இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Aug 1, 2010

ரமழானை வரவேற்க தயாராகுவோம்!

ரமழானை வரவேற்க தயாராகுவோம்!

மௌலவி SLM நஷ்மல் (பலாஹி)
nashmelslm@yahoo.com

‘யார் ரமழானில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறாரோ அவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2008)

அட ஒரு வருடமாகிவிட்டதா? அன்றுதானே வந்து போனது ரமழான். அப்படியானால் நாம் இரு பெருநாட்களை கழித்துவிட்டோமா? அல்குர்ஆன் ஓதி ஒருவருடமாகப் போகின்றதா? தஹஜ்ஜத்து தொழுகின்ற மாதம் வருகின்றதா? பகல் வேளையில் சற்று நிம்மதியாகத் தூங்க சந்தர்ப்பம் தருகின்ற மாதம் கிடைக்கப் போகிறது. இவைகள் எல்லாம் கடந்த ரமழான் மற்றும் எதிர்நோக்கியிருக்கும் ரமழான் பற்றிய மக்களின் கருத்துக்கள்.

இப்படியெல்லாம் பேசிக் கொள்ள காரணம் என்னவென்றால் ரமழான் மாதத்தை இவர்கள் இன்னும் சம்பிரதாய மாதமாகவே நோக்குவதுதான். மாறாக, இம்மாதத்தினைப் பயன்படுத்தி பண்பாட்டு ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் ஏதேனும் புதிய அடைவுகளை அடைய வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு குறைந்துதான் செல்கின்றது.

1. நோன்பின் மகிமையை சரியாகப் புரிதல்.

நோன்பின் நோக்கையும், இலக்கையும் தெளிவாகப் புரிந்து கொள்வது நமது கடமையாகும். இறையச்சம் என்கின்ற இலக்கை நோக்கியதாகவே, தான் வருவதாகச் சொல்லும் ரமழான் சரியான எதிர்பார்ப்புடன் நோன்பு நோற்றால் பாவங்களை விட்டும் காப்பாற்றுவதாக கூறுகின்றது.

2. நோன்பு ஒரு கேடயம்.

யுத்த களத்தில் உள்ள வீரனுக்கு தன்னைக் காத்துக்கொள்ள கேடயம் எவ்வளவு முக்கியமானதோ அதே போன்று நோன்பானது ஷைத்தானிய்யத்தான குணங்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும் பாதுகாக்க வல்லது. ஏனைய காலங்களில் தீய செயல்களை நோக்கி வேகமாகப் பாயும் மனிதன் தான் நோன்பாளி என்று எண்ணி பின்வாங்கி விடுகின்றான். தனது கரங்களால் ஏதும் அநியாயம் செய்யத் தோன்றினாலும், நாவினால் நயமாக பேசிட முனைந்தாலும் நோன்பு எனும் கேடயம் தடுத்து விடுகின்றது. தற்பாதுகாப்பு எனும் பயிற்சி அதிகமாகக் கிடைக்கப் பெறுகின்றது.

3. பாவங்களுக்கு பிரியாவிடை.

அழ்ழாஹ்வின் பேரருளால் விரும்பியோ, விரும்பாமலோ பல பாவங்களிலிருந்து நோன்பாளி பாதுகாக்கப்படுகின்றான். இரத்த நாளமெல்லாம் ஊடுருவும் ஷைத்தானிடமிருந்தே தப்பிக் கொள்கின்றான். தான் நோற்றிருக்கும் நோன்பினால் நோன்பாளி அடையும் பயன்கள் அளப்பெரியவை. நாவடக்கமும், உறுப்புக்கள் மீதான கட்டுப்பாடும் நோன்பினால் அடையும் மிக உன்னத அடைவுகளாகும்.

சிரமத்தோடு நோற்கும் நோன்பினை பாழாக்க விரும்பாத நோன்பாளி எப்படியும் அதனைப் பேணிக் காக்கவே முயற்சிப்பான். ஏனெனில், அவ்வாறு பேணப்படாத நோன்பினைப் பற்றி அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

‘யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும், பானத்தையும் விட்டு விடுவதில் அழ்ழாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1903)

4. ‘களா’ நோன்புகளை என்ன செய்வது?

சில சகோதரிகள் அடுத்த மாதம் ரமழான் வந்து விடப்போகின்றது. நான் இன்னும் கடந்த வருட ‘களா’ நோன்புகளையே நோற்று முடிக்கவில்லை. ஐந்து நோன்புகள், ஏழு நோன்புகள் மிகுதியாயிருக்கின்றது. ‘களா’ நோன்புகளை நோற்பதற்கு இருக்கின்ற கால அவகாசம் போதாது போலிருக்கின்றதே என ஆதங்கப்படுகின்றனர். அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழி இது தொடர்பில் நமக்கு ஆறுதல் அளிக்கின்றது.

