இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Aug 1, 2010

வாழ்வடக்கம் தரும் ரமழான்

வாழ்வடக்கம் தரும் ரமழான்

ஷாபி அதரி

shafialathary@yahoo.com


‘ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.’ (அல்குர்ஆன்: 51:56)

ஈமானை சலவை செய்து புதுப்பொழிவுடன் இதயத்தை இறைவன் பால் ஸ்திரப்படுத்த வரும் ரமழானை இன்முகத்துடன் வரவேற்கக்காத்திருக்கும் கபடமற்ற இறை உள்ளங்களே! இன்னும் சில நாட்களில் அம்மாதம் எம்மை அரவணைக்கும். அழ்ஹம்துலிழ்ழாஹ்.

ஆம், அம்மாதத்தில் எம் வணக்க வழிபாடுகள், சமூக பரஸ்பர தொடர்பாடல்கள் எவ்வாறு அமையவேண்டும் என்று இன்றே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். வாழ்வியல் வழிகாட்டி அல்குர்ஆன், சத்தியத்தையும் அசத்தியத்தையும் தெளிவுபடுத்தி நேர் வழிகாட்ட வந்த மாதமல்லவா? ரமழான். இதைப்பற்றி வல்லவன் அழ்ழாஹ் இவ்வாறு பிரஸ்தாபிக்கின்றான்.

‘இந்தக் குர்ஆன் ரமழான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.’ (அல்குர்ஆன் 02:185)

பரவசத்தோடு பலராலும் எதிர்பார்க்கப்படும் இந்த ரமழானில் அல்குர்ஆனை படித்து, உணர்ந்து நீங்கள் சிந்திக்கக் கூடாதா? அது வாழ்வின் வசந்தத்தை தேடித்தரும் வழியல்லவா? அந்த வசந்தத்தை, அந்த இன்பகரமான வாழ்கையை அனுபவிக்க தயாராகமல் இன்னுமா உங்கள் உள்ளங்களுக்கு பூட்டுப்போட்டுள்ளீர்கள்? இதனால்தான் அழ்ழாஹ் இவ்வாறு வினா எழுப்புகின்றான்.

‘அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?’ (அல்குர்ஆன் 47:24)

எனவே, அருள் மறைக்குரிய மாதத்தில் அதன் வழி நடக்கத் தயாராகுங்கள். தூதர் வழி நடக்க முன்வாருங்கள்.

அன்புக்குரிய சகோதரர்களே! குறிப்பாக பெண் சகோதரிகளே! தாய்மார்களே!

வீட்டின்முன் வீதியோரங்களில் நின்று வீணானவற்றைப் பார்த்து விலைமதிப்பற்ற அந்த சுவனத்தை வீணாக்கவா விளைகின்றீர்கள்? படைத்தவன் பகர்கின்றான் கேளுங்கள்.

‘தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்.

தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர் தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள் பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.

அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அழ்ழாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.’ (அல்குர்ஆன் 24:31)

இந்த அற்பமான உலக ஆசைகள் எம்மிடம் வந்துவிடக்கூடாது. புனிதமிகு நோன்பை உலக மோகத்தை இல்லாதொழிக்கும் பயிற்சிப் பாசறையாகவும், இறைவனை நெருங்கும் பாதையாகவும் அமைத்துக் கொள்ளவேண்டும்.

அழ்ழாஹ் பின்வருமாறு உலகத்தைப் பற்றி கூறுகின்றான்.

‘இவ்வுலக வாழ்க்கை வீணும், விளையாட்டும் தவிர வேறில்லை. மறுமை வாழ்வுதான் வாழ்வாகும். அவர்கள் அறியக் கூடாதா?’ (அல்குர்ஆன்: 29:64)

இஸ்லாமிய நெஞ்சங்களே! புறப்படுங்கள் பிர்தவ்ஸை நோக்கி ! படியுங்கள் வான்மறைக்குர்ஆனை. தாழ்த்துங்கள் உங்கள் பார்வைகளை. வேண்டாம் வேண்டாம் இனியும் வீதியோரங்கள். வீணடிக்கும் ஷைத்தனியப் பார்வைகள். கழுவுங்கள் உள்ளத்தின் கறைகளை உங்கள் நோன்பினால். அதற்குத்தானே வந்தது நோன்பு. அழ்ழாஹ் அருளுகின்றான்.

‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.’ (அல்குர்ஆன்: 2:183)

எனவே, நோன்பு என்பது பெருமை, பொறாமை, கசடு, வஞ்சகம், வழிகேடு, வாக்குமீறல் போன்ற கறைகளைக் களைந்து நாம் இறையச்சம் உள்ளவர்களாக மாறுவதற்குத்தான் கடமையாக்கப் பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். சிந்தியுங்கள். சிந்தித்தால் தெளிவுபெறுவீர்கள். நினையுங்கள் இறைநாமத்தை. நிம்மதி பெரும் உங்கள் உள்ளங்கள். அழ்ழாஹ் கற்றுத்தருகின்றான்.

