இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Aug 8, 2010

முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் படித்து செயல்பட வேண்டிய நபிமொழி:

நீங்கள் யூத, கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான், அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி: 7319, 3456)

(சந்தனக்கூடு, கொடிமரம், சமாதி வழிபாடு, அவ்லியாக்களுக்கு நேர்ச்சை, கப்ரை உயர்த்திக் கட்டுதல், தஸ்பீஹ் மணி, மவ்லூது பாடல்கள், இசைக்கச்சேரிகள், உரூஸ் உண்டியல், யானை குதிரை ஊர்வலங்கள், இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள், வட்டி வாங்குதல், வரதட்சணை பிடுங்குதல், ஜோதிட நம்பிக்கை, திருமணத்தில் பெண்ணுக்கு தாலி கட்டுதல் மற்றும் வாழைமரம் நடுதல், பிறந்த நாள் விழா எடுப்பது, ஆண்கள் தங்கம் அணிவது இது போன்ற பழக்கவழக்கங்களை மாற்று மதத்தவரிடமிருந்து முஸ்லிம்கள் அப்படியே காப்பியடித்து பின்பற்றுவதை நடைமுறையில் கண்டு வருகிறோம்.)

எனவே சகோதர சகோதரிகளே! நாம் செய்ய வேண்டியது என்ன?

மரணவேளை எப்போது நிகழும் என்று எந்த மனிதனும் அறிய முடியாது. அவ்வேளை நெருங்கி வரும் முன் நாம் நமது அமல்களைப் பெருக்கிக் கொள்வோம். ”இஸ்லாம்” இறைவனின் மார்க்கம்தான் என்று சந்தேகமற நம்பவேண்டும். இறைவன் ஒன்றைக் கட்டளையிட்டு விட்டால், இந்த உலகமே எதிர்த்து நின்றாலும் இறைவன் சொன்ன கட்டளைக்கு மாறு செய்யாமல் உறுதியாக நிலைத்து நிற்க வேண்டும். நமது ஈமான் (நம்பிக்கை) அதிகமாக வேண்டும்.

விபச்சாரம் போன்ற மானக்கேடான செயல்களிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ளவேண்டும்.

நேர்வட்டி, ஏலச்சீட்டு, பிக்சட் டெபாசிட், எல்.ஐ.சி போன்ற அனைத்து வகை ஹராமான வட்டிகளைவிட்டும் முற்றிலும் ஒதுங்க வேண்டும்.

மது, சூதாட்டம், போதைப் பொருட்கள் போன்ற இறைவன் விரும்பாத அனைத்து செயல்களைவிட்டும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

ஏமாற்றுதல், அளவு நிலவையில் மோசடி செய்தல், அமானித மோசடி, வாக்கு மாறுதல், பொய் பேசுதல் போன்ற இழிசெயல்கள் நம்மைவிட்டு ஓடிவிட வேண்டும்.

அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசுவது, இங்கொன்றும் அங்கொன்றுமாக பேசுவது, பொறாமைப்படுதல், அவதூறு கூறுவது, குடும்ப சண்டைகள் போன்ற நாகரிகமற்ற செயல்களை விட்டும் நாம் விடுபட வேண்டும்.

இறைவனின் கட்டளைக்கு மாறான, அற்பச் செயலும், சமூகக் கொடுமையும், அக்கிரமமும், அநியாயமும், அநாகரிகமுமான வரதட்சணை போன்ற பாவங்களிலிருந்து நாமும் விலகி, நம் சமூகத்தையும் விலக்க வேண்டும். இவ்வரதட்சணைக் கொடுமைக்கு துணைபோகிறவர்கள், இக்கொடுமையை இழைப்பவர்கள், இதற்கு ஆதரவளிப்பவர்கள் அனைவரும் இறைவனின் முன்னிலையில் தண்டனைக்குரியவர்கள் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

எல்லாவற்றையும் விட மிகப்பெரிய அநியாயமும், அக்கிரமுமான இறைவன் மன்னிக்காத, இறைவன் விரும்பாத சமாதி வழிபாடு, பெரியேர்களுக்கு நேர்ச்சை செய்வது, ஜோசியம் பார்ப்பது, ஜாதகம் பார்ப்பது, நல்லநேரம் என நம்புவது, செய்வினைகளை நம்புவது, குத்பியத் மவ்லிது போன்ற இணை வைத்தல்கள் (ஷிர்க்) என்னும் மகா பாவங்களிலிருந்தும், மூட பழக்க வழக்கங்களிலிருந்தும் நம்மை நாம் காத்துக் கொண்டு இந்த மாய உலகத்தில், நாம் எதற்காக படைக்கப் பட்டிருக்கின்றோம்? நமது இலட்சியம் என்ன? என்று நம்மை நாமே உணர்ந்து செயல்படுவோமாக!

இன்று இஸ்லாத்தின் எதிரிகளால்; ”இஸ்லாமிய பயங்கரவாதம்” என்ற விஷப் பிரச்சாரம் உலக அளவில் முழுவீச்சில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இக்காலச் சூழ்நிலையின் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, திருக்குர்ஆனை அதன் மொழியாக்கத்தோடு நாம் படித்து, சிந்தித்து, அவைகளை நாம் பின்பற்றி நடப்பது மட்டுமல்லாது மாற்று மத நண்பர்களுக்கும் எடுத்துரைத்து, பிற சமூகமக்களுக்கும் திருக்குர்ஆனை படிக்கக் கொடுத்து ”இஸ்லாம் தீவிரவாதத்தைத் தூண்டும் மார்க்கமல்ல, மாறாக சாந்தி சமாதானத்தை போதிக்கும் மார்க்கம்” என்பதை எடுத்துக் கூறும் முக்கியக் கடமைகளும் நம்மீதுள்ளது என்பதையும் புரிந்து நடப்போமாக!

நமது வாழ்க்கை நெறி திருக்குர்ஆனாக இருக்கட்டும்!

நமது வழிமுறை இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் அடிச்சுவடாகவே அமையட்டும்!!

இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை. மறுமை வாழ்வுதான் உண்மையான வாழ்வாகும். அவர்கள் (மனிதர்கள்) அறியக்கூடாதா? (திருக்குர்ஆன் 29:64)

நேரம் நெருங்கி விட்டது (திருக்குர்ஆன் 54:1)

மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது. ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள். (திருக்குர்ஆன் 21:1)



இறைவா!

என் நிலையையும்
நினைப்பையும் சமப்படுத்துவாயாக.
நீ நாடியிருந்தால்
நிலையை உயர்த்து.
ஒரு போதும்
நினைப்பை உயர்த்தி விடாதே!

இவண்
M.முஹம்மது இஸ்மாயில்

No comments:

Post a Comment