‘எனக்கு ரமழானில் சில நோன்புகள் விடுபட்டுவிடும். அதை ஷஅபான் மாதத்தில் தவிர வேறெப்போதும் என்னால் நிறைவேற்ற முடியாது என ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்.’ (நூல்: ஸஹீஹுல் புஹாரி-1950)

5.அல்குர்ஆனைக் கற்க தயாராகுவோம்.

ரமழான் என்ற வார்த்தையை உபயோகிக்கும் திருமறைக்குர்ஆன், அல்குர்ஆன் இறக்கியருளப் பட்டதையும் இணைத்தே பேசுகின்றது. ஒரு எழுத்திற்கு பத்து நன்மை என்று அருள்மறைக் குர்ஆன் கூறினாலும் அல்குர்ஆனை, விளங்குவதும் கற்பதுமே அதன் எதிர்பார்ப்பாக உள்ளது.

கடந்த காலங்களில் நான்கைந்து தடவைகள் அல்குர்ஆனை ஓதி முடித்துள்ளேன் என்று கூறக்கூடிய சகோதரிகள் ஒரு படி மேலே சென்று இம்முறையாவது அல்குர்ஆனை விளங்க முன்வருவார்களா? அந்த வகையில் திருமறைக்குர்ஆனை விளங்குவதற்கு இலகுவாக எளிய நடையில் எழுதப்பட்ட, முக்கிய தகவல்கள் குறிப்புக் களை கொண்ட அல்குர்ஆன் மொழிபெயர்ப்புக்களைத் தெரிவு செய்து அவற்றில் வகுக்கப்பட்டவாறு ஈமான், நபிமார்கள் வரலாறு, சுவர்க்கம், நரகம் மற்றும் சட்டங்கள் என நாம் ஒவ்வொருவரும் விளங்க முன்வர வேண்டும்.

6. சினிமாவும், சீரியலும்.

சீரியல்கள் (நாடகத் தொடர்கள்) இல்லாமல் அன்றாட நடவடிக்கைகளே நகராது என்று தமது வாழ்நாளைக் கடத்துகின்ற பல சகோதரிகள் பெரும்பாலும் இம்மாதத்தில் சீரியல்களுக்கு விடைகொடுக்கின்றனர். என்றாலும், சில சகோதரிகளோ நோன்பு திறந்து, உணவு பரிமாறல் போன்ற பணிகளை நிறைவு செய்தவுடன் மீண்டும் ஷைத்தானிய நாடகத் தொடர்களில் கவனம் செலுத்துகின்றனர்.

இது ரமழானில் நமது பயனுள்ள நிகழ்ச்சி நிரல்களில் நிச்சயமாக தொய்வை ஏற்படுத்தும். மாறாக, ஒலி, ஒளி நாடாக்களை (ஊனு) பயன்படுத்த வாய்ப்புள்ள பெண்கள் அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளை பிரச்சாரம் செய்யும் பல்வேறு உரைகளை கேட்டுத் தெளிவு பெறலாம்.

7. இரவு வணக்கங்கள்.

முஃமின்களுக்கு அழ்ழாஹ் வழங்கியுள்ள மிக உயர்ந்த அருள்தான் இரவுகால வணக்க வழிபாடுகள். நோன்பு திறந்து உண்டு, பருகி சற்று ஓய்வெடுத்தவுடன் இறைவனை நின்று வணங்குவதை நினைக்கையில் ஒரு புதுத்தெம்பு ஏற்படாமல் இல்லை. எனது இறைவன் கடந்த வருடம் போன்று இவ்வருடமும் என்னை உயிரோடு வாழவைத்து , உடல் ஆரோக்கியத்தையும் தந்து நின்று வணங்குவதற்கும் வாய்ப்பை அளித்துள் ளானே என்பதை நினைக்கையில் உள்ளார்ந்த பூரிப்பு ஏற்படவே செய்கின்றது.

அழ்ழாஹ்வின் மேல் விசுவாசம் அதிகரித்து ஆசையுடன் (முஸல்லா) தொழுமிடம் நோக்கி விரைகின்றோம் பல அவாக்களை நெஞ்சில் சுமந்தவர்களாய். அழ்ழாஹ்வின் அருளும், பாவமன்னிப்பும் எனக்கு கிடைக்குமா? எனது நோன்பு அங்கீகரிக்கப்படுமா? நான் அழ்ழாஹ்வின் பொருத்தம் கிடைத்த நிலையில் மரணிப்பேனா? இவைகள் ஒரு விசுவாசியின் இலக்கும் கூட. இவற்றையெல்லாம் அழகுற பின்வரும் நபிமொழி விளக்கி நிற்கின்றது.

