இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Aug 14, 2010

இந்திய சுதந்திரமும்- இஸ்லாமிய சுதந்திரமும்!

இந்திய சுதந்திரமும்- இஸ்லாமிய சுதந்திரமும்!

இன்னும் இரு தினங்களில் இந்தியாவின் 63 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது . சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் படு வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில்,சுதந்திர தினத்தை முன்னிட்டு சில முஸ்லிம் சகோதரர்கள் தங்களுக்கிடையே வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கிறார்கள். இந்த மாதிரி வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வது சரியா என்றால், இல்லை என்பதுதான் சரியாகும். முஸ்லிம்களை பொறுத்தவரையில் கொண்டாடக்கூடிய திருநாள்கள் இரண்டுமட்டுமே!
1 . ஈகைத்திருநாள்.
2 .தியாகத்திருநாள்.
இவையல்லாத எந்த ஒரு நாளையும் நபி[ஸல்] அவர்கள் கொண்டாடியதாகவோ, வாழ்த்துக்களை பரிமாரிக்கொண்டதாகவோ ஹதீஸ்களில் காணமுடியாது. அவ்வளவு ஏன்! இதே சுதந்திரம் சம்மந்தப்பட்டதுதான் மக்கா வெற்றி. மக்காவிலிருந்து முஷ்ரிக்கீன்களின் தொல்லை காரணமாக மதீனா வந்த நபி[ஸல்] அவர்கள், சில ஆண்டுக்களில் மக்காவை நோக்கி படையுடன் புறப்பட்டு சென்று கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமின்றி மக்காவை, தன் சொந்த மண்ணை முஷ்ரிக்கீன்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்டு தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்தார்களே! அந்த புனித நகரம் சுதந்திரம் பெற்ற நாளை நபி[ஸல்] அவர்கள் கொண்டாடியது உண்டா? இல்லையே! நாட்டை நேசிப்பதை காட்டுவதற்காக சுதந்திரதினத்தை கொண்டாடுகிறோம் என்று சிலர் கூறுகிறார்கள். ஒரு முஸ்லிம் முதன்முதலில் நேசிக்கவேன்டியது புனித பூமியான மக்கா அல்லவா? அப்படியாயின் மக்கா வெற்றி நாளை கொண்டாடாதது ஏன்? நாட்டை நேசிப்பது என்பது வெறுமனே வாழ்த்துகளை கூறுவதோ, அல்லது அன்றைய தினம் கிடைக்கும் விடுமுறையை அனுபவிப்பதோ, அல்லது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுதந்திரப்போராட்ட தியாகிகளான[?] கூத்த்தாடிகளின் நிகழ்ச்சிகளை ரசிப்பதோ அல்ல. மாறாக நாட்டை நேசிப்பது என்பது நாட்டிற்கு ஆபத்தென்றால் நாட்டை காப்பதில், நாட்டை சீரழிக்கும் தீமைகளை நாட்டிலிருந்து களைவதில் உறுதியாக முன்வருவதுதான் உண்மையான நேசமாகும்.அடுத்து இந்தியாவில் சுதந்திரம் எந்த அளவுக்கு உள்ளது என்பதையும்- இஸ்லாம் வழங்கும் சுதந்திரத்தையும் பார்ப்போம்.

இந்தியக்கொடியில் மூவர்ணம் இருக்கும். அதாவது பச்சை-வெள்ளை-ஆரஞ்சு. இந்த கலர்கள் மும்மதத்தை குறிக்கும் என்று சிலர் கூற கேட்டதுண்டு. அதாவது பச்சை முஸ்லிம்களையும், வெள்ளை கிறிஸ்தவர்களையும், ஆரஞ்சு[காவி] இந்துக்களையும் குறிக்கும் என்று! இப்படி கொடியில் மும்மதமும் சமம் என்று காட்ட முற்படுபவர்கள் மும்மதத்தினரும் சமமான சுதந்திரத்துடன்தான் வாழ்கிறார்களா என்பதை கவனிக்க தவறிவிட்டனர்.