‘நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அழ்ழாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அழ்ழாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.’ (அல்குர்ஆன் 13:28)

இறையடியார்களே! உள அமைதியை அழித்தொழிக்க வைக்கும் அசிங்கமான, அர்த்தமற்ற, அபாண்டமான பேச்சுக்களை விட்டொழியுங்கள். பெருமானார் பகர்ந்தளித்ததை தோழர் அபூஹுரைரா (ரழி) அறிவிக்கும் இமாம் புஹாரி பதிவாக்கியிருக்கும் (1904) நபிமொழியை கவனத்தோடு படியுங்கள்.

‘உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் நான் நோன்பாளி என்று அவர் சொல்லட்டும்.’

நோன்பு எப்படிப்பட்ட வாழ்வடக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என கவனித்தீர்களா? தன்னிடம் ஒருவன் சண்டைக்கு வந்தாலும் தான் நோன்பாளி என்று ஒதுங்கிக் கொள்ள வேண்டும். மீண்டும் பெருமானார் இரத்தினச் சுருக்கமாகக் கூறுகின்ற பொன் மொழியை உங்கள் உளக்கண் முன் கொண்டு வாருங்கள்.

‘யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அழ்ழாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1903)

ஓர் இறை விசுவாசி நோன்பு காலத்தில்; தன்னை எவ்வாறு மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கு மாண்புமிகு நபியே முன்னுதாரணம். அழ்ழாஹ் எம்மை பார்த்து உபதேசிக்கின்றான்.

‘அழ்ழாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அழ்ழாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அழ்ழாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.’(அல்குர்ஆன் 33:21)

மாண்புமிகு நபியைப்பற்றி இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

‘நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) ரமழான் மாதத்தில் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி (ஸல்) அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள்.

ஜிப்ரீல் (அலை) ரமழானின் ஒவ்வோர் இரவும் ரமழான் முடியும்வரை நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மைச் சந்திக்கும்போது காற்றைவிட அதிகமாக நபி (ஸல்) வாரி வழங்குவார்கள்.’ (நூல்: ஸஹீஹுல் புஹாரி-1902)

அன்பிற்கினியவர்களே!

எமது வாழ்கைக்குத் தேவையான பொருளாதாரமும் தூய்மையடைய வேண்டும். எம்முள்ளமும் தூய்மைடைய வேண்டும். அந்தப்பக்குத்தையும் ரமழான் ஏற்படுத்த முனைகின்றது. வஹி வரும்போதெல்லாம் உள்ளத்தையும், பொருளாதாரத்தையும் தூய்மைப்படுத்த அழ்ழாஹ்வின் தூதரே வாரி வழங்கியுள்ளார்கள் என்றால் நாம் எந்த அளவு வஹிக்குரிய மாதத்தில் எம் உள்ளத்தையும் பொருளாதாரத்தையும் சுத்தப்படுத்த எம்மைப் பக்குவப்படுத்த வேண்டும்.

இறைவிசுவாசிகளே! அழ்ழாஹ்வை வணங்கும் விடயத்திலும் பெருமானார் (ஸல்) அவர்களை கவனியுங்கள். அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

‘(ரமழானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால், தானும் இரவை உயிர்ப்பித்து, தனது குடும்பத்தை விழிப்பூட்டி, தனது வேஷ்டியையும் (அழ்ழாஹ்வை வணங்குவதற்காக) இறுக்கமாக கட்டிக்கொள்ளுவார்கள்.’ (ஸஹீஹுல் புஹாரி-2024)

பாவக்கறைகள் அகற்றப்பட்ட நபியே தன்னை இறைவன்பால் இணைத்துக் கொள்ள ரமழானைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்றால் நாங்கள் எங்ஙனம்? எமது வணக்க வழிபாடுகள் எப்படி அமைய வேண்டும்? ரமழான் என்பது ஒரு முஃமினைப் பொறுத்தவரையில் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் பக்குவத்தை ஏற்படுத்த வேண்டும். மொத்தத்தில் நோன்பு வாழ்வடக்கத்ததை ஏற்படுத்த வல்லவன் அழ்ழாஹ்வால் வழங்கப்பட்ட, அவனே கூலியை நிர்ணயிக்கும் நிகரற்ற வணக்கமாகும். வாழ்வடக்கத்தை ஏன் ஏற்படுத்த வேண்டுமென்றால், முஃமினுடைய அனைத்து செயற் பாடும் வணக்கமாகும். இதனை அழ்ழாஹ் இவ்வாறு அருளுகின்றான்.

‘ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.’ (அல்குர்ஆன் 51:56)

எனவே, தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற பிரதான வணக்கங்களோடு மட்டும் சுருக்கிக் கொள்ளமல், தூக்கம், விழிப்பு உட்பட இவையிரண்டிற்குமிடையில் செய்யக்கூடிய அனைத்து செயற்பாடுகளும் இபாதத் என்பதை ஆழ்மனதில் பதித்து அனைத்திலும் அழ்ழாஹ்வும் அவன் தூதரும் காட்டியபடி கட்டுப்பட்டு வாழ்வடக்கத்தை பெறக்கூடிய ஒரு களமாக இந்த ரமழானை அமைத்துக் கொள்வோமாக!

தேங்க்ஸ் :- தாருல் அதர் அத்தஅவிய்யா
www.dharulathar.com

No comments:

Post a Comment