‘யார் ரமழானில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறாரோ அவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2008)

இவ் இரவு வணக்கத்தில் ஆண்களை விட அதிகளவில் பெண்களே ஆர்வம் காட்டுகின்றனர். ஆனாலும், அதை முறையாகச் செய்யத்தவறிவிடு கின்றனர். நமது சமுதாயத்தில் நான்கு வீடுகளுக்கொரு இடத்தில் தொழுவிக்க வேண்டுமென்பதற்காக நபிவழிகள் பலவற்றையும் கவனத்திற் கொள்வதில்லை. குறிப்பாக வீடுகளில் தொழும்போது ஏனைய காலங்களைப் போன்று இவ்வணக்கத்தை பல்வேறு பித்அத்களுடன் ஆரம்பிக்கின்றனர்.

8. மடமைகளை மறப்போம்.

ரமழானை உயிர்ப்பிக்க வேண்டுமென்று விரும்புகின்ற பல சகோதரிகள் நூதன அனுஷ்டானங்கள் (பித்அத்கள்) எனும் மடமைகளை கண்டு கொள்வதே இல்லை. தமது மஹல்லாப் பள்ளிவாயலில் நடை பெறுவது போன்று நாங்களும் செய்ய வேண்டும்.

எமது மூதாதையர்கள் இம்மகத்துவமிக்க மாதத்தில் செய்தவற்றையெல்லாம் நாம் விட்டுவிடுவதா? என்பது போன்ற அறியாமை வாதங்களை கூறி ரமழானின் மகிமைகளை கைநழுவவிடாது, அறிவார்ந்த ரீதியாக சிந்திக்க வேண்டும். அந்த வகையில் ரமழானில் அரங்கேற்றப்படும் சில பித்அத்கள்:

1. நிய்யத்தை வாயினால் மொழிதல்.
2. 15ம் கிழமை என்றும் 27ம் கிழமை என்றும் குறித்த சில தினங்களை விஷேடமாகக் கருதி வணக்க வழிபாடுகளில் ஈடுபடல்.
3. வெள்ளிக்கிழமை இரவுகளில் சப்தமிட்டு கூட்டாக திக்ர் செய்தல்.
4. பள்ளிவாயல் இமாம் தௌபா சொல்லிக் கொடுக்க மஃமூம்கள் கிளிப்பிள்ளை போன்று ஒப்புவித்தல்.
5. ஸலவாத் மாலை படித்தல்.
6. விஷேட தினங்களில் தஸ்பீஹ் தொழுகை.
7. ஸஹர் செய்வதை முற்படுத்துவதும், நோன்பு திறப்பதை பிற்படுத்துவதும்.
8. நோன்பு என்றால் ஓய்வு என்ற எண்ணத்தில் அல்லது தூக்கத்தில் கழித்தல்.

9. ஸலவாத், திக்ர்.

நமது சகோதரிகள் எவ்வாறு நேரத்தைக் கழிப்பதென்று தெரியாமல் ழுஹர் வேளையிலோ அல்லது நோன்பு திறக்க முன்னரோ அண்டை வீட்டாருடன் அரட்டை அடித்து, அழுக்குகளையெல்லாம் பேசிவிடுகின்றனர்.

பேசுவதற்கு ஒன்றுமில்லாத போது, பெருநாள் உடுப்புக்கள் என்றும் ஸஹர் உணவு என்றும் எதையாவது பேச்சுக்கு எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், மலை போன்று நன்மைகளைக் குவித்துவிடும் எவ்வளவோ திக்ருகளும், துஆக்களும் ஆதாரபூர்வமான நபிமொழிகளில் இடம்பெற்றிருந்த போதிலும் அவற்றை தெரிந்து கொள்வதில் நாம் கரிசனை செலுத்து வதில்லை. மாறாக, அவற்றைத் தெரிந்து அதன் மகிமை களைப் புரிந்து கொண்டால் நிச்சயமாக ரமழான் பகல் காலங்களில் இருந்து கொண்டும், சாய்ந்து கொண்டும் திக்ர்களை சொல்லாமல் விடமாட்டோம். அவற்றுள் சில:

R1லாயிலாஹ இல்லல்லாஹுவஹ்தஹு, லா ஷரிக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர்

(வணக்கத்திற்குரியவன் அழ்ழாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வலிமையுள்ளவன்)