முதலாவது இந்து மதத்தை எடுத்துக்கொள்வோம். இந்து மதத்தை சார்ந்த ஒரு பிரிவினரை தாழ்த்தப்பட்டவர்களாக-தீண்டத்தகாதவர்களாக கருதுவதை பார்க்கிறோம். இவ்வாறு பிறப்பின் அடிப்படையில் தனது மதத்தை சார்ந்தவர்களையே பேதம் பார்க்கும் இந்த செயல் பாமரர்கள் மட்டுமன்றி படித்தவர்கள்- உயர் பதவி வகித்தவர்களிடம் கூட இருந்ததை நாம் கடந்த கால நிகழ்வுகளில் காணமுடியும். மத்திய அமைச்சராக இருந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த ஒருவர், காந்தியின் சிலையை திறந்துவைத்தார். இவர் திறந்துவைத்ததால் அந்த சிலை தீட்டுப்பட்டு விட்டதாக ஒரு கூட்டம் கருதி கங்கை நீரை கொண்டுவந்து சிலையை கழுவியதாக நாம் அறிந்துள்ளோம். அவ்வளவு ஏன் ? தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று கல்வியிலும்- உயர்பதவிகளிலும் உயர்வான நிலையை அடைந்துவிட்டாலும், இன்னும் சமத்துவபுரங்கள் என்ற பெயரிலும், சேரி என்ற பெயரிலும் இவர்களை சமூகம் ஒதுக்கித்தானே வைத்துள்ளது. இதில் எங்கே வாழ்கிறது சுதந்திரம்?

இப்போது இஸ்லாம் வழங்கியுள்ள சுதந்திரம் பாரீர்;

'நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அருகிலுள்ள ) 'ரபதா' என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, 'நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: 'அபூதர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்" என அபூதர் கூறினார்" என மஃரூர் கூறினார்.[புஹாரி எண் 30 ]

எந்த வித உரிமையும் இல்லாத அடிமையை நபித்தோழர் அபூதர்[ரலி] அவர்கள் திட்டியதற்காக, அபூதர்[ரலி] அவர்களை நபி[ஸல்] அவர்கள் கண்டிக்கிறார்கள். அன்றிலிருந்து அந்த அடிமையை தனது சகோதரன் போல பாவித்து தான் அணியும் ஆடை போன்றே தனது அடிமைக்கும் அணிவித்து மகிழும் அளவுக்கு அபூதர்[ரலி] அவர்களை மாற்றியது எது இஸ்லாம் அல்லவா? மனிதனுக்கு மத்தியில் ஏற்ற தாழ்வை நீக்கியது இஸ்லாமிய சுதந்திரமல்லவா? இவை எல்லாவற்றிற்கும் மேலாக கருப்பு நிற ஹபஷி அடிமையாக இருந்த பிலால்[ரலி] அவர்களை தனது காரியதரிசியாக-தோழராக- தொழுகைக்கு அழைக்கும் அழைப்பாளராக ஆக்கி, அங்கும் வர்ண பேதத்தை ஒழித்த நபி[ஸல்] அவர்கள் ஒரு முன்மாதிரியல்லவா?

அடுத்து கிறிஸ்தவர்கள்-முஸ்லிம்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கிரார்களா? என்றால், சுதந்திரமாக அவர்கள் இருப்பதுபோல் தோற்றமளித்தாலும் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு நியாயம் கிடைப்பது அரிதாகவே உள்ளது. ஒரிசாவில் கிறிஸ்தவ பாதிரியார் தனது மூன்று பிள்ளைகளுடன் உயிரோடு இந்துத்துவாக்களால் கொளுத்தப்பட்டார். கொளுத்தியவனுக்கு 'தேச பக்தர்' என்று நற்சான்று அளித்தார் அன்றைய துணைப்பிரதமர். இன்றுவரை இந்த அநீதிக்கு நியாயம் வழங்கப்பட்டுள்ளதா?

மும்பை-கோவை குண்டுவெடிப்பு குற்றங்களை செய்தார்கள் என்று முஸ்லிம்கள் சிலருக்கு தண்டனை கூட விதிக்கப்பட்டது. வரவேற்கிறோம். ஆனால், அதே மும்பை- கோவையில் முஸ்லிம்களை கருவறுத்த சங்க்பரிவார கும்பல் ஜாலியாக நடமாடுகிறதே இதுதான் இந்திய சுதந்திரம். குஜராத்தில் கோத்ரா ரயிலை எரித்தார்கள் என்ற குற்றச்சாட்டை கூறி பல நூறு முஸ்லிம்களை பொடாவில் தள்ளியது குஜராத் அரசு. அதே குஜராத்தில் சங்க்பரிவார கும்பலால் கற்பழிக்கப்பட்ட, உயிரோடு கொளுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு நியாயம் வழங்கப்பட்டதா? இல்லையே! மாறாக பெயருக்கு கைது செய்து வைக்கப்பட்டிருந்த சிலரையும் சமீபத்தில் கோர்ட் விடுதலை செய்கிறது. ஆக பட்டபகலில் பலபேர் சாட்சியாக முஸ்லிமை ஒருவன் கொன்றால் அவன் ஜாலியாக நடமாடலாம். அவனயோ சட்டம் ஒன்றும் செய்யாது இதுதானே இந்திய சுதந்திரம்! இப்போது நீதி விஷயத்தில் இஸ்லாமிய சுதந்திரத்தை பாருங்கள்;

