை களங்கப்படுத்த முனைந்தவர்களை இறைவன் எதிரிகளாக ஆக்கியிருப்பது அழ்ழாஹ்வினுடைய வழிமுறையாக இருக்கிறது. இவ்வாறான அசத்தியவாதிகளை காலாகாலம் உண்மையான அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் மார்க்க அறிஞர்கள் கிதாபுகள் வழியாகவும், கலந்துரையாடல்கள், விவாதங்கள் வழியாகவும் தோலுரித்துக் காட்டியிருக்கின்றார்கள் என்பது வரலாறு கூறும் உண்மையாகும்.



இந்த அடிப்படையில் நோக்குவோவோமயானால் நமது சமூகத்தில் இன்றைக்கு எல்லாம் அவனே என்ற அத்வைதம், தொழுகை நிராகரிப்பு, சூபித்துவம் போன்ற இஸ்லாமிய அடிப்படைகளை தகர்த்தெறிகின்ற சித்தாந்தங்கள் கால் பதித்திருக்கின்றன. இவ்வாறான வழிகேடுகளுக்கெதிராக அவ்வப்போது பிரபல மார்க்க அறிஞர்களாலும் குறிப்பாக எமதூரைச் சேர்ந்த மதிப்பிற்குரிய மார்க்க அறிஞர் கலாநிதி அஹ்மத் அஷ்ரப் அவர்களாலும் ஏனைய தௌஹீத் அமைப்புக்களாலும் விவாத அழைப்புக்கள் விடுக்கப்பட்டும் இதுகாலவரைக்கும் அவற்றை ஏற்றுக்கொண்டு தாங்கள் கொண்ட கொள்கை சத்தியக்கொள்கைதான் என்பதை மக்கள் மத்தியில் நிரூபிக்க முன்வராமல் ஓடி ஒளிந்து கொண்டே இருக்கின்றனர்.



எது எவ்வாறிருப்பினும் அசத்தியக் கொள்கைகளை இடைவிடாது எதிர்த்துக்கொண்டிருப்பது நபிமார்களின் சுன்னா என்ற ரீதியில் தற்பொழுது நமது காத்தமா நகரில் அரங்கேறியிருக்கின்ற கந்தூரிகள், திருவிழாக்கள், திருக்கொடியேற்றங்கள் போன்ற அம்சங்களை இப்பிரசுரத்தினூடாக தெளிவுபடுத்த விளைகின்றோம்.



பொதுவாக, மேற்குறிப்பிடப்பட்ட வழிகெட்ட இயக்கங்கள் அனைத்தும் பெயரளவில் வித்தியாசப்பட்டிருந்தாலும் அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் முற்றிலுமாக வெறுக்கின்ற கந்தூரி, தட்டு, தகடு, தாயத்து மற்றும் மௌலிது பாடல்கள் படிப்பது போன்ற நூதன அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில் இவர்களுக்கு மத்தியில் நெருங்கிய உறவு காணப்படுவதனை தாங்கள் யாவரும் நன்கறிவீர்கள்.



கந்தூரி என்றால் என்ன?
அழ்ழாஹ்வினால் படைக்கப்பட்ட அடியார்களை அழ்ழாஹ்வினது அந்தஸ்துக்கு கொண்டு சென்று, அவர்களின் பெயரில் நேர்ச்சை செய்து, நார்ஸாக்களை விநியோகித்து பள்ளிவாயல்களில் உற்சவம், திருவிழாக்களுக்கு ஒப்பாக பொது மக்களை வருடத்தில் ஒரு முறை மார்க்கத்தின் பெயரால் இணைவைக்கத் தூண்டும் செயலே கந்தூரியாகும்.



இக்கந்தூரிகளுக்கும் இஸ்லாமிய அறிஞர்களுக்கும் இம்மியளவு கூட சம்பந்தமில்லை. நபித்தோழர்களை துவம்சம் செய்யும் ஷீஆக்களின் வழித்தோன்றல்களே செத்துப்போகும் இந்த மூடப்பழக்த்தை உயிர்ப்பிக்கத் துடித்துக்கொண்டிருக்கின்றனர்.