என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்கின்றாரோ அவருக்கு அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமாமா(க நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும்.
மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரது கணக்கிலிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். மேலும், அந்த நாளின் மாலை நேரம் வரும்வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். மேலும் அவர் புரிந்த இந்த நற் செயலைவிடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது. ஒருவர் இதைவிட அதிகமான (தடவைகள் இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர! என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-6403)

R2
‘அழ்ழாஹும்ம அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கலக்த்தனீ வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க. வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின்ஷர்ரி மா ஸனஅத்து. அபூஉ லக்க பி நிஅமத்திக்க அலய்ய. வ அபூஉ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த’

என்று ஒருவர் கூறுவதே தலை சிறந்த பாவ மன்னிப்பு கோரலாகும்.

(அழ்ழாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன். ஆகவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.)

யார் இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறந்து விடுகின்றாரோ அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். யார் இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகின்றாரோ அவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.’ (அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரழி) , நூல்: ஸஹீஹுல் புஹாரி-6306)

R3

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது:

‘லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமா வாத்தி வல்அர்ளி வ ரப்புல் அர்ஷில் அழீம்’ என்று பிரார்த்திப்பார்கள்.

(கண்ணியம் வாய்ந்தோனும் பொறுமை மிக்கோனுமாகிய அழ்ழாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் மாபெரும் அரியாசனத்தின் அதிபதியுமான அழ்ழாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.) (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-6345)

R4
‘சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி’

(அழ்ழாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன்)

என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவருடைய தவறுகள் அழிக்கப்பட்டு விடுகின்றன.அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.)(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-6405)

R5

இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை யாகும். அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவையுமாகும். (அவை:) ‘சுப்ஹானழ்ழா ஹில் அழீம். சுப்ஹானழ்ழாஹி வபி ஹம்திஹி’

(கண்ணியமிக்க அழ்ழாஹ்வைத் துதிக்கின்றேன். அவனைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கின்றேன்) என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.) (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-6406)

R6

‘(நாங்கள் கைபர் பயணத்தில் இருந்தபோது) நபி (ஸல்) அவர்கள் ஒரு குன்றில் அல்லது மேட்டில் ஏறலானார்கள். அதன் மீது ஏறியபோது ஒரு மனிதர் உரத்த குரலில் லாயிலாஹ இல்லழ்ழாஹு வழ்ழாஹு அக்பர் (வணக்கத்திற்குரியவன் அழ்ழாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அழ்ழாஹ் மிகப் பெரியவன்) என்று முழங்கினார். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது கோவேறு கழுதையில் இருந்தபடி (மெதுவாகக் கூறுங்கள்) ஏனெனில், நீங்கள் காது கேளாதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை என்று கூறினார்கள்.

பிறகு அபூமூசா! அல்லது அப்துழ்ழாஹ்! (என்று என்னைக் கூப்பிட்டு) சொர்க்கத்தின் கருவூலமான ஒரு வார்த்தையை உமக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? என்று கேட்டார்கள். நான், ஆம் (அறிவித்துத் தாருங்கள்) என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், (அந்த வார்த்தை) ‘லாஹவ்ல வலா குவ்வத்த இல்லாபிழ்ழாஹ்

(அழ்ழாஹ்வின் உதவியின்றி பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ நல்லறங்கள் புரிய வலிமை பெறவோ மனிதனால் இயலாது) என்று சொன்னார்கள்.’(அறிவிப்பவர்: அபூமூசா அப்திழ்ழாஹ் பின் கைஸ் அல்அஷ்அரி (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-6409)

R7

நபி (ஸல்) அவர்கள், ‘ரப்பனா ஆத்தினா ஃபித் துன்யா ஹஸனத்தன் வ ஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வக்கினா அதாபந் நார்’ என்றே அதிகமாகப் பிரார்த்தித்து வந்தார்கள்.

(எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் நன்மை அருள்வாயாக! மறுமையிலும் நன்மை அருள்வாயாக நகரத்தின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!) (அறிவிப்பவர்: அனஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-6389)

R8

நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்திப்ப வர்களாய் இருந்தார்கள்.

அழ்ழாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஃபித்னத்திந் நாரி, வ அதாபிந் நாரி, வ ஃபித்னத்தில் கப்றி, வ அதாபில் கப்றி, வ ஷர்ரி ஃபித்னத்தில் ஃகினா. வ ஷர்ரி ஃபித்னத்தில் ஃபக்ர். அழ்ழாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஷர்ரி ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால். அழ்ழாஹும்மஃக்ஸில் கல்பீ பி மாயிஸ் ஸல்ஜி வல்பரத் வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமா நக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸ். வ பா இத் பைனீ வ பைன கத்தாயாய கமா பா அத்த பைனல் மஷ்ரிக்கி வல்மஃக்ரிப். அழ்ழாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் கஸலி, வல்மஃஸமி. வல்மஃக்ரம்.