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்;
ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம் 'உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்க மேன்மை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று ஏதோ ஒரு விஷயத்தில் சத்தியமிட்டுப் பேசினார். அதற்கு அந்த யூதர், 'உலகத்தார் அனைவரை விடவும் மூஸாவுக்கு மேன்மை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று (பதிலுக்கு) கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்ட) அந்த முஸ்லிம் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். உடனே அந்த யூதர், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து தமக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்தவற்றைத் தெரிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (அந்த முஸ்லிமை அழைத்து வரச் சொல்லி) 'மூஸாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள்.[நூல்;புஹாரி]

இந்த செய்தியை நன்றாக பாருங்கள்; அடித்தவர் ஒரு முஸ்லிம் , அடிவாங்கியவர் ஒரு யூதர். வழக்கு நபி[ஸல்] அவர்களிடம் வந்தபோது, தன்னை உயர்த்திக்கூறி தானே யூதனை முஸ்லீம் அறைந்தார் என்று முஸ்லிமுக்கு நபியவர்கள் 'சப்போர்ட்' செய்யவில்லை. மாறாக யூதர் எந்த மூஸா நபியை சிறந்தவர் என்று சொன்னாரோ, அதே மூஸா நபியைவிட நான் சிறந்தவன் என்று சொல்லாதீர்கள் என்று தனது தோழருக்கு அதாவது முஸ்லிமுக்கு அறிவுரை வழங்கினார்கள் என்றால் இஸ்லாம், நீதி விசயத்தில் நீதியை மட்டுமே பார்க்குமேயன்றி சாதியை பார்க்காது இதுதான் இஸ்லாமிய சுதந்திரம்.

காந்தி சொன்னார், ஒரு பெண் நள்ளிரவில் தன்னந்தனியாக சுதந்திரமாக நடமாடும் நாளே உண்மையான சுதந்திர நாள் என்று! இன்று நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கணக்கிலடங்குமா? கிரிமினல்கள்தான் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறார்களா என்றால் சட்டத்தை நிலை நாட்டும் பொறுப்பில் உள்ள காவல்துறையினரில் சிலரும்-ராணுவத்தில் சிலரும் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவதை பார்க்கும்போது, எங்கே வாழ்கிறது சுதந்திரம்? நபி[ஸல்] காலத்தில் வழிப்பறி பற்றி புகார் கூறப்பட்டபோது வழிப்பறி செய்பவர்களுக்கு மாறுகால் மாறுகை வாங்கப்படும் என்ற தண்டனையை அறிவித்துவிட்டு நபி[ஸல்]சொன்னார்கள்; ஹீரா எனும் இடத்திலிருந்து கஃபா வரை ஒரு பெண் தன்னந்தனியாக பயணித்து அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் அஞ்சாமல் சென்றுவருவதை பார்பீர்கள் என்றார்கள்.[புஹாரி] அந்த நிலையை உருவாக்கியும் காட்டினார்கள். இதுதான் இஸ்லாமிய சுதந்திரம்.

அட! இதையெல்லாம் விடுங்கள். சுதந்திர தினத்தன்று சுதந்திரமாக பிரதமரும்-முதல் அமைச்சரும் கொடியேற்ற முடிகிறதா? தமிழகத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்புடன் முதல்வர் கொடியேற்றுகிறார் எனில், சுதந்திரத்தை புரிந்து கொள்ளலாம். குவைத் போன்ற அரபு நாடுகள் சிலவற்றில் சுதந்திரதினம் கொண்டாடுகிறார்கள். இங்கு எந்த அடுக்கு பாதுகாப்பும் இல்லை எந்த பயமும் இல்லாமல் கொண்டாடுகிறார்கள். எனவே மக்களின் நிம்மதியான பயமற்ற வாழ்க்கை உறுதி செய்யப்பட்டு, அனைத்து மதத்தவரும் சமமாக பாவிக்கப்பட்டு, அனைவருக்கும் சமநீதி வழங்கப்படும் நாளே சுதந்திரதினம். அந்த நாளை எதிர்நோக்கி இறைவனிடம் கையேந்துவோம்.

No comments:

Post a Comment