கந்தூரிகளைப் பொருத்தவரைக்கும் பலவிதங்களில் அவை அமையப்பெற்றிருக்கின்றன. ஷிர்க்கான கருத்துக்கள் நிறைந்திருக்கின்ற புர்தா, மௌலிதுகள் போன்ற அரபுப்பாடல்களை பாடி அவற்றை தமாம் செய்து அதற்காக கந்தூரி நடாத்துதல், அல்லது குறிப்பிட்ட சில மஹான்களின் புகழ்களைப் பாடி கொடிகள் ஏற்றி, அவர்கள் பேரில் நேர்ச்சைகள் செய்து நார்ஸாக்கள் கொடுத்தல், அல்லது புஹாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களை அரபியில் குறிப்பிட்ட மாதங்கள் வாசித்து அதை விளங்காது மக்களுக்கும் அதனை விளக்காது தமாம் செய்து ஆடு மாடுகளை அறுத்து மக்களை அழைத்து கந்தூரி கொடுத்தல் இப்படியாக கந்தூரிகள் பலவகைப்படுகின்றன.



மொத்தத்தில் இவ்அனைத்து கந்தூரிகளிலும் ஷிர்க்கான விடயங்கள் காணப்படுவதை சாதாரண பொது மகனும் விளங்கிக் கொள்வான். தற்பொழுது நமது ஊரிலே நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற கந்தூரிகளில் அழ்ழாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுவது, அவன் அல்லாதவற்றிற்காக நேர்ச்சைகள் செய்து நார்ஸாக்கள் கொடுப்பது, அவன் அல்லாதவற்றிற்காக அறுத்துப்பழியிடுவது, கப்ருகளுக்கு முன் நின்று கொண்டு சாஷ்டனங்கங்கள் செய்வது இப்படியாக இன்னோரன்ன மகா கொடிய பாவங்கள் அரங்கேற்றப்பட்டு அப்பாவி மக்களின் ஈமானுக்கு வேட்டு வைக்கப்படுகின்றது. இவற்றை பார்க்கும் போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பின்வரும் கூற்று எமக்கு ஞபாகத்திற்கு வருகின்றது.



‘உங்களுக்கு முன்வந்தவர்களின் வழிமுறைகளை சாண் சாணாக முழம் முழமாக பின்பற்றி நடப்பீர்கள். அவர்கள் உடும்பின் பொந்திற்குள் நுழைந்தாலும் நீங்களும் அவர்களை பின்தொடர்வீர்கள். அச்சமயம் நாங்கள், யஹுதிகளையும் நஸாராக்களையுமா (தாங்கள் குறிப்பிடுகிறீர்கள்) என கேட்டதற்கு அவர்கள் அல்லாது வேறு யாராக இருக்க முடியும் என பதிலளித்தார்கள்.’ (ஸஹீஹுல் புஹாரி-3456, ஸஹீஹுமுஸ்லிம்-6723)



அழ்ழாஹ்வின் மார்க்கம் இப்புவியில் வாழ வேண்டுமென்பதை விரும்பும் ஈமானிய நெஞ்சங்களே, மேற்குறித்த நபிமொழியை மையமாகக்கொண்டு நாம் ஏற்றிருக்கும் தீனுல் இஸ்லாமிய மார்க்கத்தை நாம் தூய வடிவில் பின்பற்றுகிறோமா? அல்லது எமக்கு அந்நிய மதமான இந்து மத சடங்கு சம்பிரதாயங்களை அச்சொட்டாக பின்பற்றுகிறோமா? என சிந்தனை செய்வோமாக.