(இறைவா! உன்னிடம் நான் நகரத்தின் சோதனையிலிருந்தும். நரகத்தின் வேதனையிலிருந்தும். மண்ணறையின் சோதனையிலிருந்தும், மண்ணறையின் வேதனையிலிருந்தும். செல்வச் சோதனையின் தீமையிலிருந்தும், வறுமைச் சோதனையின் தீமையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! உன்னிடம் நான் (மகா பொய்யன்) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.

இறைவா! பனிக்கட்டியின் நீராலும், ஆலங்கட்டியின் நீராலும் என் உள்ளத்தைக் கழுவிடுவாயாக! அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப் படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தை நீ தூய்மைப்படுத்துவாயாக! மேலும், கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்கும் இடையே நீ இடைவெளியை ஏற்படுத்து வாயாக! இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும், பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.) (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-6377)

R9

அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அழ்ழாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி, வல்கஸலி, வல்ஜுப்னி, வல்ஹரம். வஅஊது பிக்க மின் அதாபில் கப்ர். வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத் என்று பிரார்த்தித்து வந்தார்கள்’

(இறைவா! இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும் கோழைத்தனத்திலிருந்தும், தள்ளாமையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இன்னும் வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.) (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-6377)

அதே போன்றுதான் எம்மீது பாசமும், அன்பும் கொண்ட அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்லும் அமல் விடயத்தில் எமது சமூகத்தில் ஒரு சாரார், ஷிர்க்குகளும், பித்அத்களும், கட்டுக் கதைகளும் நிறைந்த ஸலவாத் பாடல்களை பாடி தமது அமல்களை இழந்து கொண்டிருக்க, மற்றுமொரு சாராரோ, அவைகளெல்லாம் பாவமானவை என்று கூறுவதோடு நின்று விடுகின்றனர். ஆனால், ஸலவாத் மூலம் இம்மையிலும், மறுமையிலும் அளப்பெரிய நன்மைகள் கிடைக்கப்பெறும் என்பதை மறந்து விடுகின்றனர்.

11. கொடை வழங்கள்.

நமது சமூகத்தில் நோன்பு வந்தும் சரியாக சஹருக்கோ, நோன்பு திறக்கவோ சாதாரண உணவு கூட கிடைக்காமல் கடனில் திண்டாடுவோரும் இல்லாமல் இல்லை. பலர் தமது கஷ்டங்களை வெளியில் சொல்லாததால் நமக்கும் அவர்களது நிலை புரிவதில்லை.

பகல் முழுவதும் பசியுடன் இருக்கப் போகின்றோம் என்றெண்ணி எமக்கும், எமது குடும்பத்தினருக்கும் போதிய போஷாக்கும் சக்தியும் வேண்டுமென்பதற்காக எவ்வளவோ சிரத்தை எடுத்துக் கொள்கின்றோம். நமது பிள்ளைகள் சரியாக ஸஹர் உணவு உண்ணவில்லை என்பதற்காக மிகவும் கவலைப்படுகின்றோம். ஆனால், அதே பசி, தாகம்தான் நமது பகுதிகளில் உள்ள உறவுகளுக்கும் உண்டு என்பதை மறந்து விடுகின்றோம். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ இதற்கு முற்றிலும் மாற்றமாக நடந்துள்ளார்கள்.

‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமழானில் தம்மைச் சந்திக்கின்ற வேளையில் நபியவர்கள் இன்னும் அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமழானின் ஒவ்வொரு இரவிலும் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது (அதுவரை அருளப்பெற்ற) குர்ஆனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நினைவுபடுத்துவார்கள். அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் மழைக்காற்றைவிட அதிகமாக நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-06)

எனவே, புனித மிகு ரமழானில் மூடநம்பிக்கைகளில் இருந்து முழுமையாக விடுபட்டு, அழ்ழாஹ்வும், அவனது தூதரும் காட்டிய வழிமுறையில் நமது வணக்கங்களை அமைத்துக் கொள்வதற்கு அழ்ழாஹ் அருள்புரிவானாக!

தேங்க்ஸ் :- தாருல் அதர் அத்தஅவிய்யா
http://dharulathar.com/

No comments:

Post a Comment