அங்கே சிலை வணக்கம் : இங்கே கப்ரு வணக்கம்
அங்கே தேர் திருவிழா : இங்கே சந்தனக்கூடு
அங்கே பால் அபிஷேகம் : இங்கே சந்தன அபிஷேகம்
அங்கே சாம்பல் திருநீறு : இங்கே சந்தனத் திருநீறு
அங்கே சிலைக்குப்பட்டுப்புடவை : இங்கே கப்ருக்குப்பட்டுப்புடவை
அங்கே பூமாலை ஊதுபத்தி ஆராதனை : இங்கேயும் பூமாலை |ஊதுபத்திகள்
அங்கே குத்துவிளக்கு : இங்கேயும் குத்து விளக்கு
அங்கே அம்மன் முன் சாஷ்டாங்கம் : இங்கே கப்ரின் முன் சாஷ்டாங்கம்
அங்கே கோயிலைச் சுற்றி வலம் வருதல் : இங்கே கப்ரை சுற்றி வலம் வருதல்
அங்கே சர்க்கரை கற்கண்டு பிரசாதம் : இங்கே சர்க்கரை பாயாசம் தபர்ருக்
அங்கே நேர்ச்சை காணிக்கை : இங்கேயும் நேர்ச்சை காணிக்கை
அங்கே சாமியிடம் வேண்டுதல் : இங்கே கப்ரிலே வேண்டுதல்
அங்கே பிள்ளைக்காகப் பூஜை : இங்கே பிள்ளைக்காப் பிரார்த்தனை
அங்கே குழந்தைக்காக தொட்டில் : இங்கேயும் மண்ணறையில் தொட்டில்
அங்கே தீட்சை : இங்கே முரீது, பைஅத்
அங்கே பக்திப்பாடல் : இங்கே மவ்லிது ராத்தீபு பைத்து
அங்கே ஜோதிடம், ஜாதகம் : இங்கே பால்கிதாபு, இஸ்முகிதாபு
அங்கே சுப்ரபாதம் : இங்கே ஞானப்பாடல்
அங்கே நல்ல நாள், ராவு காலம் : இங்கே நஹ்ஸு நாள், ராவு காலம்
அங்கே கழுத்தில் கையில் தாயத்து: இங்கேயும் கழுத்தில், கையில் தாயத்து
அங்கே சாமி அருள் வாக்கு : இங்கே அவ்லியா கனவில் அருள்வாக்கு
அங்கே திதி திவசம் : இங்கே கத்தம், பாத்திஹா
அங்கே சரஸ்வதி, லட்சுமி படங்கள் : இங்கே நாகூர், அஜ்மீர் படங்கள்
அங்கே பூசாரி : இங்கே ஆலிம்சா

இவை மட்டுமா? இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். வெறுமனே பெயர்களில் மாத்திரம் முஸ்லிம்களாக வாழ்ந்துவிட்டு எமது செயற்பாடுகளிலும் சம்பிரதாயங்களிலும் இந்துக்களாக வாழந்;து கொண்டிருக்கின்றோமே.



அன்பார்ந்தவர்களே!
நல்லடியார்களின் பொருட்டால் பிரார்த்தித்தல், அல்லாஹ் அல்லாதவர் களிடத்தில் உதவி தேடுதல், அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுத்துப் பலியிடுதல், நேர்ச்சை செய்தல், அல்லாஹ் அல்லாதவர்களின் பெயரால் சத்தியம் செய்தல், கந்தூரி, சமாதி வழிபாடு, மீலாது, மௌலீத், புர்தா, ராத்திபு, கத்தம், பாத்திஹாக்கள், தட்டு, தகடு, தாயத்து, ஸலாத்துந்நாரியா போன்ற ஷிர்க், பித்அத்கள் மார்க்கத்தில் உள்ளதுதான் என வாதிடும் எவருடனும், எங்கும், எப்பொழுதும் பகிரங்க விவாதம் செய்வதற்கு எமது தாருல் அதர் அத்தஅவிய்யா தயாராக இருக்கின்றது என்பதை இத்தாள் அறியத் தருவதோடு, இன்றைய அறிவியல் யுகத்தில் அப்பாவி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி மார்க்கத்தின் பெயரால் நச்சுக்கருத்துக்களை விதைத்துக் கொண்டிருக்காமல் சத்தியம் வெளிப்படும் பொருட்டு எமது பகிரங்க விவாத அழைப்பை உடனடியாக எதிர் கொள்ள முன்வருமாறு வினயமாய் வேண்டிக் கொள்கின்றோம்.



குறிப்பு: மேற்குறிப்பிடப்பட்ட அம்சங்களுக்கு அமைவாக கந்தூரி சபைகளுக்கு சமூகமளிப்பதோ அவற்றில் வழங்கப்படும் உணவைச் சாப்பிடுவதோ அவற்றிற்கு பணங்கள் கொடுத்து ஊக்குவிப்பதோ ஹராமான, அழ்ழாஹ்வின் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.



தேங்க்ஸ் :- தாருல் அதர் அத்தஅவிய்யா
www.dharulathar.com

No comments:

Post a Comment